23 Feb 2025

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன?

அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா?

இனிய நண்பர் காளிதாஸின் கேள்விகள் இவை.

சாமியாடுவதும், அருள்வாக்கு சொல்வதும் எளிய மக்களின் அடக்கி வைக்கப்பட்ட மன உட்கிடக்கையின் வெளிப்பாடுதான்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். அம்பலம் ஏற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கு இருக்காது? ஏழை சொல் அம்பலம் ஏறும் இடம்தான் ‘சாமியாடும்’ அந்த இடம்.

எல்லாருக்குமே ஆழ்மனதில் ஆயிரமாயிரம் ஏக்கங்களும் ஆற்றாமைகளும் உறைந்திருக்கும். அவற்றைப் புரிந்து கொள்பவர்கள் அவற்றை அமைதியாகக் கடந்து சென்று விடுவர். ஏக்கங்களையும் ஆற்றாமைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல், அதற்கு உருவம் கொடுக்க ஏங்குபவர்கள் சமூகக் கட்டுபாடுகள் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் காரணமாகவோ அவற்றை ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கலாம். அப்படி அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்களுக்கான வடிகாலாக அமைவதுதான் சாமியாடுவதும், அருள்வாக்கு சொல்வதும்.

சாமியாடுவதை அறிவியலும் மருத்துவமும் நரம்பியல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனையாகவே அணுகுகிறது. உணர்வியல் ரீதியாக அணுகும் போது ஒடுக்கப்பட்ட மற்றும் அடக்கப்பட்ட மனங்களுக்கு அது ஓர் உளவியல் தேவையாக அமைகிறது.

சாமியாடுவதற்கான சூழல்களும் கவனிக்கப்பட வேண்டியவை. பம்பை, உடுக்கை, மேள, தாளம், எக்காளம் என்று சூழலை உக்கிரமாக்கும் இசைக்கருவிகள் நிரம்பியவையாக இருக்கும். சுற்றியுள்ளவர்கள் சாமியின் மேல் உன்மத்தம் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பர். தங்களுடைய ஏக்கங்களுக்கும் ஆற்றாமைகளுக்கும் ஒரு தீர்வு வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பில் இருப்பர். அப்படிப்பட்ட சூழலில் சாமி வந்து ஆடுவதை மரியாதைக்குரியதாகக் கருதுவர்.

இப்படி உளவியல் பொருத்தப்பாடான சூழ்நிலை ஒருவரைச் சாமியாட வைக்கும். அருள்வாக்கு சொல்ல வைக்கும்.

உண்மையில் அருள்வாக்கு என்பதென்ன? நிறைவேறாத ஒன்று நிறைவேறும் என்றோ, அல்லது நிறைவேறக் கூடாத ஒன்று நிறைவேறாது சொல்லும் நம்பிக்கை வாக்குதான் அது. அப்படி யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும் மனதுக்கு அது ஓர் ஆறுதலாகவும் உளவியல் தேவையாகவும் இருக்கிறது.

சாமி வருவதை அருள் வருதல் என்று சொல்வதாலும், சாமியாடுவதை அருள் வந்து ஆடுதல் என்று சொல்வதாலும், அவர்கள் அப்போது சொல்வதெல்லாம் அருள்வாக்கு ஆகி விடுகிறது.

அருள்வாக்கு பலிக்குமா? பலிக்காதா?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.” (குறள், 664)

என்ற குறள்தான் இதற்கான சரியான பதில். இது அருள்வாக்குக்கும் பொருந்தும்.

எந்த வாக்காக இருந்தாலும் அதற்கான செயல்நடவடிக்கை இருந்தால் மட்டுமே அந்த வாக்கு நிறைவேறும் வாக்காக அமையும். செயல்நடவடிக்கை இல்லையென்றால் அது யாருடைய வாக்காக இருந்தாலும் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லை.

நம் சமூகங்களில் அருள்வாக்கு என்பது ஒருவரைச் செயல் நடவடிக்கையை நோக்கி உந்தித் தள்ளும் உளவியல் காரணியாக அமைவதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாருக்கும் அப்படித்தான் அமையும் என்று இதைப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும், அருள்வாக்கின் மீது நம்பிக்கை கொள்ளும் சமூகமாக நம் சமூகம் இருப்பதையும் நாம் மறுத்து விட முடியாது.

“சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன். கேட்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள் சாமியாடினால்தான் சரிபட்டு வரும்!” என்று வையத்துள் வாழ்வாங்கு வாழும் இல்வாழ்வில் சொல்லப்படும் சாமியாடுதல் வேறு வகையானது. பெண்கள் சாமிகளாக விஸ்வரூபம் எடுக்கும் இடம் அது. பெண்களைத் தெய்வமாக வணங்கி, அந்நேரத்தில் அவர்கள் சொல்லும் அருள்வாக்கை நூறு விழுக்காடு அப்படியே நிறைவேற்ற வேண்டிய தருணங்கள் அவை.

*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...