12 Mar 2025

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை!

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை அனுபவம்!

“கவிதை எழுதி நீண்ட நாளாயிற்றே?” என்றார் நண்பர்.

காற்றில் பறந்த காகிதம் ஒன்றைக் கப்பெனப் பிடித்து பையில் இருந்த இரண்டு ரூபாய் ஒரு முறை உபயோகித்துத் தூக்கி எறியும் (யூஸ் அன்ட் த்ரோ) பேனாவை எடுத்து ‘கவிதை’ என்று எழுதிக் கொடுத்தேன்.

நண்பர் மெய்சிலிர்த்துப் போனார்.

சமீப காலங்களில் நான் எழுதிய கவிதைகளில் மிகச் சிறந்த கவிதை இதுவென்றார்.

“அப்படியா!” என்றேன் நான்.

“ஆம் கவிஞரே! இந்தக் கவிதையில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்திருக்கிறது.” என்றார்.

“இதென்ன புதுகரடி? காட்டில் இருப்பதெல்லாம் கவிதையைப் புகழ்வதில் களம் இறங்கி விட்டதே?”

“இந்தக் கவிதை என்ற சொல் வாசகர்களிடம் உங்களுக்கான கவிதையை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். ஒரு கவிஞனை வேலை வாங்கி எழுத வைக்காதீர்கள் என்கிறது. மேலும் நீங்கள் கவிதை எழுதச் சொல்லும் கவிஞனுக்கு நாள் சம்பளமோ, வாரச் சம்பளமோ, மாதச் சம்பளமோ எதுவும் போட்டுக் கொடுப்பதில்லை என்பதை வலியுறுத்துகிறது.” என்றார்.

“அட என்ன ஆச்சரியம்!”

“கவிதையில் மட்டும் காந்தியக் கொள்கையைப் பின்பற்றியிருந்தால் நம் நாடு எப்பவோ முன்னேறியிருக்கும்.” என்றார் நண்பர்.

“அடடா! இதைக் கேட்கும் போது இன்பத்தேன் வந்து மூக்கிலே அல்லவா பாய்கிறது. பொறை ஏறுகிறது பாருங்கள்!”

“காந்தி என்ன சொன்னார்? தற்சார்பு வாழ்வு குறித்துச் சொன்னார். எந்தக் கவிஞன் இதைப் பின்பற்றினான்? எல்லாருக்கும் சேர்த்து தானே கவிதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு கவிதை எழுதினான். இதனால் பலர் சோம்பேறியானார்கள். பலரது உழைப்பில் கவிதைகள் பெருகிப் பல்க வேண்டியிருந்த நிலையில், முதலாளித்துவ இயந்திர முறையில் சிக்கி, ஒரு சில கவிஞர்களின் கைப்பாவையாகவே கவிதை இருந்து விட்டது.

“அதிலும் கம்பர் பத்தாயிரத்தைக் கடந்திருக்கிறார். ஹைக்கூ கவிஞர்கள் சொல்லி மாளாத அளவுக்கு எழுதி தள்ளியிருக்கிறார்கள்.

“நீங்கள் நல்லவேளையாக கவிதை என்பதோடு நிறுத்திக் கொண்டீர்கள். இது அவரவர்க்கான கவிதைகளை அவரவரே எழுத வேண்டும் என்பதற்கான தற்குறிப்பேற்றம் ஆகும். அத்துடன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த உலகக் கவிதை இதுவே!” என்றார்.

இப்படியாக இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதையை எழுதும் பெரும் பாக்கியத்தை நண்பர் மூலமாகப் பெற்றேன். இதற்கான பெருமையினைப் புகழினை எனக்கு முன்னால் இருந்த கவிஞர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன். அவர்களின்றி இது சாத்தியமாயிருக்காது.

இந்தக் கவிதை என்பது தமிழ்ப்புலவர்களின் டிஎன்ஏ மரபின் தொடர்ச்சிதான். கபாடபுரம், தென்மதுரை தொப்புள்கொடியின் உறவுதான். பண்டுதமிழ் அறுவைச் சிகிச்சையில் பெற்றெடுத்த நவீன குழந்தைதான்.

நெருப்பு என்று எழுதினால் சுடுமோ, சுடாதோ? கவிதை என்று எழுதினால் அது சுடாவிட்டாலும், சுட்டு விட்டாலும் கவிதைதான். கவிதை இல்லை என்று யாராவது சொல்லி விட முடியுமா?

குறிப்பாக எழுத்துக் கூட்டி எழுத கற்றுக் கொடுத்து க – வி – தை என எழுத எழுத்தறிவித்த ஆசிரியருக்கு இந்த உலக மகா கவிதை சமர்ப்பணம். இக்கவிதைக்கு நோபல் பரிசோ, உலகக்கோப்பை பரிசோ அல்லது ஒலிம்பிக் வெண்கலப் பரிசோ கிடைக்குமானால் பாதித் தொகையினை ஆசிரியரோடு பகிர்ந்து கொள்ள சித்தம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரரை ஆட்கொண்ட ஆண்டவன் அருள் புரியட்டும்.

நீங்களும் உங்களுக்கான கவிதையை எழுதிக் கொள்ளுங்கள்.

எந்தக் கவிதை உங்களை கவிதை எழுதச் செய்கிறதோ அதுவே சிறந்த கவிதை.

என் ‘கவிதை’ உங்களை கவிதை எழுத வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கவிதையை நீங்கள் கருத்துப்பெட்டியில் (கமென்ட் பாக்ஸ்) பதிவிடலாம். ஆவலோடு காத்திருக்கிறேன். சன்மானம் வழங்க வாய்ப்பில்லை. தமிழ்க்கவிதைகள் விலைமதிக்க முடியாதவை; விலை போகாதவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

*****

No comments:

Post a Comment

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை!

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை அனுபவம்! “கவிதை எழுதி நீண்ட நாளாயிற்றே?” என்றார் நண்பர். காற்றில் பறந்த காகிதம் ஒன்றைக் கப்பெனப் ப...