2X வீரிய கவிதை!
ஐயா
உங்கள் கவிதையைத் ‘தினப்புயலில்’ பார்த்தேன்.
‘தினப்புயல்’
ஒரு நாளிதழ்.
வாய்ப்பில்லையே
என்றேன்.
பிறகெப்படி
என் கண்களில் பட்டது என்றார்.
எங்கே
கவிதையைச் சொல்லுங்கள் என்றேன்.
‘குண்டுவீச்சில்
12 பேர் பலி’ என்ற தலைப்புச் செய்தியை ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னார்.
அவர்
கையைக் குலுக்கினேன்.
நன்றி
என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.
‘குண்டுவீச்சில்
12 பேர் பலி’ என்பது நான் எழுதிய கவிதை என்று அவர் எப்படி அவ்வளவு உறுதியாக நம்புகிறார்?
கவிதையைக்
குண்டாகக் குழப்பிக் கொள்பவர்கள் நாட்டில் அதிகம் என்ற முடிவுக்கு வந்தேன்.
இதை
ஒரு கவிஞர்தான் எழுதியிருக்க முடியும் என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்ற கேள்விக்கு
மட்டும் விடை காண முடியாமல் போய் விட்டது.
கவிஞர்கள்
இரங்கற்பா எழுதுவார்கள். மரணத்தையுமா எழுதுவார்கள்?
இருந்தாலும்
ஒரு வாசகனின் நம்பிக்கையைப் பொய்யாக்கக் கூடாது என்று, அதை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்த
வீரிய கவிதை வந்தனம் எழுத ஆரம்பித்தேன்.
“கவிதை
படித்து
24 பேர்
பலி.”
*****
No comments:
Post a Comment