31 Jan 2019

மக்கள்தொகைக் கட்டுபாடு குறித்து திருவள்ளுவர்


மக்கள்தொகைக் கட்டுபாடு குறித்து திருவள்ளுவர்
  
          இந்த உலகுக்கு மக்களே வளம். எந்த வளமும் அளவோடு இருக்க வேண்டியது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி இதனைக் கருத்தில் கொண்டே முன்வைக்கப்படுகிறது.
            எந்த வளர்ச்சிக்கும் ஓர் அளவு இருக்கிறது. அளவற்ற வளர்ச்சி புற்றுநோயைப் போல அச்சுறுத்தலை உருவாக்கி விடும்.
            அளவுக்கு மிஞ்சி மக்கள் தொகைப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்றால் அதுவே பற்றாக்குறைக்கு வழிவகுத்து விடும்.
            உணவுப்பொருட்களின் வளர்ச்சி கூட்டல் விதியின் அடிப்படையில் பெருக்கமடைந்தால், மக்கள் தொகை வளர்ச்சி பெருக்கல் விதியின் அடிப்படையில் பெருக்கமடைவதாக மால்த்தஸ் என்ற ஓர் அறிஞர் குறிப்பிடுகிறார்.
            இந்த உலகில் இடம் இல்லாவிட்டால் இன்னொரு உலகில் குடியமர்த்துவோம் என்று விஞ்ஞானம் தன் பங்குக்கு ஆராய்ச்சிக் கரங்களை நீட்டிக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இந்த பூமி எதிர்கொண்டு இருக்கும் முக்கியமானப் பிரச்சனைதான்.
            மக்களே மக்கள் தொகைக் கட்டுபாடு குறித்துச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் சாதக பாதகங்களை மனதுக்குள் அலசிப் பார்க்கிறார்கள். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளோடு இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இன்று ஒற்றைக் குழந்தையின் பெற்றோர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்.
            தேவையே கண்டுபிடிப்புகளின் தாயாகி பிறப்பைத் தள்ளி வைப்பதற்கான சாதனங்கள், பிறப்பைத் தடுப்பதற்கான சாதனங்கள் பிறப்பெடுக்க காரணமாகி விட்டன. பிறப்பைத் தடுப்பதற்கான மற்றும் கட்டுபடுத்துவதற்கான சாதனங்கள் குறித்த விழிப்புணர்வுகள் பரவலாகி விட்டன.
            தங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தால் தங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதைப் பெற்றோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். அதன் செம்மையானப் பொருள் குறித்து அவர்கள் சிந்திக்கிறார்கள்.
            அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது பேதைமை என்பது புரிய ஆரம்பித்து இருக்கிறது.
            அதாவது எத்தனைக் குழந்தைப் பிறப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை இச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உணரத் தலைபட்டு இருக்கிறார்கள். அது குறித்த செம்மையான கருத்தாக்கம் அவர்கள் மனதில் இருக்கிறது.
            வள்ளுவர் குறிப்பிடுவது போல,
            பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்கிற அறிவு வந்து விட்டது.
            மெய்யுணர்தல் (அதிகாரம் 36) எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு ஆன்மிக அர்த்தம் கற்பிக்கப்படுவதை விட இந்த அர்த்தம் சிறப்பாக உள்ளது அல்லவா!
            பிறப்பு என்கிற அதிக குழந்தை பிறப்பு குறித்த பேதைமை நீங்கி, எத்தனைக் குழந்தைப் பிறப்புகள் தேவை என்கிற செம்மையான பொருளைக் காண்பதே அந்தந்த கால கட்டத்திற்கான அறிவு என்பதாக இக்குறளின் பொருளைக் கொள்வதால் பிழை எதுவும் நேராது என்றே நினைக்கிறேன்.
            இந்த ஒரு பிறப்பு போதும், மறுபிறப்பு வேண்டாம் என்பதான ஆன்மிகப் பொருள் இக்குறளுக்குக் கூறப்படும். அதையே இந்த ஒரு குழந்தை பிறப்பு போதும், பெருகி விட்ட மக்கள் தொகையில் இன்னொரு மறுபிறப்பு அதாவது இன்னொரு மறு குழந்தை பிறப்பு தேவையில்லை என்பதாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு குழந்தைகள் தேவை என்பவர் இந்த இரு குழந்தை பிறப்பு போதும், மீண்டும் மறுபிறப்பாக மூன்றாவது மறு குழந்தை பிறப்பு வேண்டாம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...