21 Feb 2025

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

கிராமங்களில் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அரிசி, உளுந்து போன்ற தானியங்களைக் கொடுக்க மாட்டார்கள்.

இது ஏன்?

இது இனிய நண்பர் காளிதாஸின் கேள்வி.

வெள்ளியும் செவ்வாயும் பொருட்கள் கொடுப்பதற்கான விடுமுறை நாட்களா என்ன?

பொதுவாகக் கிராமத்தினருக்குச் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகள் மங்கலமான நாட்கள். அவர்கள் பிரதானமாக ஆன்மீக தளங்களுக்குச் செல்வது அந்த நாட்களாக இருக்கும். மங்கலகரமான நாட்களில் ஒன்றைக் கொடுப்பதை, மங்கலத்தையே கொடுப்பதைப் போல அவர்கள் கருதுவார்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி சிலம்பைக் கொடுத்துக் கணவனை இழந்தது வெள்ளிக் கிழமை. இதன் உளவியல் தாக்கம் இன்றும் தொடர்வதால் செவ்வாய்க் கிழமையில் பொருளைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள், வெள்ளிக் கிழமை என்றால் நிரம்பவே யோசிப்பார்கள்.

இதன் பின்னால் உள்ள பொருளாதாரக் காரணங்களையும் யோசிக்க வேண்டும். கிராமங்கள் பெரும்பாலும் பொருளாதாரச் சுழற்சி இல்லாதவை. அக்கம் பக்கத்தில் பொருட்களை கைமாற்றாக வாங்கி, கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கிராமங்களில் நிறைய பேர். தினம்தோறும் அப்படிக் கேட்பவர்களுக்கு ஒரு தடை போட்டது போல இருக்கட்டும் என்று, செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களாவது எதுவும் கொடுக்காமல் இருப்பதற்காகவும் இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

கேட்பவர்களைத் தட்டிக் கழிப்பதற்காகவும் செவ்வாய், வெள்ளிக் கிழமையைக் காரணம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கடந்தாலும் கொடுக்கின்ற எண்ணம் மாறி விடும் என்பார்கள். இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக் கூடாது என்ற சொலவமே அப்படி ஏற்பட்டதுதான். செவ்வாய், வெள்ளி என்று ஒரு நாள் அளவு என்றால் எப்படி கொடுக்காமல் இருக்கலாம் என்பதற்கு ஓராயிரம் காரணங்களைத் தயார் செய்து விடலாம் பாருங்கள்.

செவ்வாய், வெள்ளியில் தானியங்களைக் கொடுக்கக் கூடாது என்றால் அரிசிக் கடைகள், தானியக் கடைகள் நிலைமை என்னாவது? அவரசத்திற்குப் பணம் தேவைப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் உளுந்தையோ, பயிறையோ விற்றுப் பணம் புரட்ட வேண்டிய நிலையில் இருந்தால், அவர்கள் நிலைமை என்னாவது?

இதற்கும் ஒரு காரணம் சொல்வார்கள். பொருளைக் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டால் சரி என்பார்கள். அதாவது, கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்பது போல.

‘அறம் செய விரும்பு’ என்று சொன்ன ஔவை அதற்கு நாள், கிழமை பார்க்கச் சொல்லவில்லை. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொன்ன முன்னோர்கள் எந்தெந்தக் கிழமைகளில் அது காக்கும் என்று குறிப்பிட்டு எல்லாம் சொல்லவில்லை. தர்மம் எல்லா நாட்களிலுமே காக்கும். அதற்கான அறத்தை நாம் அனைத்து நாட்களிலும் செய்யலாம்.

நல்ல மனதோடு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நாளிலும் கொடுக்கலாம். அதற்கு செவ்வாயும், வெள்ளியும் கூட உகந்த நாட்களே!

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...