கலாச்சார தமிழா!
தமிழர்களின்
கலாச்சாரம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.
இராஜராஜன்
சரித்திரப் புகழ் வாய்ந்த கோயிலைக் கட்டுகிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் நடிகைக்குக்
கோயில் கட்டிச் சரித்திரப் புகழ் பெறுகிறார்கள்.
திருப்பூர்
குமரன் போன்றவர்கள் தடியடிப்பட்டு போராடி இறந்திருக்கிறார். கட் அவுட் கட்டப் போய்
அதிலிருந்து தவறி விழுந்து அதற்குப் பின் வரும் தமிழர்கள் இறந்திருக்கிறார்கள்.
சுதந்திர
வேட்கையில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் போன்றோரும் இருந்திருக்கிறார்கள்.
சினிமா பார்க்க பணம் கொடுக்காததற்காக அப்பாவைக் கொன்ற தமிழர்களும் உருவாகியிருக்கிறார்கள்.
கள் குடித்துக்
கூட தமிழர்கள் அழிந்து விடக் கூடாது என்று தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிய
தந்தை பெரியார் இருந்திருக்கிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் கள்ளச் சாராயம் குடித்து
தமிழர் இனம் மாண்டு விடக் கூடாது என்று அக்கறையோடு டாஸ்மாக் திறந்திருந்திருக்கிறார்கள்.
பாப்பா பாட்டு
பாடிய பாரதியார் இருந்திருக்கிறார். அதற்குப் பின் வந்த தமிழர்கள் பாப்பாவை ரைம்ஸ்
பாட வைத்து வாட்ஸ் அப்பில் ஏற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஏரி, குளம்,
குட்டைகளை வெட்டிய தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள். அப்புறம் அந்த இடம்
பள்ளமாக இருக்கிறதே என்று அந்த இடத்தில் பேருந்து நிலையங்களையும், பொது கட்டடங்களையும்
கட்டிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
ஊர்ப் பெயர்களையும்,
சிறப்புப் பட்டங்களையும் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அப்புறம் இங்கிலீஷில் முன்னெழுத்து போட்டு தமிழில் பெயர் எழுதும் இனமாக முன்னேறியிருக்கிறார்கள்.
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த இனமாக இருந்த தமிழர்கள் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து சங்கம்
வைத்து சாதி வளர்ப்பதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார்கள்.
தமிழர்களின்
மாறி வரும் கலாச்சாரம் மிகப் பெரிய பிரமாண்டம் கொண்டதாகவே இருக்கிறது. இருக்கும்.
தனக்கென தனிக்குரலைக்
கொண்டிருந்த தமிழர்கள் டப்ஸ்மாஸ் குரலாகவும் ஒலிக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
குடவோலை
முறையை உருவாக்கி தேர்தல் முறைக்கு வித்திட்டதோடு, ஓட்டுக்கு ரேட்டை நிர்ணயம் செய்து
புதுத் தேர்தல் முறைகளையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இயல், இசை,
நாடகம் என்று புலவர்கள், பாணர்கள், கூத்தர்களைப் போற்றிய புரவலர்களாக இருந்த தமிழ்ப்பெருங்குடி
மக்கள் அந்த மரபின் தொடர்ச்சி அழிந்து விடக் கூடாது என்பதற்காகவே திரைத்துறைக் கலைஞர்களை
ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்க்கும் மரபை விடாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment