இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!
தற்காலத்தில்
இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன.
இலவசங்களுக்கும்,
இலவசப் பரிந்துரைகளுக்கும் பஞ்சமில்லாத காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இலவசமாக
வழங்கப்படும் அனைத்தும் தரமற்றவை என்றோ, இலவசங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் என்றோ
நான் கூற வரவில்லை.
இவற்றின்
உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது” அவசியம்
அல்லவா!
பணக்காரர்
ஆவதற்கான பரிந்துரைகளை வழங்குபவர், அதை வைத்து அவர் பணக்காரர் ஆகலாம். அதை ஏன் மற்றவர்களுக்கு
விற்று மற்றவர்களைப் பணக்காரர் ஆக்க வேண்டும்?
இந்த
அடிப்படையான கேள்வியை ஒவ்வொரு இலவசப் பரிந்துரைகளின் மீதும் நீங்கள் எழுப்ப வேண்டும்.
நாட்டில்
அவ்வளவு நலம் விரும்பிகள் பெருகி விட்டார்களா என்ன?
உண்மை
என்னவென்றால், அவர் அந்த இலவசப் பரிந்துரை மூலம் உங்களை ஏழையாக்கி, அவர் பணக்காரர்
ஆக நினைக்கிறார்.
அதெப்படி
இலவசப் பரிந்துரைகள் மூலம் அவர் பணக்காரராக ஆக முடியும்?
முதலில்
இலவசமாக வழங்கப்படும் இப்பரிந்துரைகளுக்கு உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக வைத்து,
பிறகு அவற்றைக் கட்டணப் பரிந்துரைகளாக மாற்றுவார். அடிமையாகி விட்ட ஒருவர் கட்டணம்
கொடுத்து பரிந்துரைகள் பெற்று ஏழையாகிக் கொள்கிறார்.
இலவசப்
பரிந்துரைகளுக்கு அடிமையாவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது பேராசையுடன் தொடர்புடையது.
பேராசையுடன் மட்டுமல்லாது உழைக்காது அதிர்ஷ்டத்தை ஈர்க்க நினைப்பதோடும் தொடர்புடையது.
பேராசையையும்
அதிர்ஷ்டத்தையும் குறி வைத்தே, இணைய வழியிலும் சமூக ஊடகங்களின் வழியிலும் நிறைய பரிந்துரைகள்
வருகின்றன.
இப்போது
இல்லையென்றால் வேறு எப்போதும் என்று மக்களும் அப்போதே அதில் விழுந்து விடுகின்றனர்.
இப்போது
இல்லையென்றால் வேறு எப்போதும் என்று சொன்னவரே, மிக கவனமாக அரசியலில் அடி எடுத்து வைக்கவில்லை
என்பதை மக்கள் சாவகாசமாக மறந்து விடுகின்றனர்.
சில
நேரங்களில் நேரடியாகவே பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து பரிந்துரைகள் என்று கட்டண விவரங்களுடன்
அறிவிப்புகள் அலைபேசி வாயிலாக வருகின்றன. பலர் பத்தாயிரத்தைக் கட்டி ஏமாந்து போன கதைகள்
நிறைய இருக்கின்றன.
இந்தத்
தேசத்தில் ராமாயண, மகாபாரத கதைகளை விட ஏமாந்தவர்களின் கதைகள் அவ்வளவு அதிகம்.
சீதை
மாய மானைக் கண்டு ஏமாறுகிறாள்.
ராமன்
மாரீசனின் மாயக்குரலில் ஏமாறுகிறான்.
பாண்டவர்கள்
சகுனி விரிக்கும் வலையில் ஏமாறுகிறார்கள்.
நவீன
மனிதர்கள் இணையங்களிலும் அலைபேசிகளிலும் ஏமாறுகிறார்கள்.
ஏமாறாமல்
இருப்பதற்கு வழி இருக்கிறதா?
எப்போதும்
உழைக்காமல் இலவசமாகப் பணம் சேர்க்கும் அறிவிப்புகளுக்கு நீங்கள் உங்களைப் பலி கொடுக்காமல்
இருங்கள். அதுதான் நல்லது. இலவசப் பரிந்துரைகளில் அபாயம் உள்ளது.
*****
No comments:
Post a Comment