‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!
அண்மைக்
காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பதும்
‘வெளியே போ’ என்பதும்.
இரண்டு
சொல்லாடல்களும் இந்தியாவின் மாபெரும் ஆளுமை மற்றும் தமிழ்நாட்டின் மாபெரும் ஆளுமைகளோடு
தொடர்புடையன.
இரண்டு
சொல்லாடல்களும் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக ஏற்பட்ட மோதல் போக்கினால் எழுந்த
எதிரெதிர் உணர்வலைகளால் ஏற்பட்டவை.
மாபெரும்
ஆளுமைகளை எதிர்ப்பதன் மூலம் அவர்களது சித்தாந்தத்தை எதிர்ப்பதற்கான வலுவான குரல்களை
அச்சொல்லாடல்கள் ஏற்படுத்துகின்றன. கருத்தியல்களை ஏற்றுக் கொள்ள முடியாத உச்சத்தில்
இத்தகைய எதிர்ப்புச் சொல்லாடல்கள் நிகழ்கின்றன.
வந்தவரைத்
‘திரும்பிப் போ’ என்று சொல்வதற்கு அவ்வளவு லேசில் யாருடைய மனமும் இடம் தராது. கசந்து
போன உறவுகளாயினும் துக்கம் விசாரிக்க வருமிடத்து, விசாரித்து விட்டுப் போ என்று நிலவும்
வழக்கம்தான் தமிழகத்தில் இன்றும் இருக்கிறது.
எதிரியாயினும்
வீடு தேடி வந்தவரை ‘வெளியே போ’ என்று சொல்ல யாருக்கும் மனம் வராது. வந்தாரை வாழ வைக்கும்
தமிழகத்தில் யாரையும் வெளியோ போ என்று சொல்லாத பண்பாடே இன்று வரை நீடிக்கிறது.
எதிர்ப்பின்
அடையாளத்தை உக்கிரமாகக் காட்டும் சொற்பிரயோகங்கள் அரசியல் கட்சியில் இருக்கும் அடிமட்ட
தொண்டர்களை உணர்ச்சிவயப்படுத்தவும், கொம்பு சீவி விடவும் பயன்படுத்தப்படுகின்றன. இது
பல நேரங்களில் கலவரங்களில் சென்று முடியவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
அனைத்து
நாடுகளிலும், அமெரிக்கா உட்பட தலைவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும், கருத்தியல்
ரீதியான எதிர்ப்புகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய அதிதீவிர உணர்ச்சிவசப்படும்
தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதிதீவிர
உணர்ச்சி ஒருவரை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டலாம். துப்பாக்கியைத் தூக்கக் கூட
வைக்கலாம். வெடிகுண்டு கலாச்சாரத்தைப் பின்தொடரவும் செய்யலாம்.
தலைவர்களின்
வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமை தொண்டர்களிடம் எப்படி பிரதிபலிக்கும் என்பதற்கான கட்டுப்படுத்தப்பட்ட
சாத்தியக்கூறுகள் நம்மிடம் இல்லை. அதன் சாத்தியக்கூறுகள் கட்டுபாடில்லாமல் விரியக்கூடியன.
கட்டுப்பாடில்லாத
சாத்தியக்கூறுகளை விரிய விடும் வார்த்தைகளைப் பரப்பும் தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ
சமூக அமைதிக்குக் குந்தகத்தையே விளைவிக்கிறார்கள்.
சமூக
அமைதியைக் கைவிட்டு விடாத வகைமையில் தங்களது எதிர்ப்புகளையும், போர்க்குணங்களையும்
கட்டமைக்கும் தலைவர்களே அரசியலுக்கும் கருத்தியலுக்கும் தேவையான ஆரோக்கியமான தலைவர்கள்.
உணர்வுகளைத்
தூண்டுவதென்பதும், அதை அதிதீவிரமாக்குவது என்பதும் ஒரு துப்பாக்கியை இரு பக்கமும் வெடிக்க
வைக்கும், வெடிகுண்டைக் கையாளும் போதே பற்ற வைக்கும் ஆபத்துகளை உடையவை.
பண்பான
தலைவர்களின் அடையாளம் என்பது பண்பாட்டோடு அவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளும், எதிர்ப்புகளை
நாகரிகமாக அணுகும் அவர்களின் அணுகுமுறைகளும்தான்.
எதை
விதைக்கிறோமோ அதுதான் விளைகிறது என்பது எக்காலத்திலும் பொய்யாவதில்லை. ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை இருக்கிறது என்கிற இயற்கை அறிவியல் விதியும் மாறப் போவதில்லை.
“யாகாவாராயினும்
நாகாக்க” (குறள், 127) என்கிற பேராசானின் வார்த்தைகளின் பின்னுள்ள உண்மையைச் சொல் இழுக்குப்பட்டு
உணர்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?
நாட்டைக்
காப்பதற்கு முன், மக்களைக் காப்பதற்கு முன், தலைவர்கள் தங்களிடமிருந்து வரும் சொற்களைக்
காத்து நிற்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment