28 Feb 2025

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்!

ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா?

பணக்காரர்களை ஏழைகளாக்க வேண்டுமா?

ஏன் இந்த வேண்டாத வேலை என்று, அவரவர்களை அப்படியப்படியே இருக்க விட்டு விட வேண்டுமா?

அதற்கு முன், இந்த உலகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் ஏழைகளைப் பணக்காரர்களாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சந்தையில் விற்பனையாகும் பல சுயமுன்னேற்ற மற்றும் பணக்காரர்களாக்க உத்தி சொல்லும் நூல்களைப் பார்த்தாலே போதும். இது உங்களுக்குப் புரியும்.

‘பணம் பண்ண’ என்று சமூக ஊடகங்களில் உலா வரும் செய்திகள் மற்றும் காணொளிகளைப் பார்த்தாலும் இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஏழைகள் மீது கொண்ட பாசத்தினால் இப்படி ஒரு முயற்சி செய்யப்படுகிறதா? அல்லவே அல்ல.

நுகர்வை அதிகப்படுத்தியோ அல்லது பேராசையைத் தூண்டியோ லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபார மனப்பான்மையின் விளைவு இது.

எல்லாரும் பணக்காரர்களாகி விட்டால் எல்லாரும் எல்லாவற்றையும் பெற்று விட முடியுமா?

அது சாத்தியமே இல்லை. விலை வேறுபாடு என்ற ஒன்று இருக்கிறதே.

விலை வேறுபாடு என்பது எப்போதும் ஏழை – பணக்காரர் என்ற வேறுபாட்டை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் வருமானங்களில் நிலவும் வேறுபாட்டை உங்களால் எப்படி நீக்க முடியும்?

எப்படி பார்த்தாலும் இந்த ஏழை – பணக்கார வேறுபாட்டு அளவை நீக்க முயற்சிப்பது நமக்கு எப்போதும் உதாவது.

அப்படியானால் சரியான அளவீடு என்பது என்ன?

அனைவருக்குமான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் கிடைக்கின்றனவா என்பதே சரியான அளவீடாக இருக்கும்.

அடிப்படை அளவைத் தாண்டித் துய்ப்பவர்கள் அனைவருமே பணக்காரர்கள்தான். அடிப்படை வசதிகளை உரிய அளவு கூட துய்க்காதவர்கள் ஏழைகளே.

நுகர்வின் அடிப்படையிலேயே ஏழை – பணக்காரர் என்பது தீர்மானமாகிறது. ஏழைகள் அடிப்படை அளவுக்கே நுகர முடியாதவர்களாக இருக்கிறார்கள். பணக்காரர்கள் அளவுக்கு மிஞ்சி நுகர்கிறார்கள்.

நுகர்வுக்குப் பணம் என்பது ஆதாரமாக இருக்கிறது. பணத்தின் அளவு பாரபட்சமாக மனிதர்களிடம் பரவுவதைத் தடுப்பது சாதாரண காரியமில்லை.

ஆனால், பணமானது அனைவரிடமும் அடிப்படை வசதிகளைப் போதுமான அளவுக்கு நுகரக் கூடிய அளவுக்குக் குறைவில்லாமல் பரவச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். அக்கடமையை ஓர் அரசாங்கம் எப்போதும் குறைவின்றிச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் அரசாங்கத்திற்குச் சட்டங்களும் அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. ஒரு மக்கள் நல அரசாங்கம் இந்த விசயத்தில் எப்போதும் மிகச் சரியாகவே செயல்படும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே அதை மக்கள் நல அரசாங்கம் என்றும் சொல்ல முடியும்.

இது சாத்தியந்தானா?

நடைமுறைக்கு ஒத்து வரக் கூடியதுதானா?

ஓர் அரசாங்கம் நினைத்தால் கட்சிக்காரர்களைப் பணக்காரர்களாக்கி முடியுமென்றால், ஏன் மக்களை அப்படி ஆக்க முடியாது?

*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...