31 Dec 2017

எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் இருக்க...

குறளதிகாரம் - 1.4 - விகடபாரதி
எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் இருக்க...
            வாழ்க்கையில் விருப்பமோடு இருப்பதோ?
            வெறுப்போடு இருப்பதா?
            ஏன் இரண்டும் இல்லாமல் இருந்தால் என்ன?
            விரும்புவதால் பற்று உண்டாகிறது. வெறுப்பதால் பகை உண்டாகிறது. விருப்பத்தால் உருவாகும் பற்றே படிப்படியாக மற்றவர்களின் பகைமைக்குக் காரணமாகிறது.
            நமக்கு விருப்பமாக இருப்பதாலே, அது எல்லாருக்கும் விருப்பமாக இருக்கும் என்று சொல்ல இயலாது. நமது விருப்பம் மற்றவர்களுக்கு வெறுப்பாக இருக்கலாம்.
            இப்படி இருந்தால் அதுவும் தப்பு, அப்படி இருந்தால் அதுவும் தப்பு என்றால் எப்படித்தான் இருப்பது சரி என்றால் அந்த இரண்டின் படியும் இல்லாமல் இருப்பதுதான் சரி.
            மனிதன் என்பவன் இரண்டில் ஒரு நிலையில் நின்றாகத்தான் வேண்டும் என்று கட்டாயமா என்ன? இரண்டு பேர் அடித்துக் கொள்ளும் போது ஏன் ஒருவரின் பக்கம் நிற்க வேண்டும்? இரண்டு பேரின் பக்கமும் நிற்காமல் இருப்பது நல்லது. விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு பேரும் அடித்துக் கொள்ளும் போது அந்த இரண்டு பேரில் ஒருவரின் பக்கம் நாம் ஏன் நிற்க வேண்டும்?
            பகலைத் தொடர்ந்து இரவு வருவது போல, விருப்பத்தைத் தொடர்ந்து வெறுப்புதான் வருகிறது. இது ஒரு சுழற்சி என்பது தெரியாமலே இதற்குள் சுழன்று சுழன்று கழிகிறது மனித வாழ்க்கை.
            விருப்பத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும், வெறுப்பை தூக்கி எறிய நினைப்பதும் முட்டாள்தனம். இரண்டும் ஒன்றிலிருந்து பிறந்த இன்னொன்று. விருப்பு தாயானால் வெறுப்பு அதன் குழந்தையாகிறது. வெறுப்பு தாயானால் விருப்பு அதன் குழந்தையாகிறது.
            விரும்பிப் பெற்றக் குழந்தைதான். கொஞ்சி சீராட்டிப் பாராட்டி வளர்த்த குழந்தைதான். முதிய பருவத்தில் அரவணைக்காத போது வெறுப்புதானே தோன்றுகிறது.
            அன்றாடம் வெறுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஓர் ஆபத்தில் உதவிடும் போதும் விருப்பத்திற்குரியவராக மாறி விடவில்லையா?
            அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்களே. வாழ்க்கையில் நிரந்த விருப்பமும் இல்லை, நிரந்தர வெறுப்பும் இல்லை.
            வாழ்க்கையும் ஒரு அரசியல்தான். விருப்பத்தையும், வெறுப்பையும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொள்ளும் ஒரு அரசியல்.
            ச்சீ... ச்சீ....ச்சீ... இதென்ன அரசியல் போன்ற கீழ்த்தரமான வாழ்க்கை என்று நினைத்தால்... வாழ்க்கையில் அரசியல் பண்ணுவதை விட்டு விட வேண்டும். அப்போது நமக்கு யாரும் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எல்லாரும் நம் சக தோழமைகளாகி விடுவர்.
            வாழ்க்கைக்கும் அப்படியே. இதென்ன வாழ்க்கை என்று சலிப்புறுவதற்கா வாழ்க்கை?
            விருப்பம் - வெறுப்பு இரண்டும் இல்லாமல் நடந்து கொண்டால் எந்த துன்பமும் இருக்காது.
            விரும்பியவர்களுக்கு நன்மையும், வெறுப்பவர்களுக்குத் தீமையும் செய்ய வேண்டும் என்று தோணாது. அப்போது நமக்குதான் விருப்பு - வெறுப்பு இரண்டும் இல்லாமல் போய் விட்டதே. அதனால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வோம்.
            மனைவியை விரும்புகிறேன், குழந்தைகளை விரும்புகிறேன், அவர்கள் வளமோடு வாழத்தான் லஞ்சம் வாங்குகிறேன், ஊழல் செய்து பணத்தை ஈட்டுகிறேன் என்று சொல்வோர் எத்தனை பேர்?
            எனக்குப் பிடிக்கவில்லை, நான் வெறுக்கிறேன் அதனால்தான் அடித்தேன், உதைத்தேன், கொன்று போட்டேன் என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?
            இந்த விருப்பத்தையும், வெறுப்பையும் கடந்து விட்டால், இல்லாமல் செய்து விட்டால் எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வோம் இல்லையா!
            எதைச் செய்ய வேண்டுமோ, அதை விருப்பு வெறுப்பு இன்றிச் செய்தால் எந்தத் தீமையும் ஏற்படப் போவதில்லை.
            விருப்பு, வெறுப்பற்ற நிலையில் இடும்பை இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த கொள்கையைப் பின்பற்றினால், அல்லது அப்படி உயர்ந்த கொள்கையைப் பின்பற்றுபவரைப் பின்பற்றி நாம் நடந்தால் இப்போதும், எப்போதும், முப்போதும், யாண்டும் இடும்பை இல.
            வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
            இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு வள்ளுவக் கிழவன் சொன்னது பொய்யாகி விடுமா என்ன!
            எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு இதுவே மார்க்கம். இது வள்ளுவரின் தீர்க்கம்.

*****

அறிவுப் பரவல் வேண்டும் என்றவரின் அவாவிற்காக...

அறிவுப் பரவல் வேண்டும் என்றவரின் அவாவிற்காக...
            படிக்கின்ற விசயங்களைப் பற்றியும் எழுதுங்கள் ஐயா என்கிறார்கள். நான் இவ்வளவு படித்திருக்கிறேன் என்று நம்மைப் பற்றி பெரிதாக நினைத்து விடுவார்களோ என்ற கூச்சம். இப்படி ஒரு கற்பிதம் எல்லாருக்கும் ஏற்படும். திருக்குறளை நான் முழுமையாக படித்திருக்கிறேன் என்று சொல்லி பாருங்கள். பெரிய ஆளாக நினைத்து விடுவார்கள். நான் படித்திருக்கிறேன் என்றுதான் சொல்கிறேன், அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேனா என்று யோசிக்க மாட்டார்கள்.
            யான் படிப்பதால், நீங்கள் அவ்வளவு பெரிதாக நினைப்பதற்கு ஒர்த் இல்லாத ஆள் என்பதால்... அந்த வண்ணம் நீங்கள் உட்பட யாரும் நினைத்து விடக் கூடாது என்பதற்காகவே படித்ததை எழுதுவதைத் தவிர்த்து விடுவதுண்டு.
            அது ஒரு போதை மாதிரி ஆகி விட்டது. தினம் போதையேற்றிக் கொள்பவன் ஒரு நாள் போதை ஏற்றாமல் இரு என்றால் இருப்பானா? அவன் இருக்க வேண்டும் என்றாலும் அவன் நரம்பு மண்டலம் விடாது. அவனை ஆட்டிப் படைத்து விடும். கை, கால், மண்டை என்று உடல் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாகப் பிரிந்து ஆடத் துவங்கி விடும் அல்லவா. அப்படி ஒரு போதையால் படித்துக் கொண்டிருக்கிறேன்.
            தினம் பல் துலக்கிக் கொண்டு இருக்கிறோம். ஒரு நாள் பல் துலக்காமல் சாப்பிட்டுப் பாருங்களேன். முடியாது அல்லவா! அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளாகி விட்டதாலும் இந்தப் படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. படிப்பு என்று சொல்லி விட்டேனா, வாசிப்பு என்று திருத்திக் கொள்ளுங்கள்.
            அப்புறம் திடீரென்று படிப்பதை எழுதுவதற்கு ஒரு தைரியம் பிறந்து விட்டது. கூச்சம் உடைந்து விட்டது. தானாக உடைந்தது இல்லை இது. தென்குவளவேலியில் ஓர் அறிவியல் ஆசிரியர் இருக்கிறார். பேர் நா. இராமமூர்த்தி. உடைத்துப் போட்டவர் அவர்தான்.
            அவர் முகநூலில் கல்வி நூல் வரிசை என்ற பெயரில் தான் வாசிக்கும் கல்வித் தொடர்பான நூல்களை எழுதி வருகிறார். நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கும், தரமான நூல்களை நாடுபவர்களுக்கும் இது ரொம்ப உபயோகமாக இருக்கும் என்றார். அத்துடன் அறிவுப் பரவ வேண்டும். படித்த அறிவைச் சுருக்கி வைத்துக் கொள்ளாமல் அறிவுப் பரவலுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றார்.
            நூல்களை வாசிக்க வேண்டும் என விரும்பி, ஆனால் வாசிக்க முடியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நிறைய பேரில் நானும் ஒருவன். எனக்கு கல்வித் தொடர்பான நூல்களை வாசிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம். ஆனால் எந்த நூலை எடுத்து வைத்தாலும் கொட்டாவிதான் வருகிறது. இந்தக் குறையை எப்படிப் போக்குவது என்று தெரியாமல் இருந்த போதுதான் அவரது கல்வி நூல் வரிசை அறிமுகமானது.
            இப்போது அந்தக் குறை இல்லை. அவர் சுவாரசியமாக எழுதுகிறார் என்பதால் எல்லாவற்றையும் வாசித்து விடுகிறேன். இதுபோன்று அவரவர்களுக்கு ஆர்வமானவற்றை எழுதும் போது, ஆர்வம் இருந்தும் வாசிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு அது பயனாக இருக்கும் அல்லவா.
            அவர் திட்டமிட்டு கல்வி நூல் வரிசை எழுதுகிறார். நான் கண்டபடி எழுதித் தொலைக்கிறேன். அப்படித்தான் என்னால் வாசிக்க முடிகிறது.
            உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் நா. இராமமூர்த்தியின் கல்வி நூல் வரிசை முகநூல் பக்கத்திற்கு ஒரு டிரிப் அடித்துப் பாருங்கள். ஒவ்வொரு நூல் திறனாய்வும் ஒரு சுவாரசியமான சிறுகதைப் போல இருக்கும்.
            இப்படித்தான் நான் படிப்பதை, கேட்பதையெல்லாம் எழுதலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன். இதற்காக நா. இராமமூர்த்தியிடம் ஒரு நூல் திறனாய்வைக் கொடுத்துக் கருத்து கேட்டேன். மனுஷர் ஓ.கே. பண்ணி விட்டார்.

*****

மெளனத்திற்காகக் காத்திருப்பவர்கள்

மெளனத்திற்காகக் காத்திருப்பவர்கள்
விசயம் ஒன்றுதான்
அதை நீ புதிய பரிமாணம் என்று சொல்லி
கைதட்டச் சொல்வாய்
புத்தர் புன்னகைப்பார்
கிருஷ்ணர் குதூகலிப்பார்
கிறிஸ்து சிரிப்பார்
அவர்கள் சொல்லி மெளனமாகி விட்டார்கள்
நீ இப்போதுதான் சொல்லெடுத்துக் கொண்டிருக்கிறாய்
உன் மெளனத்துக்காகக் காத்திருப்பார்கள் அவர்கள்

*****

30 Dec 2017

சீக்கிரம் சாகாமல் இருக்க வழி!

குறளதிகாரம் - 1.3 - விகடபாரதி
சீக்கிரம் சாகாமல் இருக்க வழி!
            ஒருவரின் உள்ளத்தை அடைவது வாழ்வின் பயன். கணவன் மனைவியின் உள்ளத்தை அடைவதும், மனைவி கணவனின் உள்ளத்தை அடைவதும் இல்வாழ்வின் பயன். உள்ளம் கடந்த நிலையை அடைவது துறவின் பயன்.
            எப்படிப்பட்ட உள்ளத்தை அடைய நினைக்கிறோமே, அப்படியே நமது உள்ளமும் அமைகிறது. தீயவனை உயர்வானவனாக நினைக்கும் உள்ளம் தீமைகளை அடைகிறது. நல்லவனை உயர்வானவனாக நினைக்கும் உள்ளம் நன்மைகளை அடைகிறது.
            நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே ஆகிறீர் என்கிறார் விவேகானந்தர்.
            வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்று லாவோட்சுவிடம் கேட்கப்பட்ட போது அவர் மென்மையாக மிக மென்மையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு அவர் விளக்கமும் கொடுத்தார், கடினமாக இருக்கும் பல் சாவதற்கு முன் உதிர்ந்து விடுகிறது. மென்மையாக இருக்கும் நாக்கு செத்த பின்னும் உதிராமல் இருக்கிறது. கடினம் நீடித்த தன்மை அன்று. மென்மையே நீடித்த தன்மையைத் தருகிறது.
            காற்றும் நீரும் வேகமாக பிரவகிக்கும் போது கடினத்தோடு எதிர்த்து நிற்கும் பனை மரம் வீழ்கிறது. மென்மையாக இருந்து வளைந்து கொடுக்கும் நாணல் நின்று நிலைக்கிறது.
            மென்மையே நீடு வாழ்தலுக்கான வழி. மென்மை என்றால் எப்படிப்பட்ட மென்மை? மலர் போன்ற மென்மை.
            மலர் போன்ற மென்மையான உள்ளத்தை அடைய வேண்டும். அதை அடைய அப்படி உள்ளம் படைத்தோரை நேசித்துப் பூசிக்க வேண்டும். அவர்களின் மாட்சிமைப்பட்ட அடியை - வழியை அதாவது அவர் அப்படி அடியெடுத்து வைத்துச் செல்லும் அவரது மாட்சிமை பெற்ற வழியை பின்பற்றி நடந்தால் இந்த உலகில் நீடு வாழலாம்.
            உள்ளக் கடுமைக்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும் தொடர்பு இல்லாமலா இருக்கும்? கடுமையான உள்ளத்தோடு அடிக்கடி கோபப்பட்டு எரிந்து விழுந்தால் ரத்த அழுத்தம் எகிறாமலா இருக்கும்? கடுமையான உள்ளம் கொண்டு உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே செயல்பட்டுக் கொண்டிருந்தால் உடலில் கெட்டக் கொழுப்பு அதிகரிக்காமலா இருக்கும்? உள்ளக் கடுமை உடலைச் சீரழித்து விடும். அப்படி உடலைச் சீரழித்து விட்டால்... அப்புறம் எப்படி நீடு வாழ்வது? ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்,
            மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.

*****

ஏன் செய்யவில்லை என்றால்...

ஏன் செய்யவில்லை என்றால்...
            நிறைய செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதற்கானச் சூழ்நிலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். சூழ்நிலைகள் அப்படித்தான் இருக்கும். நீதான் வாய்ப்புகளைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு எதற்கு ஒரு அதிகார அமைப்பு?
            ஓர் ஆரோக்கியமான சமூகத்தில் களைப்பைப் போக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். டாஸ்மாக்கில் சென்று குடிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இங்கு என்ன இருக்கிறது? அந்த ஒரு வாய்ப்பு மட்டுமே இங்கு திட்டமிட்டு நிறுவப்பட்டு இருக்கிறது.
            இருக்கின்ற சூழ்நிலைகளையெல்லாம் எதிர்மறை சூழ்நிலைகளாக மாற்றி விட்டு ஏன் செய்யவில்லை என்ற கேள்விகள்தான் இங்கு அதிகம் எழுப்பப்படுகிறது?காடுகள் அழிந்து விட்டன. குளங்கள், ஏரிகள் தூர்க்கப்பட்டு விட்டன. ஆறுகள் சாக்கடைகளாக ஓடிக் கொண்டு இருக்கின்றன. நல்ல காற்றில் நச்சுக் காற்று நாளும் கலந்து கொண்டிருக்கிறது. கருவேல மரங்கள் ஏன் வெட்டப்படவில்லை? டெங்குப் பரவல் ஏன் தடுக்கப்படவில்லை? என்று கேள்விள் எழுப்பப்படுகின்றன. சந்தன மரங்கள் என்றால் வெட்டச் சொல்ல வேண்டுமா? சாலைப் பள்ளங்களில் தங்கக் காசுகள் கொட்டிக் கிடக்கிறது என்றால் அள்ளச் சொல்ல வேண்டுமா?
            ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகள் அதிகம் எழுப்பப்படுகின்றன.
            நாம் எதைப் புரிந்து கொள்கிறோமோ, அதில் தெளிவாகவும், சரியாகவும் செய்வோம். நாம் சரியாகப் புரிந்து கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோமா?
            நல்லதைச் செய்வதற்குள் ரெளடிகளால் மிரட்டப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களால் அச்சுறுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கைக் காப்பவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அஞ்சி அஞ்சித்தானே வாழவே வேண்டியிருக்கிறது. வாழ்வதே அஞ்சி அஞ்சி என்றால் எதைச் செய்வது? எப்படிச் செய்வது?
            ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நடவடிக்கை எடுத்து விடுவார்களா? பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என்று சொன்னால் கட்டுபடுத்தி விடுவார்களா? ஆற்றில் சாய நீரைக் கலக்கிறார்கள் என்று சொன்னால் நிறுத்தி விடுவார்களா? மணல் கொள்ளை நடக்கிறது என்று சொன்னால் கட்டுபடுத்தி விடுவார்களா?
            ஏன் செய்யவில்லை? என்று கேள்விகள் நம்மை நோக்கி நீட்ட மட்டுமே. பதிலுக்கு அதே கேள்வியை நாம் அவர்களை நோக்கி நீட்ட அன்று.

*****

வார்த்தைகளென சுருங்கும் வாழ்க்கை

வார்த்தைகளென சுருங்கும் வாழ்க்கை
உன்னைப் பார்த்த போது பிடித்துப் போனது
ஏதோ தோன்ற
எழுதிக் கொண்டே இருந்தேன்
உன்னைப் பிடிக்காமல் போனதும்
ஏதேதோ தோன்ற
எழுதிக் கொண்டே இருந்தேன்
எப்படியாகினும் எழுதித் தள்ளுவேன்
எனும் போது
உன்னைப் பார்ப்பதும் ஒன்றே
பார்க்காமல் போவதும் ஒன்றே
எழுத்தின் வழி நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்
பிடித்தல் ஒரு வார்த்தை
பிடிக்காதது ஒரு வார்த்தை
அதை நீ புலம்புவாய்
நான் எழுதுவேன்
சிலர் உரையாடலாம், விவாதிக்கலாம்
வார்த்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்
வாழ்க்கை அதற்குள் சுருங்கிக் கிடக்கும்

*****

29 Dec 2017

இரண்டாவது பயங்கரம்!

குறளதிகாரம் - 1.2 - விகடபாரதி
இரண்டாவது பயங்கரம்!
            கற்பது என்றால்...
            நன்மைகளைக் கற்பதும் கற்றல்தான்.
            தீமைகளைக் கற்பதும் கற்றல்தான்.
            களவையும் கற்று மற என்று சொன்னார்களே நம் முன்னோர்கள். களவு என்பது புறக்களவான திருட்டு அன்று, அகக்களவான காதல் என்று சொல்வாருமுளர்.
            பூட்டை உடைத்துத் திருடுவது என்பது சாமன்யமான காரியமான என்ன? பூட்டை உடைக்கக் கற்றிருந்தால்தானே சாத்தியம். பூட்டை உடைப்பது என்றால் சுத்தியல், கடப்பாரை வைத்து சத்தமாக உடைக்க முடியுமா? களவுக்கு அது பொருத்தமாகுமா? அதில் சில லாவகங்கள், நுட்பங்கள் இருக்கின்றன. அதைக் கற்றவன்தான் திறமையான திருடன். மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்பது திருட்டுக் கலையல்லவா!
            அது ஒரு வகை என்றால் கணினி யுகத்தில் ஹேக்கர்கஸ்கள் இருக்கிறார்களே. அவர்களை அதிபுத்திசாலிகள் என்று சொல்கிறார்கள். வேறு வகையில் சொன்னால் நவீன வடிவ பூட்டு உடைத்துத் திருடும் சாகசக்காரர்கள். கற்காத ஒருவன் ஹேக்கர் ஆக முடியுமா?
            ஆக கற்பது என்றால் எதை வேண்டுமானாலும் கற்பதுதான். அப்படிக் கற்பதனால் என்ன பயன்? தூய அறிவு உடையவர்களைத் தொழாத அந்த அறிவால் என்ன பயன்?
            தூய அறிவே தீமைகளைக் களைகிறது. தீமைக்கும் நன்மை செய்கிறது. அறிவு களங்கப்பட்டு விடாமல் இருக்க, தூய அறிவு உடையவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் தொடர்பினில் இருக்க வேண்டும்.
            மலையில் உருவாகும் மாசுபடாத நதி சமவெளியைக் கடப்பதற்குள் சாக்கடையாக மாறி விடுவதைப் போல, தூய அறிவோடு கற்றும் அறிவு கெட்டுச் செயல்படும் மடையர்கள் எத்தனைப் பேரை நாம் பார்த்திருக்கிறோம்.
            நாம் எப்படிப்பட்டவர்களை வணங்குகிறோம் என்பதைப் பொருத்துதான் நம் அறிவும் இருக்கிறது. பன்றியை வணங்கினால் கன்றும் மலம் தின்னும். யாரை வணங்குகிறமோ, யாருடன் பழகுகிறமோ அவருடைய தன்மைகளில் நம்மையுயறியாமல் நாம் ஒட்டிக் கொள்கிறோம்.
            திருடனுடன் வணங்கிப் பழகிக் கொண்டு திருடாமல் இருப்பது சிரமம். லஞ்சம், ஊழல் செய்பவர்களை வணங்கிப் பழகிக் கொண்டு அவ்வாறு இல்லாமல் நெறியோடு வாழ்வது ஒரு சவால். மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களோடு வணங்கிப் பழகிக் கொண்டு அந்தப் பழக்கம் இல்லாமல் தொடர்வதற்கு நல்லதிர்ஷடம் வேண்டும். அந்தத் துரதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும், ஆத்திகர்கள் சொல்கிறார்களே அந்தச் சனியைப் போலப் பின்தொடர்ந்து பற்றிக் கொள்ளலாம்.
            கற்றதன் பயன் தூய நல்லறிவு உடையவர்களோடு பழகுவதும், அவர்களை வணங்குவதும்தான்.
            மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லா புகழும் தரும் என்பார் வள்ளுவர்.
            மனநலம் நன்குடையராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து என்று இன்னொரு குறளில் மேலும் அக்கருத்தை வலியுறுத்துவார்.
            நல்ல நீரும் சாக்கடையோடு சேர்ந்தால் சாக்கடையாகுமே தவிர, சாக்கடை நல்ல நீராக ஆகாது.
            வணங்குதல் ஒரு கலத்தல், ஒரு இணைத்தல் நம்மை அறியாமலே நிகழ்கிறது. யாரை வணங்குகிறோமோ மறைமுகமாக அவரின் இனமாக நாம் மாறுகிறோம்.
            கற்றவர்கள் தூய அறிவு படைத்தவர்களையே வணங்க வேண்டும். அறிவில் மிகுதியாக இருக்கிறான் என்ற காரணத்திற்காக, அதிகாரத்தில் இருக்கிறான் என்பதற்காக, அறிவோடு பணமும் மிகுதியாக உடையவனாக இருக்கிறான் என்பதற்காக, அறிவோடு அன்புக்கும் பாசத்துக்கும் உரியவனாக இருக்கிறான் என்பதற்காக அவனை வணங்கினால், பாரதி சொல்வாரே படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் என்று. அப்படிப் போக வேண்டியதுதான்.
            உலகை அழிக்கும் பயங்கரவாதிகளிடமும் அறிவு இருக்கிறது. உலகைக் காக்கும் உத்தமர்களிடமும் அறிவு இருக்கிறது. நாம் எந்த அறிவை வணங்கப் போகிறோம் என்பதில் இருக்கிறது நமக்கான வாழ்வு.
            ஊழல், லஞ்சம் என்று பணத்தை லட்சம் கோடியாக சேர்த்தவனிடம் அறிவு இருக்கிறது. அஃது இன்றி எளிமையாக நேர்மையாக வாழ்பவர்களிடம் அறிவு இருக்கிறது. நாம் எந்த அறிவைப் போற்றப் போகிறோம்?
            நாம் ஆர்.கே.நகர் மக்களைப் போல பணமுடையவர்களின் அதிபுத்திசாலிதனமான அறிவை வணங்குபவர்களாகவும் இருக்கலாம். சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற காமராசரின் அறிவை வணங்குபவர்களாகவும் இருக்கலாம். எந்த அறிவை வணங்கியிருந்தால் நாம் நன்றாக இருந்திருப்போம் என்பதை இந்நிகழ்வை வைத்து சின்னக் குழந்தை கூட நமக்கு சொல்லி விடும்.
            இதைத்தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்,
            கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
            அறிவைச் செருப்பால் அடிக்க முடியுமா? என்று கேட்டால் அடிக்க முடியும்தான் என்று தோன்றுகிறது இந்த குறளைப் படித்தப் பிறகு. அறிவை என்றால் கெட்ட அறிவை.
            முதல் பயங்கரம் என்பது நாம் எதைக் கற்கிறோம் என்பதில் இருக்கிறது. தீவிரவாதத்தையும் கற்கலாம் அல்லவா!
            இரண்டாவது பயங்கரம் என்பது கற்ற பின் நாம் யாரை வணங்குகிறோம் என்பதில் இருக்கிறது. பணப் பெருச்சாளிகளையும், ஒழுக்கங்கெட்ட சாமியார்களையும், அதிகாரச் சீழ் ஒழுகும் பேய்களையும் வணங்கலாம் அல்லவா!
            முதல் பயங்கரம் இரண்டாவது பயங்கரமாக மாறுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. தூய அறிவு வடிவுடையவர்களை வணங்குவதன் மூலமாக, அவர்களோடு பழகுவதன் மூலமாக காப்பு செய்யலாம். இரண்டாவது பயங்கரத்திலிருந்து காப்பது அவ்வளவு எளிதா என்ன? அது மூளைச் சலவையில் சென்று முடிந்து விடுகிறது.
            இதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தெரியும், வள்ளுவர் அடித்திருக்கும் நெத்தியடி,
            கற்றதனால்
            ஆய பயனென்கொல்
            வாலறிவன்
            நற்றாள்
            தொழாஅர் எனின்?!
            வள்ளுவர் அப்போதே புதுக்கவிதையும் எழுதியிருக்கிறார் பாருங்களேன்!

*****

தொல்வினை தீர்தல் எளிதாமோ?

தொல்வினை தீர்தல் எளிதாமோ?
            இப்படிப் பணத்தை வாங்கி ஓட்டுப் போட்டால் அந்தத் தொல்வினையைத் தீர்த்தல் எளிதாமோ?
            ஏற்கனவே ஒன்றுக்குப் பாதிதான் செலவு செய்து சாலை அமைக்கிறார்கள், நிழற்குடை கட்டுகிறார்கள், பொது கட்டிடங்களை எழுப்புகிறார்கள், தூர் வாருகிறார்கள். இனி ஒன்றுக்கு காலோ, காலே அரைக்காலோதான் செலவு செய்வார்கள்.
            இனி எதிர்த்துதான் கேள்வி கேட்க முடியுமா என்ன? இப்படிக் கொள்ளையடிக்கிறீர்கள் என்று கேட்டு, ஓட்டுக்குக் கொடுத்த பணமெல்லாம் எப்படி வருகிறது என்று எதிர்கேள்வி கேட்கப்பட்டால் இருக்கின்ற முகத்தை எங்கே தூக்கிக் கொண்டு வைத்துக் கொள்வது?
            தலையெழுத்து!
            ஓட்டுக்குப் பணம் வாங்குவதில் இப்படி சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. தர்மம் இல்லாவிட்டால் சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். தர்மசங்கடம்!

*****

சோம்பலைக் கலைத்து விடாதே!

சோம்பலைக் கலைத்து விடாதே!
பொறு நண்பா!
இந்தச் சோம்பலிலிருந்து
இப்போது வெளிவர மாட்டேன்.
ரயில் பிடித்து
ஊர் சுற்றி
மலையேறி
காட்சிகள் பல கண்டு
மீண்டும் திரும்பி வரும் போது
திருப்தியாக இருக்கிறேன் என்கிறாய்.
நான் இப்போது
இருந்த இடத்தில் இருந்து கொண்டு
அப்படித்தான் இருக்கிறேன்
போய் வா நண்பா
என் சோம்பலைக் கலைத்து விடாதே.

*****

28 Dec 2017

முதல் அதிகாரம்

குறளதிகாரம் - 1.1 - விகடபாரதி
முதல் அதிகாரம்
            திருக்குறளில் கடவுள் வாழ்த்து முதல் அதிகாரம்.
            கடவுள் வாழ்த்து என்றால் யார் கடவுள் போல் வாழ்ந்தார்களோ அவர்களை வாழ்த்துவது.
            யார் கடவுள் என்றால்...? அதற்கான விளக்கம் திருக்குறளில் வருகிறது,
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என கடவுளுக்கான விளக்கத்தை வரையறை செய்கிறார் வள்ளுவர்.
            கடவுள் வாழ்த்தை எழுத்தில் தொடங்குகிறார் வள்ளுவர். அம்மரபே எழுத்தறித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு வித்தாகிறது.
            முதன்மைக்கு முதல் வணக்கம். அதுதான் முதல் குறளின் பொருள்.
            உங்கள் உலகுக்கு யார் முதன்மையானவரோ அவரை வணங்குங்கள்.
            அண்டமே பிண்டம், பிண்டம் அண்டம் என்பார்களே. அப்படி நீங்களே உலகம். உலகமே நீங்கள். உங்கள் உலகுக்கு யார் முதன்மையானவர் என்று கருதுகிறீர்களோ அவர்களை வணங்குங்கள்.
            வணக்கம்தான் வாழ்வு. வணங்கியவர்கள் வாழ்கிறார்கள். வணங்காதவர்கள் வீழ்கிறார்கள்.
            வணக்கத்தில் ஓர் இணக்கம் இருக்கிறது. மனித சமூகத்தோடு கொள்ளும் இணக்கம் அது. உலக வாழ்வுக்கு அவசியமான இணக்கம் அது.
            உங்கள் உலக வாழ்வுக்கு யார் யாரெல்லாம் அடிப்படையானவர்களோ அவர்களெல்லாம் முதன்மையானவர்கள். அவர்களை எல்லாம் வணங்குங்கள்.
            அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

*****

பசி கடத்தல்

சி கடத்தல்
பசியோடு இருக்கும்
ஒரு நூறு பேர்களையாவது
கடந்திருக்கும்
மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும்
மோட்டார் வண்டி.

*****

சிறிதும் பெரிதும்

சிறிதும் பெரிதும்
எதிலிருந்தும் பெறுவது
துளிதான்
கடல் தொலைவில் இருக்கிறது
தொலைவைக் கடந்தும் இருக்கிறது
புகைபடத்திற்குள் பிடிபட்டது
எவ்வளவு சிறிய கடல் என்பதை
நேரில் பார்த்தால்தான் பிடிபடும்
பெரியதைச் சிறிதாக்கிப் பார்க்கலாம்
நம் காலை நனைக்கும் கடல்
கப்பல் மிதக்கும் கடல்
*****

27 Dec 2017

ஜ(ப)ன(ண)நாயக அலசல்!

(ப)(ண)நாயக  அலசல்!
            ஆர்.கே.நகர் தேர்தலில் பத்தாயிரத்தை இருபது ரூபாயாகச் சுருக்கி டோக்கன் போல் வழங்கப்பட்ட செய்தியைப் பற்றிக் கொண்டு நண்பர் ஒருவர் கேட்டார், "இதை டீமானிடேஷசன் என்று சொல்லலாமா?"
            பத்தாயிரத்தை இருபது ரூபாயாகச் சுருக்கும் நடவடிக்கை இது. பின்பு இருபது ரூபாய் பத்தாயிரமாக விரிந்து கொள்ளும். ஹவாலா ஐடியா பெற்றெடுத்தக் குழந்தை என்கிறார்கள் இதை.
            மற்றபடி இருபது ரூபாய் நோட்டுக்கும் இரண்டாயிரம் நோட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இது இலேசான சிவப்பு என்றால், அது இலேசான ரோஸ். இது 20. அது எக்ஸ்ட்ரா ரெண்டு பூஜ்யங்கள் சேர்ந்து 2000. ஆக இரண்டாயிரம் நோட்டின் அச்சாரம் 20. ஜோடிப் பொருத்தம் பார்த்தால் பத்துக்கும் மேல் பொருத்தங்கள் இருக்கக் கூடும்.
            நிலைமை இப்படியிருக்க, இனி ஐந்தாயிரம், பத்தாயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டால் இடைத்தேர்தல்கள் தூள் பறக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
            இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டுமாவது டீமானிடேஷசன் செய்யலாம் என்று முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்ததை நண்பரிடம் குறிப்பிட்டேன். அது எப்படி முடியும் என்றார் அவர் அவசரமாக. அதனால்தான் குறிப்பிட்டேன் என்றேன்.
            ஓர் ஓட்டுக்கு பத்தாயிரம் என்பதெல்லாம் அநியாயமோ அநியாயம். பத்தாயிரம் கொடுத்தால் முதலிடம், ஆறாயிரம் கொடுத்தால் இரண்டாமிடம், இரண்டாயிரம் கொடுத்தால் மூன்றாமிடம் என்று அதற்கு ஒரு தராதரத்தை நிர்ணயித்தார்களே ஆர்.கே. தொகுதி மக்கள். அதுதான் அடிச்சான் பாரு ஹைலைட்.
            அதிலும் நோட்டாவுக்கு இரண்டாயிரம் ஓட்டுகளுக்கு மேல் விழுந்தது பாருங்கள். நோட்டா சார்பாக யார் நோட்டு விநியோகித்திருப்பார்கள்? என்ற கேள்வி காதைக் குடைந்து மூளையைக் கிறுகிறுக்க வைத்து விட்டது.
            இப்படியெல்லாம் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்பீர்கள். ஆனால் பாருங்கள், ஆளுங்கட்சியையும், எதிர்க் கட்சியையும் மீறி ஒரு சுயேட்சை வெல்ல முடியும் என்றால் ஜனநாயகம் செல்லும் பாதை சரியாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. உண்மையில் நம் ஜனநாயகம் சரியானப் பாதையில் சென்றால் எல்லாருக்குமே மகிழ்ச்சிதானே. நம் ஜனநாயகம் சரியானப் பாதையில்தானே செல்கிறது?!

*****

விசாரிப்புகள்

விசாரிப்புகள்
"பேஸ்புக்ல பார்க்க முடியலையே!" என்று விசாரிக்க
"வாட்ஸ் அப்ல இருக்கேன்!" என்கிறார்கள்.
"வாட்ஸ் அப்ல பார்க்க முடியலையே!" என்று விசாரிக்க
"இன்ஸ்டாகிராமில் இருக்கேன்!" என்கிறார்கள்.
"அட போங்கடா
நீங்களும் உங்க இருப்பும்!" என்று
ஆதங்கத்தோடு வருகையில்,
"பக்கத்துலதாம்பா இருக்கேன்
ஒருத்தரும் விசாரிக்கிறதில்ல!"
என்கிறார் அப்பா.

*****

அவனும் அவளும்

அவனும் அவளும்
வாங்கிச் சென்ற
மலிவான ஆணுறையில்
தீர்ந்து கொள்கிறது
அவன் வஞ்சம்
அவன்தான் என்ன செய்வான்
பாவம் என்று
தணிந்து கொள்கிறது
அவள் நெஞ்சம்

*****

26 Dec 2017

எழுத்துப் பணப் பிரகடனம்

எழுத்துப் பணப் பிரகடனம்
            சில எழுத்துகளைப் படிக்கத் துவங்கும் போதே தூக்கம் வருகிறது. சில எழுத்துகளைப் படிக்கத் துவங்கினால் தூக்கம் விலகுகிறது. தன்னுடைய எழுத்து தூக்கம் வர வைப்பதாக அமைந்து விடக் கூடாது என எஸ்.கே. கொஞ்சம் கலவரப்பட்டான்.
            தனக்குச் சுதந்திரம் தேவையென்றால் அதை நாவல்களில், இலக்கியங்களில் தேடுவதில் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்து இருக்கிறது. அதைத் தன்னுள்தான் தேட வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருக்கிறான்.
            தனக்கு என்னதான் வேண்டும்? கதைகள்தான் என்றால்... எளிமையான கதைகளேப் போதும். அது சொல்கின்ற நுட்பமான செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கதைகள் எப்படிப் புறப்பட்டு வருகின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
            எழுதுவது ஒரு கண்டுபிடிப்பு. எழுத்தின் நோக்கம் அது. எல்லாவற்றையும் எழுதிப் பார்த்து விட வேண்டும் என்று தோன்றும். விரிவான பெருந்தன்மையான தன்மையில் எழுதப்படுவதே நல்ல எழுத்து என்று நினைக்கிறான் எஸ்.கே.
            ஒருமுறை எஸ்.கே.விடம் கேட்கப்பட்ட போது அவன் சொன்னான், தன் எழுத்துகளை யார் வாசிக்க வேண்டுமோ அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள், அதை தான் தீர்மானிக்க விரும்பவில்லை என்று.
            "உங்கள் இதழின் வாசகர்கள் யார் என நீங்கள் தீர்மானித்து இருப்பீர்கள். அவர்களுக்கு ஏற்றாற் போல் நான் எழுத வேண்டும் எதிர்பார்ப்பீர்கள். அப்படி எழுத முடியுமா என எனக்குத் தெரியவில்லை. ஆகவே மன்னித்துக் கொள்ளுங்கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்.
            உங்களுக்குத் தேவையானது எனது எழுத்தில் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என் அனுமதி தேவையில்லை" என்று எஸ்.கே. இதழ்களுக்கு ஒருமுறை சொல்லியிருக்கிறான்.
            இப்படியெல்லாம் யோசித்தாலும் அவனின் அடிமனதில் சில கேள்விகள் எஞ்சி இருக்கின்றன. எப்படி இவர்களால் இந்த அளவுக்குப் பணம் சேர்க்க முடிகிறது? பணம் கொடுக்க முடிகிறது? மற்றவர்களிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையா? அவர்கள் ஏன் பணத்தை அவிழ்த்து விட யோசிக்கிறார்கள்?
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...