25 Feb 2025

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா?

அல்லது,

தட்டான்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறப்பதற்கான வெளியை நாம் உருவாக்கித் தர வேண்டுமா?

அல்லது,

மரங்கள் வளர்வதற்கான மண்ணை நாம் தயார் செய்து தர வேண்டுமா?

அல்லது,

பறவைகளுக்கு நாம் கூடு கட்டித் தர வேண்டுமா?

அல்லது,

மீன்களுக்கு, பூச்சிகளுக்கு, பறவைகளுக்கு நாம் உணவு வைக்க வேண்டுமா?

இவற்றில் எதையுமே நாம் செய்ய வேண்டியதில்லை.

நாம் அவற்றின் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்தால் போதுமானது.

அவை வாழ்வதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டியதில்லை. இயற்கையாகவே அவை வாழ்வதற்காக இருக்கும் சூழலை நாம் குழைக்காமல் இருந்தாலே போதுமானது.

நாம் இயற்கையைத் தேவைக்கதிகமாகத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும், இந்த உலகில் எல்லா உயிரினங்களும் சந்தோசமாக வாழும்.

இயற்கையை நாம் அபரிமிதமாகத் தொந்தரவு செய்தால், இந்த உலகில் பல உயிரினங்கள் அழியும். முடிவில் அது நம்மையும் அழிக்கும்.

நமது வசிப்பிடங்களுக்காகவும், வசதிகளுக்காகவும் இவ்வளவு காங்கிரீட்டை இந்தப் பூமியில் கொட்ட வேண்டியதில்லை.

நம்முடைய ஆசைகளுக்காகவும் ரசனைகளுக்காகவும் நாம் இவ்வளவு பொருட்களை நுகர வேண்டியதில்லை.

வணிக லாபங்களுக்காக நாம் இவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டியதே இல்லை.

எதற்காக நாம் இவ்வளவு வாகனங்களையோ, தொழிற்சாலைகளையோ இயக்க வேண்டும்? இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் அபரிமிதமாகி அனைத்து உயிர்களுக்குமான சாதகமான புவியியல் சூழலைப் பாதிக்கின்றன. நிறைய கழிவுகளையும் நச்சுகளையும் உருவாக்கி ஒவ்வொரு உயிராக அழித்துக் கொண்டே வந்து முடிவில் மனித குலத்தையும் அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பூமியில் மண் இருக்க வேண்டும். அவற்றை முற்றிலும் காங்கிரீட்டால் மூடி விடக் கூடாது. இந்தப் பூமியில் மரங்களின் பசுமை இருக்க வேண்டும். அதை வெட்டிச் சாய்த்து, குளிர்சாதன வசதிகளில் குளுமையைத் தேடி விட முடியாது.

நாம் இந்தப் பூமியில் எதையும் பாதுகாக்கவும் வேண்டியதில்லை. பராமரிக்கவும் வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் இயற்கையை விட மிகப்பெரிய சக்தியோ, தாயோ இல்லை. நமக்கே மிகப்பெரிய சக்தியும் தாயும் இயற்கையே.

இயற்கையே அனைத்தையும் பாதுகாக்கும், பராமரிக்கும் அழிவில்லாத சக்தியையும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. அதன் ஆற்றலில் நாம் குறுக்கிடாமல் இருந்தால் போதும். நம் ஆசைகள் அதன் பல்லுயிர் பேணும் ஆற்றலில் குறுக்கிட வைக்கின்றன. சமநிலைக்கான சக்தியை நாசம் செய்ய பார்க்கின்றன.

இயற்கையோடு இயைந்து செல்லும் போது, இயல்பாகவே நாம் பல்லுயிர் காக்கும் பாதுகாவலராக நம்மை அறியாமலே நாம் மாறி விடுகிறோம். இதற்காக எவ்வித மெனக்கெடலோ, போராட்டமோ தேவையில்லை. நாம் போராட வேண்டியது நமக்குள்தான். நம் ஆசைகளிடமும், பெருவிருப்பங்களுடனும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது.

இந்தப் பூமியில் பிறந்து மடிகின்ற உயிர்கள் அனைத்தும் வாழ்ந்ததற்கான அடையாளம் இல்லாமல் மடிகின்றன. பறவைகள் பறப்பதால் வானத்தில் சுவடுகள் தெரிவதில்லை. மீன்கள் நீந்திய பாதைகள் கடல்களில் இருப்பதில்லை.

மனிதன் வாழ்ந்ததற்கான நெகிழிகளும், பிளாஸ்டிக்குகளும் அடையாளங்களாய் இந்தப் பூமியில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அப்படியே நீடித்திருக்கப் போகின்றதோ, தெரியவில்லை.

சுவடுகள் இன்றி, தடங்கள் இன்றி இந்தப் பூமியை அடுத்தத் தலைமுறைக்கு நம்மால்கொடுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி கொடுக்க முடிந்தால், நம்முடைய அடுத்த தலைமுறை மனிதர்கள் பாக்கியவான்கள். இல்லையென்றால் அவர்கள் நாம் செய்த வினைக்குப் பாவத்தை அறுவடை செய்கின்ற பாவிகளன்றி வேறல்லர்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...