28 Jan 2019

அரசியல் என்பதன் வரையறை


ஆப் ஸ்விட்ச் மோடு
நான் யாரிடமும் ஏமாந்ததில்லை என்பவர்களைக் கேட்கிறேன்... நீங்கள் உங்கள் தலைமையிடம் கூடவா ஏமாந்ததில்லை? தலைமையிடம் ஏமாறாதவர் தொண்டரே இல்லை. தொண்டரை ஏமாற்றாதவர் தலைவரே இல்லை. கோவிச்சாதீங்க பாஸ்! தலைவர் என்றால் தொண்டரை ஏமாற்ற வேண்டும், தொண்டர் என்றால் தலைவரிடம் ஏமாற வேண்டும். அதுதான் அரசியல். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும். யாரும் ஏமாறவில்லை என்றால் அரசியல் அநாதையாகிவிடும் எம் பேரன்பிற்குரிய எம் மக்கா!
&&&
எனக்குத் தேர்தலில் போட்டியிட ஆசையா? என்று பலர் கேட்டிருக்கிறார்கள். ஆசை இல்லாமல் இருக்குமா? காசுதான் இல்லை, கொஞ்சம் காசு கொடுங்கள் என்று கேட்ட பிறகு இப்போது யாரும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. அதிகமாகவும் அநாவசியமாகவும் கேள்வி கேட்பவர்களிடம் காசு கொடுங்கள் என்று கேட்டால் அதன் பின் கேள்வி கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
&&&
கல்வி கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கல்வியே மனிதனை மேம்படுத்தும், வளப்படுத்தும் என்று சொன்னார்கள். எனக்கோ மகிழ்ச்சி. ஒரு லிட்டர் தேனை ராவாக குடிக்க வேண்டும் போலிருந்தது. அத்தோடுதான் விட்டார்களா என்றால், மனிதரின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துவதுதான் கல்வி என்று சொல்லிப் புல்லரிக்க வைத்தார்கள். அப்புறம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் மார்க் எடுப்பதற்கு ஷார்ட் கட் மெத்தேடுகள் சொன்னார்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் குழந்தைகளைச் சேர்ப்பதன் அவசியத்தைச் சொன்னார்கள். எல்லாம் சொல்லி விட்டு என்னைப் பேசச் சொன்னார்கள். சாப்பாட்டு பந்திப் போட்டு விட்டார்கள் போல இருக்கிறது, வாசம் வருகிறதே என்றேன். அடித்துத் துரத்தி விட்டு விட்டார்கள். கல்வி கருத்தரங்கங்களை ஹேண்டில் செய்வது ரொம்பவே கஷ்டம் பாஸ்!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...