20 Feb 2025

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

தேர்தல் பிரச்சாரங்களில் உள்ளூர் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை. அதிலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி வாய் திறப்பதே இல்லை.

உதாரணமாக டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டால் காற்றுமாசு பற்றி அங்கு தேர்தல் பிரச்சாரமே நடைபெறவில்லை.

டில்லியின் முக்கியமான பிரச்சனையே அதுதான்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், டாஸ்மாக் பிரச்சனைகளைப் பற்றி எந்தத் தேர்தல் அறிக்கையும் நுட்பமாகப் பேசுவதில்லை. வெறுமனே மதுவிலக்கு என்ற அளவில்தான் பேசுகின்றன. அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பது அத்தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பவர்களுக்கே தெரியும்.

டாஸ்மாக்கினால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன? குடிநோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் எத்தனை? டாஸ்மாக் குடியர்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் அங்குள்ளனவா? அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் உண்டா? இதைப் பற்றியெல்லாம் எந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் எதுவும் ஒலிப்பதில்லை.

குவார்ட்டர் என்பது ஓட்டைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால் அது பற்றிய அனைத்தும் பூசி மெழுகப்படுகின்றன.

டெல்டா மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் இங்கு நெல் கொள்முதலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரியில் முறை வைத்துப் பாசனம் வழங்கப்படுவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இவை எதுவும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதிபலிக்கப்படுவதே இல்லை.

விவசாயத்தை எடுத்துக் கொண்டால் ரசாயன விவசாயம் அதன் உச்சபட்ச நச்சை விதைத்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் களைக்கொல்லிகளால் வயல், வரப்பு மற்றும் வாய்க்கால்களில் இருந்த பல மூலிகைச் செடிகள் இனம் தெரியாமல் அழிந்துவிட்டன.

கிராமங்களில் மாடுகளே கிடையாது. இருப்பினும் பாக்கெட் பால் வராத வீடுகளே கிடையாது. எப்படி இந்தப் பால் உற்பத்தியாகிறது என்பதற்குக் கேள்வியும் கிடையாது.

ஊரெங்கும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் பொருட்களுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் எந்த அளவுக்கு மண்ணையும் அதன் வளத்தையும் பாதிக்கும் என்பதை நுட்பமாகப் பேசும் தேர்தல் அறிக்கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீர் நிலைகள் பற்றியும் எந்தத் தேர்தல் அறிக்கையும் பேசுவது இல்லை. எத்தனையோ ஏரிகள், குளங்கள், மழைநீர் வடிகால்களை இழந்தாயிற்று அல்லது தூர்த்தாயிற்று.

இவையெல்லாம் பேசப்பட வேண்டும். ஆனால் பிரச்சாரங்களில் பேசப்படுவதில்லை. அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை, வேட்பாளர்களை ஆரோக்கியமான முறையில் கேள்வி கேட்கும் மரபே இங்கில்லை. ஆரோக்கியமான விவாதங்கள் நேரடியாக பொதுமக்களுக்கும் அரசியல் பொறுப்பாளர்களுக்கும் நடைபெறுவதே இல்லை. நடைபெறுவதெல்லாம் வம்படிச் சண்டைகளாகவே இருக்கின்றன.

பொது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி ஆரோக்கியமாக விவாதிக்கும், வாக்குறுதிகள் வழங்கும் தேர்தல் அறிக்கைகள் உருவாக வேண்டும். முதலில் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும், வருங்கால அக்கறையும் வேண்டும். அதை ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் கூட தேர்தல் கட்சிகளுக்கு இருக்கிறது.

அதற்கு முதற்படி ஒன்று இருக்கிறது. அதுதான் கேள்வி. அங்கிருந்துதான் துவங்க வேண்டும்.

பொதுமக்களே! கொஞ்சம் ஆரோக்கியமாகக் கேள்வி கேளுங்கள்.

அரசியல்வாதிகளே! கொஞ்சம் ஆரோக்கியமாகப் பதில் சொல்லுங்கள்.

கேட்கத்தான் கேள்விகள்!

கேள்விகள் கேட்பதுதான் புரட்சிக்கான வேள்விகள்!

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...