28 Jan 2019

சோம்பல் குறித்து வள்ளுவரும் பில்கேட்ஸூம்


சோகப்படாத சோம்பல்காரர்கள் சங்கம்
சில பொழுதுகளில் இருக்கும் சுறுசுறுப்பு அபாரமானது. ஒரு மலையைத் தூக்கி வைத்தாலும் தூக்கிக் கொண்டு போய் விடலாம்.
சில பொழுதுகளில் இருக்கும் சோம்பல் அசாதாரணமானது. ஒரு துரும்பைத் தூக்கிப் போடக் கூட ஏலாது.
சோம்பலாக இருக்கும் அந்தப் பொழுதுகளில் சுறுசுறுப்பாக இருக்கக் கூடாதா என்ற எண்ணம் வந்து மனதை உலுக்கும்.
இந்தச் சோம்பலால் ஒரு பயனும் இல்லை என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படிச் சோம்பலாக இருந்த கணங்களில் எவ்வளவு சிந்தனைகள், எவ்வளவு கற்பனைகள். எண்ணிச் சொல்வதற்கு நட்சத்திரங்கள் போதாது.
திருவள்ளுவர் மடியின்மை பற்றி பேசுகிறார்.
ஆக்கம் வருவதற்கு மடியின்மை முக்கியம் என்கிறார்.
அதாவது குறிப்பாக செல்வ பெருக்கத்திற்கு அதன் மூலம் உண்டாகும் வாழ்க்கை வளத்திற்கு அதுவே அடிப்படை.
அந்தக் காலத்தில் சோம்பலாக இருந்து அவர் அரசராக இருந்தால் நிலப்பகுதியை இழப்பார். இக்காலகட்டத்தில் சோம்பலாக இருந்து அவர் ஆள்வோராக இருந்தால் ஆட்சியை இழப்பார். குடிமகனாக இருந்தால் வளமான வாழ்வை இழப்பார்.
இதெல்லாம் வள்ளுவர் கூறும் கருத்துகள்.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி என்று இன்னொரு இடத்திலும் ஊழ் என்ற அதிகாரத்தில் சோம்பலைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார்.
அங்கும் செல்வமே மையம். செல்வத்தைக் கைப்பொருள் என்கிறார் வள்ளுவர்.
நல்ல விதி இருக்கும் போது சுறுசுறுப்பு ஏற்பட்டு செல்வம் சேரும். அது இல்லாத போது சோம்பல் ஏற்பட்டு இருக்கின்ற செல்வமும் போகும் என்பது அவரது வாதம்.
குறிப்பாக சுறுசுறுப்பு-சோம்பல் என்ற வாதம் செல்வத்தை மையமாகக் கொண்டே வரையறைக்கு உள்ளாகிறது.
வழக்கத்திலும் இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? வேலைக்குப் போனாத்தான் நாலு காசு பார்க்க முடியும்! என்று திட்டும் இடத்திலும் சோம்பல் என்பது செல்வத்தை மையமாகக் கொண்டுதான் சுழல்கிறது.
பணக்காரர்களை அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் சோம்பலாக இருப்பதை சொகுசு என்பார்கள். அதுவே ஏழைகள் சோம்பல்பட்டால் தரித்திரம் என்று திட்டுவார்கள்.
சோம்பலாக இருப்பதற்கு செல்வம் தேவைப்படுகிறது. அது இல்லாதவர்கள் வசைமொழிக்கு ஆளாகாமல் சுறுசுறுப்பாக இருப்பதே நல்லது.
இப்படியெல்லாம் பேசுவதால் இது சோம்பலை ஆதரிக்கும் வாதம் அல்ல. சோம்பல் என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதற்கான வாதம். இதைப் பற்றிச் சிந்தித்தது கூட சோம்பலாக இருந்த ஒரு பொழுதில்தான். சிந்தித்ததை எழுதியது சுறுசுறுப்பான ஒரு பொழுதில்தான். என்னைக் கேட்டால் சோம்பல்-சுறுசுறுப்பு இரண்டும் தேவையாகத்தான் இருக்கிறது.
சோம்பல் என்ற வார்த்தை பிடிக்கவில்லை, ஓய்வு என்று நாகரிகமாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் மகிழ்ச்சியே.
இல்லையில்லை உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்காமல் இருப்பதுதான் சோம்பல், உழைத்த பின் உழைக்காமல் அமைதியாக இருப்பது ஓய்வு என்ற வரையறை விளக்கம் சொன்னாலும் சரிதான்.
அதற்காக எப்போதும் சோம்பலாக இருக்க முடியாது, எப்போதாவது சோம்பலாக இருக்கலாம் என்று உங்களக்கு நீங்களே தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
சோம்பல்படுபவர்கள்தான் ஒரு வேலையைச் சுலபமாக செய்வதற்கான ரூட்டைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று பில்கேட்ஸ் கூட சொல்லியிருக்கிறார்.
இதையே ஒரு சாக்காக வைத்து சோம்பலாக இருந்து கொள்ளலாம். யாராவது ஏன் இப்படிச் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்டால் சுலபமான ரூட்டைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம். அது என்ன சுலபமான ரூட் என்றால் எந்த வேலையைச் செய்யச் சொல்கிறார்களோ அந்த வேலையைச் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதுதான் சுலபமான ரூட்.

பின்னே என்ன மக்கா? வேலையைச் செய்பவரிடமே எல்லா வேலைகளையும் தள்ளுகிறார்கள். சோம்பலாக இருப்பவரைப் பார்த்து அவர் எந்த வேலையையும் செய்ய மாட்டார் என்று ஒரு வேலையும் கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.
அப்புறம் இன்னொரு விசயம், சோம்பல்படுபவர்களிடம் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிப் பாருங்களேன். அவர்களுக்கு வரும் கோபம் இருக்கிறதே! கோபப்படுவதில் அவர்களைப் போல சுறுசுறுப்பான ஆசாமிகளை இந்த உலகில் பார்க்க முடியாது.
பணம் வேண்டாம் என்றால் சோம்பலாக இருந்து விடலாம். அது வேண்டியிருக்கிறதே. அதற்காகவேனும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த உலகமே அதனால்தான் சுறுசுறுப்பாக இருக்கிறதோ என்று கூட சந்தேகப்படுகிறேன்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...