31 Dec 2017

எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் இருக்க...

குறளதிகாரம் - 1.4 - விகடபாரதி
எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் இருக்க...
            வாழ்க்கையில் விருப்பமோடு இருப்பதோ?
            வெறுப்போடு இருப்பதா?
            ஏன் இரண்டும் இல்லாமல் இருந்தால் என்ன?
            விரும்புவதால் பற்று உண்டாகிறது. வெறுப்பதால் பகை உண்டாகிறது. விருப்பத்தால் உருவாகும் பற்றே படிப்படியாக மற்றவர்களின் பகைமைக்குக் காரணமாகிறது.
            நமக்கு விருப்பமாக இருப்பதாலே, அது எல்லாருக்கும் விருப்பமாக இருக்கும் என்று சொல்ல இயலாது. நமது விருப்பம் மற்றவர்களுக்கு வெறுப்பாக இருக்கலாம்.
            இப்படி இருந்தால் அதுவும் தப்பு, அப்படி இருந்தால் அதுவும் தப்பு என்றால் எப்படித்தான் இருப்பது சரி என்றால் அந்த இரண்டின் படியும் இல்லாமல் இருப்பதுதான் சரி.
            மனிதன் என்பவன் இரண்டில் ஒரு நிலையில் நின்றாகத்தான் வேண்டும் என்று கட்டாயமா என்ன? இரண்டு பேர் அடித்துக் கொள்ளும் போது ஏன் ஒருவரின் பக்கம் நிற்க வேண்டும்? இரண்டு பேரின் பக்கமும் நிற்காமல் இருப்பது நல்லது. விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு பேரும் அடித்துக் கொள்ளும் போது அந்த இரண்டு பேரில் ஒருவரின் பக்கம் நாம் ஏன் நிற்க வேண்டும்?
            பகலைத் தொடர்ந்து இரவு வருவது போல, விருப்பத்தைத் தொடர்ந்து வெறுப்புதான் வருகிறது. இது ஒரு சுழற்சி என்பது தெரியாமலே இதற்குள் சுழன்று சுழன்று கழிகிறது மனித வாழ்க்கை.
            விருப்பத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும், வெறுப்பை தூக்கி எறிய நினைப்பதும் முட்டாள்தனம். இரண்டும் ஒன்றிலிருந்து பிறந்த இன்னொன்று. விருப்பு தாயானால் வெறுப்பு அதன் குழந்தையாகிறது. வெறுப்பு தாயானால் விருப்பு அதன் குழந்தையாகிறது.
            விரும்பிப் பெற்றக் குழந்தைதான். கொஞ்சி சீராட்டிப் பாராட்டி வளர்த்த குழந்தைதான். முதிய பருவத்தில் அரவணைக்காத போது வெறுப்புதானே தோன்றுகிறது.
            அன்றாடம் வெறுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஓர் ஆபத்தில் உதவிடும் போதும் விருப்பத்திற்குரியவராக மாறி விடவில்லையா?
            அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்களே. வாழ்க்கையில் நிரந்த விருப்பமும் இல்லை, நிரந்தர வெறுப்பும் இல்லை.
            வாழ்க்கையும் ஒரு அரசியல்தான். விருப்பத்தையும், வெறுப்பையும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொள்ளும் ஒரு அரசியல்.
            ச்சீ... ச்சீ....ச்சீ... இதென்ன அரசியல் போன்ற கீழ்த்தரமான வாழ்க்கை என்று நினைத்தால்... வாழ்க்கையில் அரசியல் பண்ணுவதை விட்டு விட வேண்டும். அப்போது நமக்கு யாரும் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எல்லாரும் நம் சக தோழமைகளாகி விடுவர்.
            வாழ்க்கைக்கும் அப்படியே. இதென்ன வாழ்க்கை என்று சலிப்புறுவதற்கா வாழ்க்கை?
            விருப்பம் - வெறுப்பு இரண்டும் இல்லாமல் நடந்து கொண்டால் எந்த துன்பமும் இருக்காது.
            விரும்பியவர்களுக்கு நன்மையும், வெறுப்பவர்களுக்குத் தீமையும் செய்ய வேண்டும் என்று தோணாது. அப்போது நமக்குதான் விருப்பு - வெறுப்பு இரண்டும் இல்லாமல் போய் விட்டதே. அதனால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வோம்.
            மனைவியை விரும்புகிறேன், குழந்தைகளை விரும்புகிறேன், அவர்கள் வளமோடு வாழத்தான் லஞ்சம் வாங்குகிறேன், ஊழல் செய்து பணத்தை ஈட்டுகிறேன் என்று சொல்வோர் எத்தனை பேர்?
            எனக்குப் பிடிக்கவில்லை, நான் வெறுக்கிறேன் அதனால்தான் அடித்தேன், உதைத்தேன், கொன்று போட்டேன் என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?
            இந்த விருப்பத்தையும், வெறுப்பையும் கடந்து விட்டால், இல்லாமல் செய்து விட்டால் எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வோம் இல்லையா!
            எதைச் செய்ய வேண்டுமோ, அதை விருப்பு வெறுப்பு இன்றிச் செய்தால் எந்தத் தீமையும் ஏற்படப் போவதில்லை.
            விருப்பு, வெறுப்பற்ற நிலையில் இடும்பை இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த கொள்கையைப் பின்பற்றினால், அல்லது அப்படி உயர்ந்த கொள்கையைப் பின்பற்றுபவரைப் பின்பற்றி நாம் நடந்தால் இப்போதும், எப்போதும், முப்போதும், யாண்டும் இடும்பை இல.
            வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
            இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு வள்ளுவக் கிழவன் சொன்னது பொய்யாகி விடுமா என்ன!
            எந்தக் காலத்திலும் துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு இதுவே மார்க்கம். இது வள்ளுவரின் தீர்க்கம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...