30 Dec 2017

சீக்கிரம் சாகாமல் இருக்க வழி!

குறளதிகாரம் - 1.3 - விகடபாரதி
சீக்கிரம் சாகாமல் இருக்க வழி!
            ஒருவரின் உள்ளத்தை அடைவது வாழ்வின் பயன். கணவன் மனைவியின் உள்ளத்தை அடைவதும், மனைவி கணவனின் உள்ளத்தை அடைவதும் இல்வாழ்வின் பயன். உள்ளம் கடந்த நிலையை அடைவது துறவின் பயன்.
            எப்படிப்பட்ட உள்ளத்தை அடைய நினைக்கிறோமே, அப்படியே நமது உள்ளமும் அமைகிறது. தீயவனை உயர்வானவனாக நினைக்கும் உள்ளம் தீமைகளை அடைகிறது. நல்லவனை உயர்வானவனாக நினைக்கும் உள்ளம் நன்மைகளை அடைகிறது.
            நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே ஆகிறீர் என்கிறார் விவேகானந்தர்.
            வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்று லாவோட்சுவிடம் கேட்கப்பட்ட போது அவர் மென்மையாக மிக மென்மையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு அவர் விளக்கமும் கொடுத்தார், கடினமாக இருக்கும் பல் சாவதற்கு முன் உதிர்ந்து விடுகிறது. மென்மையாக இருக்கும் நாக்கு செத்த பின்னும் உதிராமல் இருக்கிறது. கடினம் நீடித்த தன்மை அன்று. மென்மையே நீடித்த தன்மையைத் தருகிறது.
            காற்றும் நீரும் வேகமாக பிரவகிக்கும் போது கடினத்தோடு எதிர்த்து நிற்கும் பனை மரம் வீழ்கிறது. மென்மையாக இருந்து வளைந்து கொடுக்கும் நாணல் நின்று நிலைக்கிறது.
            மென்மையே நீடு வாழ்தலுக்கான வழி. மென்மை என்றால் எப்படிப்பட்ட மென்மை? மலர் போன்ற மென்மை.
            மலர் போன்ற மென்மையான உள்ளத்தை அடைய வேண்டும். அதை அடைய அப்படி உள்ளம் படைத்தோரை நேசித்துப் பூசிக்க வேண்டும். அவர்களின் மாட்சிமைப்பட்ட அடியை - வழியை அதாவது அவர் அப்படி அடியெடுத்து வைத்துச் செல்லும் அவரது மாட்சிமை பெற்ற வழியை பின்பற்றி நடந்தால் இந்த உலகில் நீடு வாழலாம்.
            உள்ளக் கடுமைக்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும் தொடர்பு இல்லாமலா இருக்கும்? கடுமையான உள்ளத்தோடு அடிக்கடி கோபப்பட்டு எரிந்து விழுந்தால் ரத்த அழுத்தம் எகிறாமலா இருக்கும்? கடுமையான உள்ளம் கொண்டு உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே செயல்பட்டுக் கொண்டிருந்தால் உடலில் கெட்டக் கொழுப்பு அதிகரிக்காமலா இருக்கும்? உள்ளக் கடுமை உடலைச் சீரழித்து விடும். அப்படி உடலைச் சீரழித்து விட்டால்... அப்புறம் எப்படி நீடு வாழ்வது? ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்,
            மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...