29 Jan 2019

மாறி விட்ட தமிழர் உணவியல்


கல்யாண சமையல் சாதம்!
            மகேசின் கல்யாணத்துக்கு கிளம்புவதற்கு நேரமாகிக் கொண்டிருந்தது. வழக்கமாக ஒவ்வொரு திருமணத்தின் போதும் நடக்கிற விசயம்தான் இது. சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்று நினைத்து எப்படியும் லேட் ஆகி விடும்.
            எட்டு மணிக்குக் கிளம்ப வேண்டிய நேரத்தை ஏழரை என்று தீர்மானித்தும் எட்டரை மணி ஆகி விடுவதுண்டு. பெண்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. அவர்கள் சேலையைத் தேர்வு செய்வதற்குள் கல்யாணத்தை முடித்துக் கொண்டே திரும்பி விடலாம். சேலையைத் தேர்வு செய்து விட்டால் மேக் அப்பில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
            இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு கிளம்பினாலும் கல்யாண சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாப்பிள்ளையுடனும் மணப்பெண்ணுடனும் போட்டோ செஷன் முடிந்து விட்டால் எப்போ வீட்டுக்குக் கிளம்புவது என்று திரும்ப திரும்பக் கேட்டு கொன்றே போட்டு விடுவார்கள்.
            மகேசின் கல்யாணத்திலும் அப்படி ஆகி விட்டது. கிட்டதட்ட எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டால் குழந்தைகளை விட மோசமாக நடந்து கொள்வார்கள்.
            "சர்ரி கிளம்பு!" என்று ஆரம்பித்து வெளியே வந்த போது மகேசின் அம்மா பிடித்துக் கொண்டார்கள்.
            "கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் முடிஞ்சவுடனே கிளம்பிட்டாங்க. மண்டபத்தைப் பாரு. கூட்டமே இல்ல. நீங்களும் போய்ட்டீங்கன்னா எப்படி? இருந்து மதியானச் சாப்பாட்டைச் சாப்பிட்டுப் போகணும்யா!" கெஞ்சாத குறையாக கேட்டார் மகேசின் அம்மா.
            மறுபடியும் மண்டப ஹாலுக்கு நுழைந்தோம். இடித்தபுளி கணக்காக ஆங்காங்கே சிலர் உட்கார்ந்திருந்தார்கள். நிறைய நாற்காலிகள் காலியாய்க் கிடந்தன. தாலி கட்டும் நேரத்தில் இப்படிப் பார்க்க முடியாது. நிற்க இடம் இருக்காது. தாலி கட்டி முடித்த அடுத்த செகண்டில் எப்படி அவ்வளவு நாற்காலிகளும் காலியாகின்றன என்பது நிச்சயம் அறிய முடியாத மாயம்தான்.
            இப்போதெல்லாம் கல்யாணத்துக்குச் செல்பவர்கள் யாரும் சாப்பாட்டைப் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஒரு காலத்தில் கல்யாணச் சாப்பாட்டுக்காக அடிதடி, கும்மாங்குத்துகள் எல்லாம் விழுந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாளில் ஒருவர் பல திருமணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
            எனக்குப் பொழுது போக அந்த மண்டபத்தில் நிறைய அம்சங்கள் இருந்தன. மனைவிக்குப் பொழுது போக வேண்டுமே. அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு வாட்ஸ்அப்பில் மூழ்கினாள். பல நேரங்களில் வாட்ஸ்அப் மேசேஜ்களை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்து விடும் அவள் ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள். வீடியோவாக இருந்தால் டவுன்லோட் செய்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இல்லையென்றால் கிளம்புணும்ங்க என்று நச்சரித்து விடுவாள்.
            ஒரு சிறுவன் அங்கிருந்த பலூன்களைக் கொத்தாக அறுத்து எடுத்துக் கொண்டு உதைத்து உதைத்து விளையாடினான். அவனது அப்பா வந்து தடுத்த போது அவரது முகத்தில் பலூனை வீசி அடித்தான். அவர் அதற்கு மேல் முடியாது என்பது போல சிரித்துக் கொண்டே நகர்ந்தார். சிறுவனுக்கு வசதியாகப் போய் விட்டது. எல்லார் முகத்திலும் பலூனை வீசி வீசி அடிக்க ஆரம்பித்தான். என் முகத்திலும் வீசி அடித்தான். நான் கண்டுகொள்ளாதது போல உட்கார்ந்ததால் தப்பித்தேன். கண்டுகொண்டவர்கள் முகத்தில் வேண்டுமென்றே வீசி வீசி அடித்தான். வேடிக்கையாக இருந்தது.
            மாப்பிள்ளையும் பொண்ணும் போட்டோ செஷனில் பிசியாக இருந்தார்கள். மாப்பிள்ளைப் பெண்ணை இரண்டு கரங்களில் தூக்கி, கட்டிப் பிடித்து, கன்னத்தின் அருகே முகம் வைத்து பல விதங்களில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா மண்டபத்தில் கவனிக்க நிறைய அம்சங்கள் இருக்கின்றன என்று.
            மணமேடையில் காலியாக இருந்த வி.ஜ.பி. சேரில் இரண்டு சிறுமிகள் ஏறி அமர்ந்து கொண்டு விளையாடினார்கள். "மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிச்சிடுவோமா?" என்று ஒரு பெரியவர் ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு சொன்னதைக் கேட்டு அந்தச் சிறுமிகள் சிரிக்காமல் ஏமாற்றினர்.
            அரை மணி நேரம் ஆயிருக்கும். மதிய சாப்பாடு தயாராகி விட்டதாக வந்து அழைத்தனர். மணி பத்தே கால்தான். காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடித்த போது ஒன்பதே முக்கால்.
            பந்தியில் போட்டிருந்த இலைகளுக்கு சத்தியமாக ஆட்கள் இல்லை. எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் ஒருவழியாக எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். நான் அதில் விதிவிலக்கு. வரிசையாக சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், பாயாசம், தயிர் என்று ஒரு பிடி பிடித்தேன். மூன்று முறை கறி வகைகளை வைக்கச் சொல்லி கலவரப்படுத்தினே். எப்படி பாஸ் இப்படி என்பது போல எல்லாரும் பார்த்தார்கள். இதிலென்ன இருக்கிறது? பரிமாறுபவர்களைக் கொஞ்சமாவது சந்தோஷப்படுத்த வேண்டும் இல்லையா! அவர்கள் எது கொண்டு வந்தாலும் கொஞ்சமாக என்றோ வேண்டாம் என்றோ சொன்னால் அவர்கள் முகந்திரிந்து வாடி விடுவார்கள் இல்லையா!
            மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
            விருந்தினர்கள் முகம் வாடக் கூடாது என்பார் வள்ளுவர். உபசரிப்பவர்கள் முகமும் வாடக் கூடாது அல்லவா!
            காலையில் பொங்கல், கேசரி, பூரி, பாத்து, தோசை ஒன்று, இட்டிலி நான்கு, போன்டா இவைகளையும் சாப்பிட்டு, மதியானச் சாப்பாடாக அது காலையில் பத்தே காலுக்குப் பரிமாறப்பட்டாலும் நான் மேற்சொன்ன வகையறாக்களையும் சாப்பிட்டு எழுவதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும் என்பது போல எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
           
கல்யாண சமையல் சாதம் என்று பாடிக் கொண்டே சாப்பிடுவாரே ரங்காராவ். அவரைப் பார்ப்பது போல என் மனைவி என்னைப் பார்த்ததுதான் விஷேசம்.
            மகேசின் அம்மாவுக்கு திருப்தி.
            இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். அண்மை பத்தாண்டு காலத்தில் கல்யாணத்தில் நான் காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் ஒருங்கே சாப்பிட்ட கல்யாணம் இதுதான்.
            அதற்கு முன்பெல்லாம் சாப்பிடுவதற்காகவே கல்யாணத்துக்குப் போன நாட்கள் எல்லாம் உண்டு. "கல்யாணச் சாப்பாடு எப்ப மாப்ளே போடப் போறே?" என்று கேட்டே விடுவார்கள்.
            இப்போ...?
            "கல்யாணச் சாப்பாடெல்லாம் ஒத்துகிட மாட்டேங்குது மாப்ளே!" என்று சொல்கின்ற ஒரு தலைமுறை உருவாகி விட்டது.
            உங்களுக்குத் தெரியுமா?
            இது என்ன திடீரென்று பொதுஅறிவு ஆசானாக கேள்வி கேட்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
            ஒவ்வொரு திருமணத்தின் போதும் அவ்வளவு உணவு வகைகள் வீணாகின்றன. அவ்வளவு உணவு வகைகள் வீணாகும் தேசத்தில்தான் பட்டினியோடு போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்!
            மகேசின் அம்மா கூட பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார். பட்டினி கிடந்து பிள்ளைகளுக்காகக் காசு பணம் சேர்த்திருக்கிறார். அப்படி பட்டினி கிடந்து காசு பணம் சேர்த்ததெல்லாம் இப்படி பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கத்தான். 
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...