நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்!
கீழத்தஞ்சையின்
உழைக்கும் பெருங்குடி மக்களான உழவர் தொல்குடிகளின் வாழ்வியல் தொன்மங்களின் கவித்துவத்
தொகுப்பாக வெளிவந்திருக்கிறது நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’.
வாழ்வில்
எதிர்கொள்ளும் துன்பங்களும் துயர்களும் மனிதர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது.
புத்தருக்கு அது ஞானமாகப் பரிணமிக்கிறது. உழவர்களுக்கு அது புரட்சியாகப் பரிணமிக்கிறது.
கீழத்தஞ்சையின்
உழவர் ஒருவர் அரண்மனையில் பிறந்திருந்தால் தாமரையை ஏந்திருக்கும் புத்தராகியிருப்பார்,
அதே புத்தர் கீழத் தஞ்சையின் உழவர்களின் தொல்குடியில் பிறந்திருப்பின், அவர் கதிர்
அரிவாளை ஏந்தியிருக்கும் உழவராகியிருப்பார் என்பதுதான் நூல் தரும் பார்வை.
காதல்
– காமத்தில் தொடங்கி புரட்சியில் முடிகிறது நிலாதரனின் இக்கவித்தொகுப்பு. கவிதைகளைக்
காதலோடு தொடங்கியிருப்பதற்கு நிலாதரன் என்ற பெயர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும்,
முடிவில் வெண்மணித் தீயின் செங்கதிர்களைப் பிரசவித்துச் சூரிய புத்திரனாகவும் ஆகியிருக்கிறார்
நிலாதரன்.
கதிர்
என்பது தமிழர்களின் வாழ்வியல் குறியீடு. பொங்கல் திருநாள் எனும் தமிழர்த் திருநாள்
கதிர் எனும் கதிரவனுக்கு வணக்கம் செய்யும் பெருநாள்.
வானத்துக்
கதிர் விளைவிப்பதாலேயோ என்னவோ நெற்பயிர்களுக்கும் கதிர் என்கிற பெயரையே வழங்குகிறது
தமிழ் நிலம்.
கதிர்
எனும் சுடரைத் தருவதாலும், கதிர்களை விளைவிப்பதாலும் கதிர்ச்செல்வன் என்று கதிரோனைப்
போற்றிப் பரவுகிறது தமிழ் இலக்கியம்.
தமிழ்க்கடவுளாம்
முருக பெருமானுக்கும் கதிர்வேலன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறது தமிழ் இனம்.
கதிர்வேலன்
கையில் வேலைத் தந்ததைப் போல, நிலாதரன் புத்தரின் கையில் கதிர் அரிவாளை தந்துப் பார்க்கிறார்.
உழைக்கும் மக்களின் பார்வை உலகெங்கும் அப்படித்தான் அமைகிறது. தங்கள் உழைக்கும் மக்களின்
ஆயுதங்களைத் தரித்திருப்பதாகவே உலகெங்கும் தெய்வங்கள் கலைஞர்களால் படைக்கப்படுகிறார்கள்.
அரிவாள்
உழைக்கும் மக்களின் ஆயுதம், அத்துடன் அவர்களது போராட்டக் குறியீடு. உலக மக்களின் பசியாரக்
கதிர்களை அறுக்கும் அரிவாள், அவர்களின் வாழ்வில் இருள் சூழுமானால் வானில் ஒளி பரப்பும்
கதிரையும் அறுத்து ஒளியைக் கொண்டு வரும் என்பதற்கான புரட்சியின் குறியீடாகவும் கருதப்படக்
கூடியது.
இடது,
வலதாகி அரிவாளோடு சுத்தியல் சேர்வதும், கதிர் சேர்வதும் தஞ்சை மண்ணின் இரு வேறு தத்துவ
மற்றும் அரசியல் போக்கு என்று மட்டும் கொள்ள முடியாது. அது உழவர்களின் குரலைத் தனித்துப்
பேச வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடும் ஆகும்.
இத்தத்துவப்
போக்கையும் அரசியல் நோக்கையும் கூர்ந்து அவதானித்து, உழைக்கும் மக்களின் வாழ்வியலுக்கும்
பண்பாட்டுக்குமான தொடர்பைத் தன் கவிதைகளால் நிறுவுகிறார் நிலாதரன்.
வானத்துச்
செங்கதிரும், வயலின் செங்கதிரும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாதவை என்பதை,
“ … … … தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு” (புறநானூறு, 6)
“அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த” (புறநானூறு,
22)
எனும்
சங்க வரிகள் புலப்படுத்தும். அம்மரபின் தொடர்ச்சியை உழைக்கும் மக்களின் ஆயுதங்களை முதன்மைக்
குறியீடாக்கி நவீனத்தோடும், கடந்து கொண்டிருக்கும் நிகழ்கால வாழ்வியலோடும் நீட்டி முழங்குகின்றன
நிலாதரனின் கவிகள்.
கனமும்
காத்திரமும் கொண்டு சமத்துவத்தை விழையும் கவிகளின் படைப்பாகவும் நிறைந்திருக்கிறது
இத்தொகுப்பு. சான்றுக்கு ஒன்று,
“அப்பாவின் அரிவாளை விட
எப்போதும் சிறியதுதான்
அம்மாவின் அரிவாள்”
மக்களின்
புழங்கு மொழியைக் கவிதையின் வழங்கு மொழியாக வாரித்திருப்பது இத்தொகுப்பிற்குத் தனி
அடையாளத்தை வழங்குகிறது.
“வயதுக்கு வந்த பெண்டுகளின்
கால்மாட்டில் கிடக்கும்
விளக்குமாற்றோடு கட்டப்பட்ட
கதிர் அரிவாள்
சமைந்த கொமருகளைத் தேடிவரும்
பேய் பிசாசுகளை
அத்துப்புடும் அத்து.”
எனும்
வரிகள் புத்தரின் கையில் இருக்கும் தாமரையை விட அதீத அழகியலோடு அவர் கையில் அரிவாள்
இருக்கும் அற்புதக் காட்சியைக் கவித்துவமாகத் தீட்டி விடுகின்றன.
இன்று
கதிர் அறுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டாலும் கதிர் அரிவாளுக்கான தொன்மக் குறியீடாக
நிலாதரனின் இத்தொகுப்பு எப்போதும் நிலைத்திருக்கும்.
நூல் குறித்த விவரங்கள்
:
நூல்
பெயர் : புத்தனின் அரிவாள்
நூலாசிரியர்
: அ. நிலாதரன்
வெளியீடு
:
கொம்பு பதிப்பகம்,
எண் 11, பொது அலுவலகச் சாலை,
நாகப்பட்டினம் – 611001.
பதிப்பக தொடர்பு எண் : 99523 26742
*****