அறிவுப் பரவல் வேண்டும் என்றவரின் அவாவிற்காக...
படிக்கின்ற விசயங்களைப் பற்றியும் எழுதுங்கள்
ஐயா என்கிறார்கள். நான் இவ்வளவு படித்திருக்கிறேன் என்று நம்மைப் பற்றி பெரிதாக நினைத்து
விடுவார்களோ என்ற கூச்சம். இப்படி ஒரு கற்பிதம் எல்லாருக்கும் ஏற்படும். திருக்குறளை
நான் முழுமையாக படித்திருக்கிறேன் என்று சொல்லி பாருங்கள். பெரிய ஆளாக நினைத்து விடுவார்கள்.
நான் படித்திருக்கிறேன் என்றுதான் சொல்கிறேன், அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேனா என்று
யோசிக்க மாட்டார்கள்.
யான் படிப்பதால், நீங்கள் அவ்வளவு பெரிதாக
நினைப்பதற்கு ஒர்த் இல்லாத ஆள் என்பதால்... அந்த வண்ணம் நீங்கள் உட்பட யாரும் நினைத்து
விடக் கூடாது என்பதற்காகவே படித்ததை எழுதுவதைத் தவிர்த்து விடுவதுண்டு.
அது ஒரு போதை மாதிரி ஆகி விட்டது. தினம்
போதையேற்றிக் கொள்பவன் ஒரு நாள் போதை ஏற்றாமல் இரு என்றால் இருப்பானா? அவன் இருக்க
வேண்டும் என்றாலும் அவன் நரம்பு மண்டலம் விடாது. அவனை ஆட்டிப் படைத்து விடும். கை,
கால், மண்டை என்று உடல் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாகப் பிரிந்து ஆடத் துவங்கி விடும்
அல்லவா. அப்படி ஒரு போதையால் படித்துக் கொண்டிருக்கிறேன்.
தினம் பல் துலக்கிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு நாள் பல் துலக்காமல் சாப்பிட்டுப் பாருங்களேன். முடியாது அல்லவா! அப்படி ஒரு பழக்கத்திற்கு
ஆளாகி விட்டதாலும் இந்தப் படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. படிப்பு என்று சொல்லி
விட்டேனா, வாசிப்பு என்று திருத்திக் கொள்ளுங்கள்.
அப்புறம் திடீரென்று படிப்பதை எழுதுவதற்கு
ஒரு தைரியம் பிறந்து விட்டது. கூச்சம் உடைந்து விட்டது. தானாக உடைந்தது இல்லை இது.
தென்குவளவேலியில் ஓர் அறிவியல் ஆசிரியர் இருக்கிறார். பேர் நா. இராமமூர்த்தி. உடைத்துப்
போட்டவர் அவர்தான்.
அவர் முகநூலில் கல்வி நூல் வரிசை என்ற
பெயரில் தான் வாசிக்கும் கல்வித் தொடர்பான நூல்களை எழுதி வருகிறார். நூல்களை வாசிக்க
முடியாதவர்களுக்கும், தரமான நூல்களை நாடுபவர்களுக்கும் இது ரொம்ப உபயோகமாக இருக்கும்
என்றார். அத்துடன் அறிவுப் பரவ வேண்டும். படித்த அறிவைச் சுருக்கி வைத்துக் கொள்ளாமல்
அறிவுப் பரவலுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றார்.
நூல்களை வாசிக்க வேண்டும் என விரும்பி,
ஆனால் வாசிக்க முடியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நிறைய பேரில் நானும்
ஒருவன். எனக்கு கல்வித் தொடர்பான நூல்களை வாசிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
ஆனால் எந்த நூலை எடுத்து வைத்தாலும் கொட்டாவிதான் வருகிறது. இந்தக் குறையை எப்படிப்
போக்குவது என்று தெரியாமல் இருந்த போதுதான் அவரது கல்வி நூல் வரிசை அறிமுகமானது.
இப்போது அந்தக் குறை இல்லை. அவர் சுவாரசியமாக
எழுதுகிறார் என்பதால் எல்லாவற்றையும் வாசித்து விடுகிறேன். இதுபோன்று அவரவர்களுக்கு
ஆர்வமானவற்றை எழுதும் போது, ஆர்வம் இருந்தும் வாசிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு
அது பயனாக இருக்கும் அல்லவா.
அவர் திட்டமிட்டு கல்வி நூல் வரிசை எழுதுகிறார்.
நான் கண்டபடி எழுதித் தொலைக்கிறேன். அப்படித்தான் என்னால் வாசிக்க முடிகிறது.
உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் நா.
இராமமூர்த்தியின் கல்வி நூல் வரிசை முகநூல் பக்கத்திற்கு ஒரு டிரிப் அடித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு நூல் திறனாய்வும் ஒரு சுவாரசியமான சிறுகதைப் போல இருக்கும்.
இப்படித்தான் நான் படிப்பதை, கேட்பதையெல்லாம்
எழுதலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன். இதற்காக நா. இராமமூர்த்தியிடம் ஒரு நூல் திறனாய்வைக்
கொடுத்துக் கருத்து கேட்டேன். மனுஷர் ஓ.கே. பண்ணி விட்டார்.
*****
No comments:
Post a Comment