கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?
கல்விக்கடன் சரியா?
“கற்கை நன்றே கற்கை
நன்றே
பிச்சை புகினும் கற்கை
நன்றே”
என்றார் அதிவீரராம
பாண்டியர். இவ்வரிகள் அவரின் வெற்றிவேற்கை எனும் நறுந்தொகையில் இடம் பெற்றுள்ளவை.
கல்வியின் அவசியத்தை
அவ்வண்ணம் வலியுறுத்தினார் அவர்.
தற்போதைய கால சூழ்நிலை
“கற்கை நன்றே கற்கை
நன்றே
கடன் வாங்கினும் கற்கை
நன்றே
கற்கை நன்றே கற்கை
நன்றே
அடகு வைப்பினும் கற்கை
நன்றே”
என மாறி விட்டது.
உண்மையில் பிச்சை
எடுப்பதும், கடன் வாங்குவதும் ஒன்றா?
பிச்சை எடுப்பதைத்
திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.
கடன் வாங்கியதை அப்படித்
திருப்பிக் கொடுக்காமல் இருக்க முடியாது.
ஏனென்றால், கடன் வாங்கியதைத்
திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கல்விக்
கடன் வாங்கிக் கற்று என்ன நடக்கப் போகிறது?
ஒரு வேலையில் சேர்ந்து
பணம் சம்பாதித்து, அக்கடனை அடைக்க வேண்டியதாக
இருக்கிறது. அதற்கு ஏன் நேரடியாகத் தொழில் கடன் வாங்கி ஒரு தொழிலைத் தொடங்கக் கூடாது?
போகிற போக்கைப் பார்த்தால்,
கல்விக் கடனின் அவலம் இனி மழலையர் பள்ளிகளில் (எல்கேஜி, யுகேஜி) பயிலத் தொடங்கும் போதே
ஆரம்பித்து விடும் போலிருக்கிறது.
அப்படி ஆரம்பமாகாவிட்டாலும்,
மழலையர் கல்வியைப் படிக்க வைப்பதற்குள் வீட்டில் இருக்கும் அண்டா, குண்டான் தொடங்கி
தங்க நகை வரை அடகு வைத்து விடுகின்றனர் அவர்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள்.
அடகு வைத்ததை அப்படியே
விட்டு விடவா முடியும்? அதை மீட்க வேண்டுமே? அதுவும் அடகு வைத்தத் தொகையை வைத்து அப்படியே
மீட்டு விட முடியுமா? வட்டித்தொகையைச் செலுத்திதான் மீட்க வேண்டும். ஆகவே இதுவும் கல்விக்கடன் என்ற வகையில்தான் வரும்.
கல்வி உரிமைச் சட்டம்
மூலமாக அரசாங்கம் 14 வயது வரை இலவசக் கல்வியை வழங்கும் நிலையில், அதுவும் தமிழ்நாடு
போன்ற மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் இலவசக் கல்வியை அரசுப் பள்ளிகளில்
பெற முடிகின்ற நிலையில், பெற்றோர்கள் ஏன் அடகு வைத்தும் கடன் வாங்கியும் தங்கள் பிள்ளைகளைக்
கல்வி கற்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்?
என்னைக் கேட்டால்,
பணத்தை அப்படி விரயமாக்க வேண்டியதில்லை. அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு, தனியார்
பள்ளியில் சேர்த்திருப்பது போலக் கருதிக் கொண்டு, மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை பிள்ளைகளின்
பெயரில் தொடர் வைப்பு (ஆர்.டி) கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் போட்டு வந்தாலே, அவர்களின்
உயர்கல்வி படிப்பைக் கடனில்லாமல் படிக்க வைத்துவிடலாம்.
ஆனால், ஏன் பெற்றோர்கள்
தயங்குகிறார்கள்?
தனியார் பள்ளிகளில்,
வாகனங்களில் சென்று பிள்ளைகள் படிப்பது ஒரு சமூக கௌரவமாகக் கருதப்படுகிறது.
இதனால் அருகிலிருக்கும்
அண்மைப் பள்ளியில் கிடைக்கும் இலவசக் கல்வியைக் கைவிட்டு, காசு கொடுத்துத் தனியார்
கல்வியைப் பெறுகின்றனர்.
இதனால் பெற்றோர்களுக்கு
நான்கு விதமான தேவையற்றச் செலவுகள் ஏற்படுகின்றன.
1. கல்விக்
கட்டணம்
2. தனிப்பயிற்சிக்
கட்டணம்
3. போக்குவரத்துக்
கட்டணம்
4. பாடப்புத்தகங்கள்,
குறிப்பேடுகள் போன்ற கல்விப் பொருட்களுக்கான கட்டணம்
பெற்றோர்கள் இதைப்
புரிந்து கொண்டால் பிச்சைப் புகாமலும், கடன் வாங்காமாலும் தங்கள் பிள்ளைகளைக் கல்வி
கற்கச் செய்யலாம். கல்விக் கற்பதில் அதுவே கௌரவமாகவும் இருக்கும்.
*****
No comments:
Post a Comment