அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு
– ஓர் எளிய அறிமுகம்!
‘அருகன்’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத்
தொகுப்பு. முதல் தொகுப்பு என்று கருத இயலாத அளவுக்கு நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்திருப்பது
இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஒரு தேர்ந்த சிறுகதையாளர் என்பதற்கான அம்சங்கள் இத்தொகுப்பில்
உள்ள அவரது சிறுகதைகளில் காணக் கிடைக்கின்றன.
பெண்ணியப்
பார்வையோடு விரியும் கிராமியச் சூழல் கவிந்த இத்தொகுப்பு பல வகை மாந்தர்களை வாசிப்போருக்கு
அடையாளம் காட்டுகிறது. அன்றாடம் நாம் கண்டும் காணாமல் விட்ட பல மாந்தர்கள் இத்தொகுப்பின்
மூலமாகப் புதிய வெளிச்சத்திற்கு வருகிறார்கள். நம் வெளிச்சத்திற்கு வராத மாந்தர்கள்
பின்னும் ஒரு கதை இருக்கிறது என்பதுதான் இத்தொகுப்பு காட்டும் சிறுகதைகள் தரும் அனுபவம்.
தன்னுணர்வின்றித்
திரியும் மாந்தர்கள் சில கிராமங்களுக்குள் ஒருவரேனும் இருப்பர். நகரங்களில் ஒரு சிலரேனும்
இருப்பர். ‘அருகன்’ என்ற தலைப்பிலான சிறுகதையை வாசிக்கும் போது அப்படிப்பட்டவர்களின்
பின்னுள்ள கதையை யோசிக்கத் தூண்டுகிறது.
காலப்
பிரக்ஞையின்றி முன் பின்னாகச் சம்பவங்கள் ஊடாடும் அக்கதையில் வரும் நேமிநாதனும், நேமிநாதனின்
மர்மத்தை அறியத் துடிக்கும் மாதவனும் கண் முன்னே நிழலாடிக் காட்சிகளைக் கலைத்து போட்டபடி
மாய எதார்த்த்த்திற்குள் சென்று மனக் கண்ணுக்குள் மறைகிறார்கள்.
‘ஓங்குபனை’
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிலவிய ஆண் குழந்தை மோகத்தின் பின்னணியில் இருக்கும்
ஆணாதிக்க மனோபாவத்தை அப்பாவி பெண்ணிய மொழியில் பேசுகிறது. தாய் கருவுற்றிருக்க, மகளும்
தலைபிரசவத்துக்காகப் பிறந்தகம் வர, தாயின் குழந்தைகளும், மகளின் குழந்தைகளும் ஒன்றாக விளையாடிய காலமது. அந்தக் காலகட்டத்தில்
ஆண் குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கத்தையும், அப்பெண்ணின் ஏக்கத்தைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்ளும் ஆணின் சபலத்தையும் வெளிப்படுத்தும் நுட்பமான சொல்லாடல் நிறைந்த
கதையாக உள்ளது ‘ஓங்குபனை’.
வாழ்க்கை
முழுவதும் துணையாக வர வேண்டிய கணவனை இழந்து விட்ட பெண்ணுக்குப் பற்றுக்கோடாக இருக்கும்
மகனும் நோயில் விழுந்து விட்டால் எப்படி இருக்கும்? ‘உடற்றும் பிணி’இல் போராடும் பெண்ணின்
கதை பெண்ணின் உளவியலையும் இன்றைய எதார்த்த மருத்துவ நிலையையும் பேசுகிறது.
‘ஊமச்சி’யின்
கதையின் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரகசியங்களும் ஆன்மிக ரகசியங்களும்
கிராமியங்களில் ஆழமாகப் புதையுண்டு கிடப்பவை. பருவமடைதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்
ஒரு பெண்ணின் பார்வையில் நகரும் இக்கதையை ஒத்த வகையில் நகரும் மற்றொரு கதை ‘மடக்கொடி’.
உட்கிடைக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாலியலுக்கும் இடையேயுள்ள முப்பிணைப்பைப் பேசும்
இச்சிறுகதை ஒரு சிறுமியின் பால்யத்தில் தொடங்கி அவள் பருவமடைந்த பெண்ணாகச் சமூகச் சிடுக்குகளைப்
புரிந்து கொள்வதில் முடிகிறது.
சிலப்பதிகாரம்
மணிமேகலையும் மாதவியின் வாழ்க்கைக்கு ஒரு புனிதம் தந்தாலும் எதார்த்த்தம் வேறாகத்தான்
இருக்கிறது என்பதைச் சொல்லும் கதையே ‘மைம்மா’. பாலியல் தொழிலாளியாக நோக்கப்படும் ஒரு
பெண்ணுக்கு இருக்கும் பரிவும், நாசுக்கும் அவளைத் தீட்டாகக் கருதுவோருக்கு எப்படி இல்லாமல்
போகிறது என்பதைக் இக்கதையாடலில் வாசிப்போரின் மனதில் ஊடாட விடுகிறார் அருணா சிற்றரசு.
‘பேசாப்
பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்று பாரதி கூறுவதற்குச் சான்று பகர்வது போல தன்பால்
ஈர்ப்பை ‘தேமாக்காதல்’ என்ற சிறுகதையில் பேசத் துணிந்திருக்கிறார் அருணா சிற்றரசு.
பொதுவாகத் தன்பால் ஈர்ப்பு என்பது நகரங்களில், மாநகரங்களில் காணப்படும் எனும் கற்பிதத்தை
உடைக்கும் வகையில் கிராமியப் பின்னணியில் அமையும் இக்கதை பேசும் பெண்ணின் மன உணர்வுகள்
கவனிக்க வைக்கின்றன.
ஒரு
பெண்ணின் மேல் நேசம் கொள்ள ஆணுக்குப் பல காரணங்கள் இருக்கும் என்றால், ஓர் ஆணின் மேல்
நேசம் கொள்ள ஒரு பெண்ணுக்கும் பல காரணங்கள் இருக்கும். பரமசிவனின் நேசம் முழுவதும்
நாவின் சுவையை மையமாகக் கொண்டே பெண்ணின் மேல் கொள்ளும் நேசமாக அமைகிறது. அந்நேசம் இன்னொருவரின்
மனைவியாக இருந்தாலும் நாவின் சுவைக்காகவே அமைந்து, அப்பெண் கட்டியவனையும் மறந்து, கொண்டாடியவனையும்
துறந்து இன்னோர் ஆணை நாடிச் செல்வதாக மனதின் விசித்திரங்களை அத்தனை மர்மங்களோடு எதார்த்தமாகப்
பதிவு செய்கிறது ‘தீஞ்சுவை’ எனும் சிறுகதை.
பெண்ணின்
உணர்வுகளைப் பெண்ணே புரிந்து கொள்ளும் கதையாகவும், குடும்பத்தைக் கட்டிக் காக்கும்
பெண்ணின் சாதுர்யம் மிகுந்த கதையாகவும் விரிகிறது ‘மரிக்கொழுந்தன்’. கதையின் போக்கைக்
கொண்டு அடுத்து நிகழக் கூடியது இதுதான் என அனுமானிக்கக் கூடிய கதையாக இருந்தாலும்,
பெண்ணின் ஆளுமையையும் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் பேசும் கதையாக அச்சிறுகதை
அமைகிறது.
நாய்களைப்
போல நன்றியுள்ள ஜீவன் இந்த உலகில் இல்லையென்றாலும், நாயைப் பிடிக்காத ஒரு பெண்ணுக்கு
நன்றியுள்ள நாய் கிடைத்தால், எப்படி இருக்கும் என்பதைப் பேசுகிறது ‘விளியறிஞமலி’. கதை
முடிவில் நாயின் மேல் கருணை கொள்வதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும், எவ்வித சமரசத்தையும்
செய்து கொள்ளாமல் மனித மனதை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில் தனித்து நிற்கிறது இக்கதை.
இப்படி
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் தனித்த கவனத்தைக் கோரக்கூடியதாகவும்,
நுட்பமான அவதானிப்பைத் தரக் கூடியதாகவும் அமைகின்றன.
இக்கதைகளைத்
தொகுத்துக் கூறுமிடத்து, அருகன், ஓங்குபனை, ஊமச்சி, மைம்மா, மரிக்கொழுந்தன், மடக்கொடி,
தேமாக்காதல் ஆகிய ஏழு கதைகளும் மறைக்கப்பட்ட பாலியலையும், மேற்பூச்சாகத் தெரியும் சமூக
எதார்த்தத்தை மீறிய பாலியல் பூடகங்களையும் பேசுவதாக உள்ளன.
‘தீஞ்சுவை’
பாலியல் தேவையைத் தாண்டிய ஐம்புலனின் தேவையை முன்னிறுத்தி, முடிவில் பூடகமாய் உழன்று
கொண்டிருந்த பெண்ணின் பாலியலைப் போட்டு உடைக்கிறது.
‘உடற்றும்
பிணி’ வெளிப்படுத்தும் பெண்ணின் உளவியல் இத்தொகுப்பில் தனித்த அனுபவத்தைத் தரும் சிறுகதையாக
அமைகிறது.
‘விளியறி
ஞமலி’ அத்தனை
கிராமிய எதார்த்தங்களுடன் கூடிய மன எதார்த்தத்தைப் பேசும் கதையாக அமைகிறது.
எழுத்தில்
ஆண் எழுத்து, பெண் எழுத்து என்றெல்லாம் வேறுபாடில்லை என்றாலும், அருணா சிற்றரசுவின்
இத்தொகுப்பில் வெளிப்படும் பெண் எழுத்து தனித்துவமானது. அதுவே இத்தொகுப்பைப் பிற பெண்
எழுத்தாளர்களின் தொகுப்புகளிலிருந்து வேறுபடுத்தவும் செய்கிறது.
நூல் குறித்த விவரங்கள் :
நூல்
தலைப்பு : அருகன்
நூல்
வகை : சிறுகதைகள்
நூலாசிரியர்
: அருணா சிற்றரசு
வெளியீடு
: எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி,
642 002.
பதிப்பக
தொடர்பு எண் : 99425 11302
நூல்
விலை : ரூ. 200/-
*****
No comments:
Post a Comment