மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?
பழங்களையல்ல
வேர்களைக் கவனியுங்கள்
பழங்கள்
கண்ணுக்குத் தெரிகின்றன
வேர்கள்
மறைந்திருக்கின்றன
பழங்களுக்கான
சாற்றினை வேர்களே உறிஞ்சுகின்றன
நாம்
பழங்களைக் கவனிக்கிறோம்
வேர்களை
மறந்து விடுகிறோம்
வேர்களுக்கு
ஊற்றும் நீரே
கனிகளில்
சுவையாய் நிறைகிறது
வேர்களுக்கு
இடும் உரமே
கனியின்
பெருக்கைத் தீர்மானிக்கிறது
வேர்களுக்கு
நாம் தருவதையே
மரங்கள்
பழங்களாகத் தருகின்றன
வேர்களுக்கு
எதுவும் தராமல்
பழங்களாய்
நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது
வேர்கள்
செல்லரித்துப் போனால்
பழங்கள்
புழுபுழுத்துப் போகும்
மறைவாக
இருக்கின்றன என்பதற்காக
நாம்
மறந்திருக்க முடியுமா
*****
No comments:
Post a Comment