31 Jan 2019

மக்கள்தொகைக் கட்டுபாடு குறித்து திருவள்ளுவர்


மக்கள்தொகைக் கட்டுபாடு குறித்து திருவள்ளுவர்
  
          இந்த உலகுக்கு மக்களே வளம். எந்த வளமும் அளவோடு இருக்க வேண்டியது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி இதனைக் கருத்தில் கொண்டே முன்வைக்கப்படுகிறது.
            எந்த வளர்ச்சிக்கும் ஓர் அளவு இருக்கிறது. அளவற்ற வளர்ச்சி புற்றுநோயைப் போல அச்சுறுத்தலை உருவாக்கி விடும்.
            அளவுக்கு மிஞ்சி மக்கள் தொகைப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்றால் அதுவே பற்றாக்குறைக்கு வழிவகுத்து விடும்.
            உணவுப்பொருட்களின் வளர்ச்சி கூட்டல் விதியின் அடிப்படையில் பெருக்கமடைந்தால், மக்கள் தொகை வளர்ச்சி பெருக்கல் விதியின் அடிப்படையில் பெருக்கமடைவதாக மால்த்தஸ் என்ற ஓர் அறிஞர் குறிப்பிடுகிறார்.
            இந்த உலகில் இடம் இல்லாவிட்டால் இன்னொரு உலகில் குடியமர்த்துவோம் என்று விஞ்ஞானம் தன் பங்குக்கு ஆராய்ச்சிக் கரங்களை நீட்டிக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இந்த பூமி எதிர்கொண்டு இருக்கும் முக்கியமானப் பிரச்சனைதான்.
            மக்களே மக்கள் தொகைக் கட்டுபாடு குறித்துச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் சாதக பாதகங்களை மனதுக்குள் அலசிப் பார்க்கிறார்கள். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளோடு இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இன்று ஒற்றைக் குழந்தையின் பெற்றோர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்.
            தேவையே கண்டுபிடிப்புகளின் தாயாகி பிறப்பைத் தள்ளி வைப்பதற்கான சாதனங்கள், பிறப்பைத் தடுப்பதற்கான சாதனங்கள் பிறப்பெடுக்க காரணமாகி விட்டன. பிறப்பைத் தடுப்பதற்கான மற்றும் கட்டுபடுத்துவதற்கான சாதனங்கள் குறித்த விழிப்புணர்வுகள் பரவலாகி விட்டன.
            தங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தால் தங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதைப் பெற்றோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். அதன் செம்மையானப் பொருள் குறித்து அவர்கள் சிந்திக்கிறார்கள்.
            அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது பேதைமை என்பது புரிய ஆரம்பித்து இருக்கிறது.
            அதாவது எத்தனைக் குழந்தைப் பிறப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை இச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உணரத் தலைபட்டு இருக்கிறார்கள். அது குறித்த செம்மையான கருத்தாக்கம் அவர்கள் மனதில் இருக்கிறது.
            வள்ளுவர் குறிப்பிடுவது போல,
            பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்கிற அறிவு வந்து விட்டது.
            மெய்யுணர்தல் (அதிகாரம் 36) எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு ஆன்மிக அர்த்தம் கற்பிக்கப்படுவதை விட இந்த அர்த்தம் சிறப்பாக உள்ளது அல்லவா!
            பிறப்பு என்கிற அதிக குழந்தை பிறப்பு குறித்த பேதைமை நீங்கி, எத்தனைக் குழந்தைப் பிறப்புகள் தேவை என்கிற செம்மையான பொருளைக் காண்பதே அந்தந்த கால கட்டத்திற்கான அறிவு என்பதாக இக்குறளின் பொருளைக் கொள்வதால் பிழை எதுவும் நேராது என்றே நினைக்கிறேன்.
            இந்த ஒரு பிறப்பு போதும், மறுபிறப்பு வேண்டாம் என்பதான ஆன்மிகப் பொருள் இக்குறளுக்குக் கூறப்படும். அதையே இந்த ஒரு குழந்தை பிறப்பு போதும், பெருகி விட்ட மக்கள் தொகையில் இன்னொரு மறுபிறப்பு அதாவது இன்னொரு மறு குழந்தை பிறப்பு தேவையில்லை என்பதாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு குழந்தைகள் தேவை என்பவர் இந்த இரு குழந்தை பிறப்பு போதும், மீண்டும் மறுபிறப்பாக மூன்றாவது மறு குழந்தை பிறப்பு வேண்டாம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
*****

தரிசனம் முடிந்து விட்டது


தரிசனம் முடிந்து விட்டது
த்தனைப் பொருட்களையும்
வாங்கிக் கேட்கும் குழந்தைக்கு
எதையும் வாங்கித் தராத இயலாமையில்
கோவிலை விட்டு வெளியேறுகிறார் கடவுள்
தரிசனம் வேண்டி உள்ளே சென்று
வெளியேறி விட்டக் கடவுளைக்
கண்டு விட்டத் திருப்தியோடு
திரும்பும் வழியில்
எந்தப் பொருள் எடுத்தாலும்
இரண்டு ரூபாய்க் கடையில்
தான் விரும்பிய பொருள் ஒன்றை
எடுத்துக் கொள்கிறது குழந்தை
செய்தியறிந்து கோவிலுக்குத்  திரும்புகிறார் கடவுள்
தரிசனம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம் நாம்
*****

30 Jan 2019

தமிழர்களின் சினிமா ரசனை


கலையே கொலையெனப் புரியும் தமிழா!
            ஒரு கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரோடு ஆக்சிடெண்டில் இறப்பவர்களை விட கட் அவுட் வைக்கப் போய் தடுமாறி இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு ஆக்சிடெண்டல் டெட் என்றாலும் இதை ரோடு ஆக்சிடெண்ட் வகையோடு சேர்க்க முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கிளைமும் கிடையாது.
            இப்படிச் சாகுபவர்கள் ஒரு வகை என்றால், சினிமா டிக்கெட்டுக்குப் பணம் கொடுக்காததால் அப்பாவைச் சாகடிப்பவர்கள் இன்னொரு வகை.
            தமிழ்நாட்டில் வெண்மை புரட்சியில் சாதனை படைத்த ஒரு மாநிலம் என்பதை கட் அவுட்டுகளுக்கு ஊற்றப்படும் பாலைப் பார்க்கும் போது தோன்றும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பால் பாக்கெட்டுகளின் உற்பத்திப் பெருகியிருக்கிறது என்பதாக இதில் இன்னொரு பொருள் இருக்கிறது என்றும் கருதிக் கொள்ளலாம்.
            கட் அவுட்டுகளுக்கு பீரைப் பீய்ச்சி அடித்து ஊற்றும் போது இது என்னவகைப் புரட்சிக்குச் சாதனை படைக்கும் ஒரு முயற்சி என்று யோசித்து இருக்கிறேன். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பீர் உற்பத்திப் பெருகியிருக்கிறது என்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
            உலக அளவில் தமிழர்கள் அளவுக்கு சினிமா பித்துப் பிடித்தவர்கள் இருக்கிறார்களா என்று உலக நாடுகள் பல சுற்றி வந்த யாராவது இருந்தால் அவசியம் சொல்ல வேண்டும். பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்கி துட்டு செலவு பண்ணி சுற்றி வர என்னிடம் அவ்வளவு டப்பு இல்லை.

            இப்போது டி.வி., இண்டர்நெட் என வந்து அந்தப் பித்தை சீரியல்கள், பேஸ்புக், வாட்ஸ்அப் என்று பங்கு போட்டுக் கொண்டாலும் சினிமா பித்து என்பது இன்னும் குறைந்தபாடில்லை.
            இணையத்திலும் சினிமா பற்றி கும்மாங்குத்து குத்திக் கொள்வதும், டப்பாங்குத்து டான்ஸ் ஆடுவதும் நின்று விட்டதா என்ன?
            ரசிகர்கள் முட்டிக் கொண்டாலும், மோதிக் கொண்டாலும் காசு போய் சேர வேண்டியவர்களுக்குப் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. தான் வியாபாரப் பண்டம் ஆகி விட்டோம் என்ற பிரக்ஞை இல்லாமல் தமிழன் செய்யும் லந்துகள் இருக்கிறதே! நீங்களே யோசித்துப் பாருங்களேன், தமிழகத்தில் நற்பணி மன்றங்களை அதிக அளவு கையிருப்பில் நடிகர்கள்தானே வைத்து இருக்கிறார்கள். அது என்ன நற்பணியோ?! வீட்டில் அண்டா, குண்டான்களில் பாலூற்றி கட் அவுட்டுகளுக்கு ஊற்றி, அப்புறம் அதற்கே பாலூற்றி யாருக்கும் தெரியாமல் அடகு போவதுதான் மிச்சம்.
*****

தமிழர்களின் திருமண கலாச்சாரம்


சொர்க்கத்துக்கு ஒரு டோக்கன்
            மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.
            பெண் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.
            இந்த வாசகங்களைக் கேட்காமல் கடக்கும் காதுகள் வாய்த்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். அந்தப் பாக்கியம் தமிழ்நாட்டவர்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.
            தமிழ்நாட்டில் மாப்பிள்ளைகளுக்கா பஞ்சம்? மணப்பெண்களுக்கா பஞ்சம்?
            மாப்பிள்ளைகள், மணப்பெண்கள் இருக்கிறார்கள். சாதிக்கு ஏற்ற மாப்பிள்கைள், மணப்பெண்கள் என்று பார்த்தால் 50 சதவீதம் காலியாகி விடுவார்கள்.
            மீதி இருக்கும் 50 சதவீதத்தில் ஜாதகத்துக்கு ஏற்ற மாப்பிள்ளைகள் மணப்பெண்கள் என்று பார்த்தால் 30 சதவீதம் காலி.
            மீதி இருக்கும் 20 சதவீத மாப்பிள்ளை மணப்பெண்களில் அரசாங்க வேலை என்று ஒரு சல்லடையைப் போட்டு சலித்தால் 10 சதவீத மாப்பிள்ளைகள் மணப்பெண்கள் காணாமல் போய் விடுவார்கள்.
            மீதி இருக்கும் 10 சதவீத மாப்பிள்ளை மணப்பெண்களில் மாமியார், மாமனார், நாத்தனார் - கூட்டுக் குடும்பம் என்று டபுள் பில்டர் காபியைப் போட்டால் 10 சதவீதமும் காலி.

            மிச்சமிருக்கும் 0 சதவீதத்தில்தான் மாப்பிள்ளை, மணப்பெண் எல்லாம் பார்க்க வேண்டும். அதெப்படி 0 சதவீதத்தில் அதைப் பார்க்க முடியும் என்று கேட்க மாட்டீர்கள். அது பார்க்க முடியும். அதற்கு நீங்கள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள், கல்யாணத்தையெல்லாம் தமிழ்நாட்டில் நிர்ணயிக்க முடியாது! சொர்க்கத்தில்தான் நிச்சயிக்க முடியும் என்று? நம் முன்னோர்கள் முட்டாள்களா என்ன?!
*****

29 Jan 2019

தஸ்தயேவ்ஸ்கியை வாசித்தல்


தஸ்தயேவ்ஸ்கியை வாசித்தல்
           
பேராசிரியர் ஜான் பீட்டர் ஐயாதான் சொன்னார்கள், தஸ்தயேவ்ஸ்கியை அவசியம் வாசிக்க வேண்டும் என்று. அதிலும் குறிப்பாக "கரமசோவ் சகோரர்கள்" எனும் நாவல் பற்றி.
நாம் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது நம் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கூட அந்த நாவல் துல்லியமாகப் பேசும் என்றார் ஐயா.
            நூலகர் ஆசைத்தம்பி ஐயாவிடம் இதைச் சொன்ன போது கரமசோவ் சகோதர்களோடு வந்து விட்டார். இரண்டு தடிமனானப் புத்தகங்கள். எப்படியும் ஒவ்வொன்றும்  ஐநூறு அறுநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
            இருபது பக்கங்கள், பத்து பக்கங்கள், முப்பது பக்கங்கள் என்று ஒவ்வொரு நாளாக நாவல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில நாட்கள் ஐந்து பக்கங்கள்.
            நாவலின் இருநூறு பக்கங்களைத் தாண்டிய பிறகு கிடைத்த வேகம் இருக்கிறதே. அடேங்கப்பா!
            நாவலை முழுமையாக வாசித்து விட்டுதான் எழுத வேண்டும். வாசிப்பிற்கு இடையிலேயே எழுதுவதற்காக நீங்கள் என் மீது கோபப்பட்டால் அதற்காக மன்னிப்பு கொடுத்து விடுங்கள்.
            நீதிமன்ற விசாரணையை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். என் தங்கையின் விசயத்தில் நேரடியாக பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.
            பெண்கள் விசயத்தில் குறிப்பாக ஜீவனாம்ச வழக்கு சார்ந்த குறுக்கு விசாரணைகளில் விஷ கொடுக்கு கொட்டுவது போல எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேட்பார்கள். கிராமத்தில் கதண்டு எனும் விஷ ஜந்து பற்றிச் சொல்வார்கள். நான்கு கதண்டுகள் கொட்டினால் ஆளே காலியாகி விடுவார் என்பார்கள்.
            அப்படித்தான் அந்த விசாரணைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டுபெட்டியான கலாச்சாரத்திலிருந்து வளர்ந்து வரும் பெண்களுக்கு அப்படி ஒரு குறுக்கு விசாரணை என்பது அதிகபட்ச தண்டனை. கிட்டதட்ட விஷக்கொட்டுகள். அத்தனை விசாரணைக் கொட்டுகள் கொட்டிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு நிற்க ஏதோ ஒன்று மனதில் வேண்டும்.
            கரமசோவ் சகோதரர்களும் அப்படி ஒரு விசாரணையாகத்தான் எனக்குத் தெரிகிறது. கரமசோவின் குடும்பத்தையே குறுக்கு விசாரணை செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது நாவல்.
            ஒரு தவறான தகப்பனுக்கு மூன்று விதமான பிள்ளைகள். ஒரு தவறான தகப்பனாகத் தோற்றம் தரும் கரமசோவைப் பற்றியும் தஸ்தயேவ்ஸ்கி நியாயமான விசாரணையை நிகழ்த்துகிறார். அதாவது எழுத்தில்.
            ஒரு நாவலை உருவாக்குவதற்காக அவர் உருவாக்கிக் கொண்ட பாத்திரங்களா இவர்கள்? அல்லது அவர் வாழ்வில் கண்ட பாத்திரங்களின் புனைவின் வடிவங்களா? என்று நானும் மன விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
            வாசித்து முடித்த பின் மீண்டும் எழுதுகிறேன்.
*****

மாறி விட்ட தமிழர் உணவியல்


கல்யாண சமையல் சாதம்!
            மகேசின் கல்யாணத்துக்கு கிளம்புவதற்கு நேரமாகிக் கொண்டிருந்தது. வழக்கமாக ஒவ்வொரு திருமணத்தின் போதும் நடக்கிற விசயம்தான் இது. சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்று நினைத்து எப்படியும் லேட் ஆகி விடும்.
            எட்டு மணிக்குக் கிளம்ப வேண்டிய நேரத்தை ஏழரை என்று தீர்மானித்தும் எட்டரை மணி ஆகி விடுவதுண்டு. பெண்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. அவர்கள் சேலையைத் தேர்வு செய்வதற்குள் கல்யாணத்தை முடித்துக் கொண்டே திரும்பி விடலாம். சேலையைத் தேர்வு செய்து விட்டால் மேக் அப்பில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
            இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு கிளம்பினாலும் கல்யாண சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாப்பிள்ளையுடனும் மணப்பெண்ணுடனும் போட்டோ செஷன் முடிந்து விட்டால் எப்போ வீட்டுக்குக் கிளம்புவது என்று திரும்ப திரும்பக் கேட்டு கொன்றே போட்டு விடுவார்கள்.
            மகேசின் கல்யாணத்திலும் அப்படி ஆகி விட்டது. கிட்டதட்ட எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டால் குழந்தைகளை விட மோசமாக நடந்து கொள்வார்கள்.
            "சர்ரி கிளம்பு!" என்று ஆரம்பித்து வெளியே வந்த போது மகேசின் அம்மா பிடித்துக் கொண்டார்கள்.
            "கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் முடிஞ்சவுடனே கிளம்பிட்டாங்க. மண்டபத்தைப் பாரு. கூட்டமே இல்ல. நீங்களும் போய்ட்டீங்கன்னா எப்படி? இருந்து மதியானச் சாப்பாட்டைச் சாப்பிட்டுப் போகணும்யா!" கெஞ்சாத குறையாக கேட்டார் மகேசின் அம்மா.
            மறுபடியும் மண்டப ஹாலுக்கு நுழைந்தோம். இடித்தபுளி கணக்காக ஆங்காங்கே சிலர் உட்கார்ந்திருந்தார்கள். நிறைய நாற்காலிகள் காலியாய்க் கிடந்தன. தாலி கட்டும் நேரத்தில் இப்படிப் பார்க்க முடியாது. நிற்க இடம் இருக்காது. தாலி கட்டி முடித்த அடுத்த செகண்டில் எப்படி அவ்வளவு நாற்காலிகளும் காலியாகின்றன என்பது நிச்சயம் அறிய முடியாத மாயம்தான்.
            இப்போதெல்லாம் கல்யாணத்துக்குச் செல்பவர்கள் யாரும் சாப்பாட்டைப் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஒரு காலத்தில் கல்யாணச் சாப்பாட்டுக்காக அடிதடி, கும்மாங்குத்துகள் எல்லாம் விழுந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாளில் ஒருவர் பல திருமணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
            எனக்குப் பொழுது போக அந்த மண்டபத்தில் நிறைய அம்சங்கள் இருந்தன. மனைவிக்குப் பொழுது போக வேண்டுமே. அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு வாட்ஸ்அப்பில் மூழ்கினாள். பல நேரங்களில் வாட்ஸ்அப் மேசேஜ்களை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்து விடும் அவள் ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள். வீடியோவாக இருந்தால் டவுன்லோட் செய்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இல்லையென்றால் கிளம்புணும்ங்க என்று நச்சரித்து விடுவாள்.
            ஒரு சிறுவன் அங்கிருந்த பலூன்களைக் கொத்தாக அறுத்து எடுத்துக் கொண்டு உதைத்து உதைத்து விளையாடினான். அவனது அப்பா வந்து தடுத்த போது அவரது முகத்தில் பலூனை வீசி அடித்தான். அவர் அதற்கு மேல் முடியாது என்பது போல சிரித்துக் கொண்டே நகர்ந்தார். சிறுவனுக்கு வசதியாகப் போய் விட்டது. எல்லார் முகத்திலும் பலூனை வீசி வீசி அடிக்க ஆரம்பித்தான். என் முகத்திலும் வீசி அடித்தான். நான் கண்டுகொள்ளாதது போல உட்கார்ந்ததால் தப்பித்தேன். கண்டுகொண்டவர்கள் முகத்தில் வேண்டுமென்றே வீசி வீசி அடித்தான். வேடிக்கையாக இருந்தது.
            மாப்பிள்ளையும் பொண்ணும் போட்டோ செஷனில் பிசியாக இருந்தார்கள். மாப்பிள்ளைப் பெண்ணை இரண்டு கரங்களில் தூக்கி, கட்டிப் பிடித்து, கன்னத்தின் அருகே முகம் வைத்து பல விதங்களில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா மண்டபத்தில் கவனிக்க நிறைய அம்சங்கள் இருக்கின்றன என்று.
            மணமேடையில் காலியாக இருந்த வி.ஜ.பி. சேரில் இரண்டு சிறுமிகள் ஏறி அமர்ந்து கொண்டு விளையாடினார்கள். "மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிச்சிடுவோமா?" என்று ஒரு பெரியவர் ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு சொன்னதைக் கேட்டு அந்தச் சிறுமிகள் சிரிக்காமல் ஏமாற்றினர்.
            அரை மணி நேரம் ஆயிருக்கும். மதிய சாப்பாடு தயாராகி விட்டதாக வந்து அழைத்தனர். மணி பத்தே கால்தான். காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடித்த போது ஒன்பதே முக்கால்.
            பந்தியில் போட்டிருந்த இலைகளுக்கு சத்தியமாக ஆட்கள் இல்லை. எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் ஒருவழியாக எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். நான் அதில் விதிவிலக்கு. வரிசையாக சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், பாயாசம், தயிர் என்று ஒரு பிடி பிடித்தேன். மூன்று முறை கறி வகைகளை வைக்கச் சொல்லி கலவரப்படுத்தினே். எப்படி பாஸ் இப்படி என்பது போல எல்லாரும் பார்த்தார்கள். இதிலென்ன இருக்கிறது? பரிமாறுபவர்களைக் கொஞ்சமாவது சந்தோஷப்படுத்த வேண்டும் இல்லையா! அவர்கள் எது கொண்டு வந்தாலும் கொஞ்சமாக என்றோ வேண்டாம் என்றோ சொன்னால் அவர்கள் முகந்திரிந்து வாடி விடுவார்கள் இல்லையா!
            மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
            விருந்தினர்கள் முகம் வாடக் கூடாது என்பார் வள்ளுவர். உபசரிப்பவர்கள் முகமும் வாடக் கூடாது அல்லவா!
            காலையில் பொங்கல், கேசரி, பூரி, பாத்து, தோசை ஒன்று, இட்டிலி நான்கு, போன்டா இவைகளையும் சாப்பிட்டு, மதியானச் சாப்பாடாக அது காலையில் பத்தே காலுக்குப் பரிமாறப்பட்டாலும் நான் மேற்சொன்ன வகையறாக்களையும் சாப்பிட்டு எழுவதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும் என்பது போல எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
           
கல்யாண சமையல் சாதம் என்று பாடிக் கொண்டே சாப்பிடுவாரே ரங்காராவ். அவரைப் பார்ப்பது போல என் மனைவி என்னைப் பார்த்ததுதான் விஷேசம்.
            மகேசின் அம்மாவுக்கு திருப்தி.
            இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். அண்மை பத்தாண்டு காலத்தில் கல்யாணத்தில் நான் காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் ஒருங்கே சாப்பிட்ட கல்யாணம் இதுதான்.
            அதற்கு முன்பெல்லாம் சாப்பிடுவதற்காகவே கல்யாணத்துக்குப் போன நாட்கள் எல்லாம் உண்டு. "கல்யாணச் சாப்பாடு எப்ப மாப்ளே போடப் போறே?" என்று கேட்டே விடுவார்கள்.
            இப்போ...?
            "கல்யாணச் சாப்பாடெல்லாம் ஒத்துகிட மாட்டேங்குது மாப்ளே!" என்று சொல்கின்ற ஒரு தலைமுறை உருவாகி விட்டது.
            உங்களுக்குத் தெரியுமா?
            இது என்ன திடீரென்று பொதுஅறிவு ஆசானாக கேள்வி கேட்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
            ஒவ்வொரு திருமணத்தின் போதும் அவ்வளவு உணவு வகைகள் வீணாகின்றன. அவ்வளவு உணவு வகைகள் வீணாகும் தேசத்தில்தான் பட்டினியோடு போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்!
            மகேசின் அம்மா கூட பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார். பட்டினி கிடந்து பிள்ளைகளுக்காகக் காசு பணம் சேர்த்திருக்கிறார். அப்படி பட்டினி கிடந்து காசு பணம் சேர்த்ததெல்லாம் இப்படி பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கத்தான். 
*****

28 Jan 2019

அரசியல் என்பதன் வரையறை


ஆப் ஸ்விட்ச் மோடு
நான் யாரிடமும் ஏமாந்ததில்லை என்பவர்களைக் கேட்கிறேன்... நீங்கள் உங்கள் தலைமையிடம் கூடவா ஏமாந்ததில்லை? தலைமையிடம் ஏமாறாதவர் தொண்டரே இல்லை. தொண்டரை ஏமாற்றாதவர் தலைவரே இல்லை. கோவிச்சாதீங்க பாஸ்! தலைவர் என்றால் தொண்டரை ஏமாற்ற வேண்டும், தொண்டர் என்றால் தலைவரிடம் ஏமாற வேண்டும். அதுதான் அரசியல். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும். யாரும் ஏமாறவில்லை என்றால் அரசியல் அநாதையாகிவிடும் எம் பேரன்பிற்குரிய எம் மக்கா!
&&&
எனக்குத் தேர்தலில் போட்டியிட ஆசையா? என்று பலர் கேட்டிருக்கிறார்கள். ஆசை இல்லாமல் இருக்குமா? காசுதான் இல்லை, கொஞ்சம் காசு கொடுங்கள் என்று கேட்ட பிறகு இப்போது யாரும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. அதிகமாகவும் அநாவசியமாகவும் கேள்வி கேட்பவர்களிடம் காசு கொடுங்கள் என்று கேட்டால் அதன் பின் கேள்வி கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
&&&
கல்வி கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கல்வியே மனிதனை மேம்படுத்தும், வளப்படுத்தும் என்று சொன்னார்கள். எனக்கோ மகிழ்ச்சி. ஒரு லிட்டர் தேனை ராவாக குடிக்க வேண்டும் போலிருந்தது. அத்தோடுதான் விட்டார்களா என்றால், மனிதரின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துவதுதான் கல்வி என்று சொல்லிப் புல்லரிக்க வைத்தார்கள். அப்புறம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் மார்க் எடுப்பதற்கு ஷார்ட் கட் மெத்தேடுகள் சொன்னார்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் குழந்தைகளைச் சேர்ப்பதன் அவசியத்தைச் சொன்னார்கள். எல்லாம் சொல்லி விட்டு என்னைப் பேசச் சொன்னார்கள். சாப்பாட்டு பந்திப் போட்டு விட்டார்கள் போல இருக்கிறது, வாசம் வருகிறதே என்றேன். அடித்துத் துரத்தி விட்டு விட்டார்கள். கல்வி கருத்தரங்கங்களை ஹேண்டில் செய்வது ரொம்பவே கஷ்டம் பாஸ்!
*****

சோம்பல் குறித்து வள்ளுவரும் பில்கேட்ஸூம்


சோகப்படாத சோம்பல்காரர்கள் சங்கம்
சில பொழுதுகளில் இருக்கும் சுறுசுறுப்பு அபாரமானது. ஒரு மலையைத் தூக்கி வைத்தாலும் தூக்கிக் கொண்டு போய் விடலாம்.
சில பொழுதுகளில் இருக்கும் சோம்பல் அசாதாரணமானது. ஒரு துரும்பைத் தூக்கிப் போடக் கூட ஏலாது.
சோம்பலாக இருக்கும் அந்தப் பொழுதுகளில் சுறுசுறுப்பாக இருக்கக் கூடாதா என்ற எண்ணம் வந்து மனதை உலுக்கும்.
இந்தச் சோம்பலால் ஒரு பயனும் இல்லை என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படிச் சோம்பலாக இருந்த கணங்களில் எவ்வளவு சிந்தனைகள், எவ்வளவு கற்பனைகள். எண்ணிச் சொல்வதற்கு நட்சத்திரங்கள் போதாது.
திருவள்ளுவர் மடியின்மை பற்றி பேசுகிறார்.
ஆக்கம் வருவதற்கு மடியின்மை முக்கியம் என்கிறார்.
அதாவது குறிப்பாக செல்வ பெருக்கத்திற்கு அதன் மூலம் உண்டாகும் வாழ்க்கை வளத்திற்கு அதுவே அடிப்படை.
அந்தக் காலத்தில் சோம்பலாக இருந்து அவர் அரசராக இருந்தால் நிலப்பகுதியை இழப்பார். இக்காலகட்டத்தில் சோம்பலாக இருந்து அவர் ஆள்வோராக இருந்தால் ஆட்சியை இழப்பார். குடிமகனாக இருந்தால் வளமான வாழ்வை இழப்பார்.
இதெல்லாம் வள்ளுவர் கூறும் கருத்துகள்.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி என்று இன்னொரு இடத்திலும் ஊழ் என்ற அதிகாரத்தில் சோம்பலைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார்.
அங்கும் செல்வமே மையம். செல்வத்தைக் கைப்பொருள் என்கிறார் வள்ளுவர்.
நல்ல விதி இருக்கும் போது சுறுசுறுப்பு ஏற்பட்டு செல்வம் சேரும். அது இல்லாத போது சோம்பல் ஏற்பட்டு இருக்கின்ற செல்வமும் போகும் என்பது அவரது வாதம்.
குறிப்பாக சுறுசுறுப்பு-சோம்பல் என்ற வாதம் செல்வத்தை மையமாகக் கொண்டே வரையறைக்கு உள்ளாகிறது.
வழக்கத்திலும் இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? வேலைக்குப் போனாத்தான் நாலு காசு பார்க்க முடியும்! என்று திட்டும் இடத்திலும் சோம்பல் என்பது செல்வத்தை மையமாகக் கொண்டுதான் சுழல்கிறது.
பணக்காரர்களை அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் சோம்பலாக இருப்பதை சொகுசு என்பார்கள். அதுவே ஏழைகள் சோம்பல்பட்டால் தரித்திரம் என்று திட்டுவார்கள்.
சோம்பலாக இருப்பதற்கு செல்வம் தேவைப்படுகிறது. அது இல்லாதவர்கள் வசைமொழிக்கு ஆளாகாமல் சுறுசுறுப்பாக இருப்பதே நல்லது.
இப்படியெல்லாம் பேசுவதால் இது சோம்பலை ஆதரிக்கும் வாதம் அல்ல. சோம்பல் என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதற்கான வாதம். இதைப் பற்றிச் சிந்தித்தது கூட சோம்பலாக இருந்த ஒரு பொழுதில்தான். சிந்தித்ததை எழுதியது சுறுசுறுப்பான ஒரு பொழுதில்தான். என்னைக் கேட்டால் சோம்பல்-சுறுசுறுப்பு இரண்டும் தேவையாகத்தான் இருக்கிறது.
சோம்பல் என்ற வார்த்தை பிடிக்கவில்லை, ஓய்வு என்று நாகரிகமாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் மகிழ்ச்சியே.
இல்லையில்லை உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்காமல் இருப்பதுதான் சோம்பல், உழைத்த பின் உழைக்காமல் அமைதியாக இருப்பது ஓய்வு என்ற வரையறை விளக்கம் சொன்னாலும் சரிதான்.
அதற்காக எப்போதும் சோம்பலாக இருக்க முடியாது, எப்போதாவது சோம்பலாக இருக்கலாம் என்று உங்களக்கு நீங்களே தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
சோம்பல்படுபவர்கள்தான் ஒரு வேலையைச் சுலபமாக செய்வதற்கான ரூட்டைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று பில்கேட்ஸ் கூட சொல்லியிருக்கிறார்.
இதையே ஒரு சாக்காக வைத்து சோம்பலாக இருந்து கொள்ளலாம். யாராவது ஏன் இப்படிச் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்டால் சுலபமான ரூட்டைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம். அது என்ன சுலபமான ரூட் என்றால் எந்த வேலையைச் செய்யச் சொல்கிறார்களோ அந்த வேலையைச் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதுதான் சுலபமான ரூட்.

பின்னே என்ன மக்கா? வேலையைச் செய்பவரிடமே எல்லா வேலைகளையும் தள்ளுகிறார்கள். சோம்பலாக இருப்பவரைப் பார்த்து அவர் எந்த வேலையையும் செய்ய மாட்டார் என்று ஒரு வேலையும் கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.
அப்புறம் இன்னொரு விசயம், சோம்பல்படுபவர்களிடம் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிப் பாருங்களேன். அவர்களுக்கு வரும் கோபம் இருக்கிறதே! கோபப்படுவதில் அவர்களைப் போல சுறுசுறுப்பான ஆசாமிகளை இந்த உலகில் பார்க்க முடியாது.
பணம் வேண்டாம் என்றால் சோம்பலாக இருந்து விடலாம். அது வேண்டியிருக்கிறதே. அதற்காகவேனும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த உலகமே அதனால்தான் சுறுசுறுப்பாக இருக்கிறதோ என்று கூட சந்தேகப்படுகிறேன்.
*****

27 Jan 2019

நெட்ல விட்டுடுவேன்...


ஒன்றா? இரண்டா? மர்ம மரணங்கள்!
எல்லாவற்றையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களைப் பார்த்தால் இங்கு சி.பி.ஐ.க்கு தனி பிராஞ்ச்தான் ஆரம்பிக்க வேண்டும்.

&&&
இரத்தக் கொதிப்பு என்று பொது மருத்துவமனைக்கு மாத்திரை வாங்கச் சென்ற தாத்தாவுக்கு மனதில் தோன்றியது, 'கோபப்பட்டால் ரத்தம் சூடாகிறது. ரத்தம் சூடானால் கோபம் உண்டாகிறது.'
இளரத்தம் எப்போதும் சூடாகி விடும் என்றாலும்,
ஹெச்.ஐ.வி. வராமல் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஹெச்.ஐ.வி. இல்லாத ரத்தமா பார்த்து ஏத்துங்கோ! என்று அங்கே நின்று கொண்டிருந்த இளரத்தங்கள் ரத்தம் சூடாகி கோபப்படுவதைப் பார்த்த தாத்தா மாத்திரை வாங்காமலே வந்து விட்டார். தனக்கு அப்படி ரத்தம் கொதிக்கவில்லையே என்ற  ஓர் ஆதங்கம் அவருக்கும் இருக்கிறது.
&&&
நெட்ல விட்டுடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஆண் தோழனிடம், வுட்டுத் தொலைச்சுக்கோ என்று சலித்துப் போய் சொன்னாள் அந்த பெண் ‍தோழி. என்ன ஓர் ஆணவம் என்று விட்டுத் தொலைத்தான் ஆண் தோழன். ஒருவர் கூட பார்க்கவில்லை. ஒரு லைக்ஸ் கூட போடவில்லை. என்ன கொடுமை தோழி பார் என்று கடைசியில் அந்த பெண் தோழியிடமே புலம்பியிருக்கிறான் அந்த ஆண் தோழன்.
*****

பாலிசிகளால் ஆனது வாழ்க்கை


எனக்கு பத்து வீட்டு புரோக்கரைத் தெரியும் என்றான் நண்பர். அவர் நகரவாசியாகி விட்டார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
&&&
எதற்கு நண்பா உனக்கு ஆன்மிக குரு? என்றேன். ரொம்ப தெளிவாகக் குழப்புவதற்கு அவர்தான் உதவி செய்வதாக நெகிழ்ந்தவர், நிறைய சம்பாதிச்சாச்சு யார்கிட்டேயாவது கொண்டு போய் கொட்டணும்ல என்று வெடிச் சிரிப்பு சிரித்தார் பாருங்கள். ஓடி வந்து விட்டேன்.
&&&
ஒவ்வொரு முறையும் ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது புரிகிறது இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளால் ஆனது வாழ்க்கை. தொட்ட தொண்ணூறுக்கும் ஒரு பாலிசி இருக்கிறது.
&&&
நான் தொண்ணூறு சதவீதம் கெட்டவன், பத்து சதவீதம் நல்லவன் என்று சொன்ன நண்பர், நீங்கள் எப்படி என்றார்? நூறு சதவீதம் கெட்டவன், ஜீரோ சதவீதம் நல்லவன் என்றேன். இதில் என்ன மெஜாரிட்டியோ, மைனாரிட்டியோ? எலெக்சன் ரிசல்ட் போல பார்க்கிறார்கள்.
&&&
பெரிய பலூனாக இருந்தால் என்ன? சின்ன ஊசியால் குத்தி காலி பண்ணி விடலாம். அப்படித்தான் நடக்கிறது. ராஜமெளலி சார், ஷங்கர் சார் எல்லாம் எவ்வளவு பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள். நம்ம பய மக்கள் நெட்டில் பார்த்து ரொம்ப அசால்ட்டாகப் போய் விடுகிறார்கள். ஆனால் நெட் என்பது பிரமாண்டம்தான். எவ்வளவு பெரிய பிரமாண்டத்தையும் ரொம்ப சிம்பிளாக காலி பண்ணி விடுகிறது.
*****

26 Jan 2019

கொலை காண்டுல இருப்பவர்கள்!


கொலை காண்டுல இருப்பவர்கள்!
எய்ட்ஸ் பரவாமல் இருக்க எப்படிப் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் இல்லாத பொது மருத்துவமனைகளைப் பார்க்க முடியுமா?
அதே பொது மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய்க் கிருமி இருந்த சோதனை செய்யப்படாத ரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிய அதிர்ச்சிக்கு அதிர்ச்சி தரும் செய்தியைக் கேள்விபட்ட போது ரத்தமே உறைந்து விடுவது போல் அல்லவா இருந்தது.
இதையும் ஒரு விழிப்புணர்வு வாசகமாக அதே மருத்துமனைச் சுவர்களில் எழுதி வைக்க வேண்டும் போலிருக்கிறது.
அடிதடியில் இறங்கி, அரிவாள் வீசி ரத்தத்தை வெளியேற்றுபவர்கள்தான் கொலை காண்டுல இருக்கிறதா சொல்வார்கள்.
இப்படி உயிர் காக்க ரத்தத்தை ஏற்றுபவர்களும் கொலை காண்டுல இருப்பார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.
ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தாலும், தான் ஆடா விட்டாலும் சதை ஆடுபவர்களாக இருந்தாலும், Blood is thicker than water என்று மார் தட்டுபவர்களாக இருந்தாலும் ரத்தம் மாறினால் மொத்தமும் மாறி விடுமே.
ரத்தம் சிந்தாத போராட்டம் இல்லை.
இப்படி நோய்க் கிருமிகள் நிரம்பிய ரத்தத்தை ஏற்றுவது நியாயம் இல்லை.
*****

சிஸ்டத்தைச் சரி செய்யலாம்!


சிஸ்டத்தைச் சரி செய்யலாம்!
பொங்கலுக்கு வெளியான படங்களில் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது? என்று பேட்ட, விஸ்வாஸம் ஆகிய இரு படங்களுக்கும் குடுமிபிடி சண்டை நடக்காத குறைதான் பாக்கி.
நல்லது.
இரண்டு படங்களுமே தங்களின் வசூல் எவ்வளவு என்பதை வெளிப்படையாகக்  காட்டி விட்டால் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது என்பதை யாரும் சொல்லாமலே எல்லாரும் தெரிந்து கொண்டு விடலாம்.
அத்துடன் வெளிப்படையாக வசூலை அறிவித்து உரிய வரி செலுத்துவதற்கும் அது மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
ஹீரோ வில்லன் ஆகும் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு மாற்றம் மட்டும் நிகழ்ந்து விடுமா என்ன?
அந்த வகையில் சிஸ்டம் சரியில்லாமல்தான் இருக்கிறது. இது சரி செய்ய முடியாத ஒரு சிஸ்டமும் அல்ல.
அவர்களின் ஒவ்வொரு நொடியையும் அவர்களே செதுக்கி அவர்களே சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
பேட்ட, விஸ்வாஸம் ஆகிய இரண்டு படங்களில் நடித்த கதாநாயகர்களும் தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள்.
அவர்களின் படங்களில் வசூலின் வெளிப்படைத்தன்மை வெளியானால் திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் அவர்கள் தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற நல்ல பெயரும் இதனால் அவர்களுக்குக் கிட்டும்.
கதாநாயகர்களில் யார் பெரியவர் என்று இப்படிக் கூட நிரூபிக்கலாம்.
பொதுவாக வசூலில் கொடி கட்டிப் பறக்கும் கதாநாயகர்கள் நிஜத்தில் வெளிப்படைத் தன்மை என்ற தர்மத்தைத் தூக்கி பிடிப்பதை விட, அதில் இருக்கும் மர்மத்தைக் கட்டிக் காப்பதில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அந்தத் தோற்றத்துக்கு இது ஒரு மாற்றமாக, ஏற்றமாக இருக்கும்.
இந்த விசயத்தில்,
அந்த மர்மம் விடுபடாமல் இருப்பதே அவர்களின் தொழில் தர்மம் என்று இருக்கப் போகிறார்களா? அல்லது வசூலின் வெளிப்படைத்தன்மையை உரக்கச் சொல்வதே தர்மம் என்று அதை நிலைநாட்டப் போகிறார்களா? என்பதற்கு முன்னதே பதிலாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
*****

25 Jan 2019

கலாச்சார தமிழா!


கலாச்சார தமிழா!

தமிழர்களின் கலாச்சாரம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.
இராஜராஜன் சரித்திரப் புகழ் வாய்ந்த கோயிலைக் கட்டுகிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் நடிகைக்குக் கோயில் கட்டிச் சரித்திரப் புகழ் பெறுகிறார்கள்.
திருப்பூர் குமரன் போன்றவர்கள் தடியடிப்பட்டு போராடி இறந்திருக்கிறார். கட் அவுட் கட்டப் போய் அதிலிருந்து தவறி விழுந்து அதற்குப் பின் வரும் தமிழர்கள் இறந்திருக்கிறார்கள்.
சுதந்திர வேட்கையில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் போன்றோரும் இருந்திருக்கிறார்கள். சினிமா பார்க்க பணம் கொடுக்காததற்காக அப்பாவைக் கொன்ற தமிழர்களும் உருவாகியிருக்கிறார்கள்.
கள் குடித்துக் கூட தமிழர்கள் அழிந்து விடக் கூடாது என்று தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிய தந்தை பெரியார் இருந்திருக்கிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் கள்ளச் சாராயம் குடித்து தமிழர் இனம் மாண்டு விடக் கூடாது என்று அக்கறையோடு டாஸ்மாக் திறந்திருந்திருக்கிறார்கள்.
பாப்பா பாட்டு பாடிய பாரதியார் இருந்திருக்கிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் பாப்பாவை ரைம்ஸ் பாட வைத்து வாட்ஸ் அப்பில் ஏற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஏரி, குளம், குட்டைகளை வெட்டிய தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள். அப்புறம் அந்த இடம் பள்ளமாக இருக்கிறதே என்று அந்த இடத்தில் பேருந்து நிலையங்களையும், பொது கட்டடங்களையும் கட்டிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
ஊர்ப் பெயர்களையும், சிறப்புப் பட்டங்களையும் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அப்புறம் இங்கிலீஷில் முன்னெழுத்து போட்டு தமிழில் பெயர் எழுதும் இனமாக முன்னேறியிருக்கிறார்கள்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனமாக இருந்த தமிழர்கள் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து சங்கம் வைத்து சாதி வளர்ப்பதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார்கள்.
தமிழர்களின் மாறி வரும் கலாச்சாரம் மிகப் பெரிய பிரமாண்டம் கொண்டதாகவே இருக்கிறது. இருக்கும்.
தனக்கென தனிக்குரலைக் கொண்டிருந்த தமிழர்கள் டப்ஸ்மாஸ் குரலாகவும் ஒலிக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
குடவோலை முறையை உருவாக்கி தேர்தல் முறைக்கு வித்திட்டதோடு, ஓட்டுக்கு ரேட்டை நிர்ணயம் செய்து புதுத் தேர்தல் முறைகளையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இயல், இசை, நாடகம் என்று புலவர்கள், பாணர்கள், கூத்தர்களைப் போற்றிய புரவலர்களாக இருந்த தமிழ்ப்பெருங்குடி மக்கள் அந்த மரபின் தொடர்ச்சி அழிந்து விடக் கூடாது என்பதற்காகவே திரைத்துறைக் கலைஞர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்க்கும் மரபை விடாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...