30 Jan 2019

தமிழர்களின் சினிமா ரசனை


கலையே கொலையெனப் புரியும் தமிழா!
            ஒரு கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரோடு ஆக்சிடெண்டில் இறப்பவர்களை விட கட் அவுட் வைக்கப் போய் தடுமாறி இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு ஆக்சிடெண்டல் டெட் என்றாலும் இதை ரோடு ஆக்சிடெண்ட் வகையோடு சேர்க்க முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கிளைமும் கிடையாது.
            இப்படிச் சாகுபவர்கள் ஒரு வகை என்றால், சினிமா டிக்கெட்டுக்குப் பணம் கொடுக்காததால் அப்பாவைச் சாகடிப்பவர்கள் இன்னொரு வகை.
            தமிழ்நாட்டில் வெண்மை புரட்சியில் சாதனை படைத்த ஒரு மாநிலம் என்பதை கட் அவுட்டுகளுக்கு ஊற்றப்படும் பாலைப் பார்க்கும் போது தோன்றும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பால் பாக்கெட்டுகளின் உற்பத்திப் பெருகியிருக்கிறது என்பதாக இதில் இன்னொரு பொருள் இருக்கிறது என்றும் கருதிக் கொள்ளலாம்.
            கட் அவுட்டுகளுக்கு பீரைப் பீய்ச்சி அடித்து ஊற்றும் போது இது என்னவகைப் புரட்சிக்குச் சாதனை படைக்கும் ஒரு முயற்சி என்று யோசித்து இருக்கிறேன். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பீர் உற்பத்திப் பெருகியிருக்கிறது என்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
            உலக அளவில் தமிழர்கள் அளவுக்கு சினிமா பித்துப் பிடித்தவர்கள் இருக்கிறார்களா என்று உலக நாடுகள் பல சுற்றி வந்த யாராவது இருந்தால் அவசியம் சொல்ல வேண்டும். பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்கி துட்டு செலவு பண்ணி சுற்றி வர என்னிடம் அவ்வளவு டப்பு இல்லை.

            இப்போது டி.வி., இண்டர்நெட் என வந்து அந்தப் பித்தை சீரியல்கள், பேஸ்புக், வாட்ஸ்அப் என்று பங்கு போட்டுக் கொண்டாலும் சினிமா பித்து என்பது இன்னும் குறைந்தபாடில்லை.
            இணையத்திலும் சினிமா பற்றி கும்மாங்குத்து குத்திக் கொள்வதும், டப்பாங்குத்து டான்ஸ் ஆடுவதும் நின்று விட்டதா என்ன?
            ரசிகர்கள் முட்டிக் கொண்டாலும், மோதிக் கொண்டாலும் காசு போய் சேர வேண்டியவர்களுக்குப் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. தான் வியாபாரப் பண்டம் ஆகி விட்டோம் என்ற பிரக்ஞை இல்லாமல் தமிழன் செய்யும் லந்துகள் இருக்கிறதே! நீங்களே யோசித்துப் பாருங்களேன், தமிழகத்தில் நற்பணி மன்றங்களை அதிக அளவு கையிருப்பில் நடிகர்கள்தானே வைத்து இருக்கிறார்கள். அது என்ன நற்பணியோ?! வீட்டில் அண்டா, குண்டான்களில் பாலூற்றி கட் அவுட்டுகளுக்கு ஊற்றி, அப்புறம் அதற்கே பாலூற்றி யாருக்கும் தெரியாமல் அடகு போவதுதான் மிச்சம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...