29 Jan 2019

தஸ்தயேவ்ஸ்கியை வாசித்தல்


தஸ்தயேவ்ஸ்கியை வாசித்தல்
           
பேராசிரியர் ஜான் பீட்டர் ஐயாதான் சொன்னார்கள், தஸ்தயேவ்ஸ்கியை அவசியம் வாசிக்க வேண்டும் என்று. அதிலும் குறிப்பாக "கரமசோவ் சகோரர்கள்" எனும் நாவல் பற்றி.
நாம் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது நம் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கூட அந்த நாவல் துல்லியமாகப் பேசும் என்றார் ஐயா.
            நூலகர் ஆசைத்தம்பி ஐயாவிடம் இதைச் சொன்ன போது கரமசோவ் சகோதர்களோடு வந்து விட்டார். இரண்டு தடிமனானப் புத்தகங்கள். எப்படியும் ஒவ்வொன்றும்  ஐநூறு அறுநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
            இருபது பக்கங்கள், பத்து பக்கங்கள், முப்பது பக்கங்கள் என்று ஒவ்வொரு நாளாக நாவல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில நாட்கள் ஐந்து பக்கங்கள்.
            நாவலின் இருநூறு பக்கங்களைத் தாண்டிய பிறகு கிடைத்த வேகம் இருக்கிறதே. அடேங்கப்பா!
            நாவலை முழுமையாக வாசித்து விட்டுதான் எழுத வேண்டும். வாசிப்பிற்கு இடையிலேயே எழுதுவதற்காக நீங்கள் என் மீது கோபப்பட்டால் அதற்காக மன்னிப்பு கொடுத்து விடுங்கள்.
            நீதிமன்ற விசாரணையை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். என் தங்கையின் விசயத்தில் நேரடியாக பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.
            பெண்கள் விசயத்தில் குறிப்பாக ஜீவனாம்ச வழக்கு சார்ந்த குறுக்கு விசாரணைகளில் விஷ கொடுக்கு கொட்டுவது போல எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேட்பார்கள். கிராமத்தில் கதண்டு எனும் விஷ ஜந்து பற்றிச் சொல்வார்கள். நான்கு கதண்டுகள் கொட்டினால் ஆளே காலியாகி விடுவார் என்பார்கள்.
            அப்படித்தான் அந்த விசாரணைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டுபெட்டியான கலாச்சாரத்திலிருந்து வளர்ந்து வரும் பெண்களுக்கு அப்படி ஒரு குறுக்கு விசாரணை என்பது அதிகபட்ச தண்டனை. கிட்டதட்ட விஷக்கொட்டுகள். அத்தனை விசாரணைக் கொட்டுகள் கொட்டிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு நிற்க ஏதோ ஒன்று மனதில் வேண்டும்.
            கரமசோவ் சகோதரர்களும் அப்படி ஒரு விசாரணையாகத்தான் எனக்குத் தெரிகிறது. கரமசோவின் குடும்பத்தையே குறுக்கு விசாரணை செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது நாவல்.
            ஒரு தவறான தகப்பனுக்கு மூன்று விதமான பிள்ளைகள். ஒரு தவறான தகப்பனாகத் தோற்றம் தரும் கரமசோவைப் பற்றியும் தஸ்தயேவ்ஸ்கி நியாயமான விசாரணையை நிகழ்த்துகிறார். அதாவது எழுத்தில்.
            ஒரு நாவலை உருவாக்குவதற்காக அவர் உருவாக்கிக் கொண்ட பாத்திரங்களா இவர்கள்? அல்லது அவர் வாழ்வில் கண்ட பாத்திரங்களின் புனைவின் வடிவங்களா? என்று நானும் மன விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
            வாசித்து முடித்த பின் மீண்டும் எழுதுகிறேன்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...