29 Dec 2017

இரண்டாவது பயங்கரம்!

குறளதிகாரம் - 1.2 - விகடபாரதி
இரண்டாவது பயங்கரம்!
            கற்பது என்றால்...
            நன்மைகளைக் கற்பதும் கற்றல்தான்.
            தீமைகளைக் கற்பதும் கற்றல்தான்.
            களவையும் கற்று மற என்று சொன்னார்களே நம் முன்னோர்கள். களவு என்பது புறக்களவான திருட்டு அன்று, அகக்களவான காதல் என்று சொல்வாருமுளர்.
            பூட்டை உடைத்துத் திருடுவது என்பது சாமன்யமான காரியமான என்ன? பூட்டை உடைக்கக் கற்றிருந்தால்தானே சாத்தியம். பூட்டை உடைப்பது என்றால் சுத்தியல், கடப்பாரை வைத்து சத்தமாக உடைக்க முடியுமா? களவுக்கு அது பொருத்தமாகுமா? அதில் சில லாவகங்கள், நுட்பங்கள் இருக்கின்றன. அதைக் கற்றவன்தான் திறமையான திருடன். மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்பது திருட்டுக் கலையல்லவா!
            அது ஒரு வகை என்றால் கணினி யுகத்தில் ஹேக்கர்கஸ்கள் இருக்கிறார்களே. அவர்களை அதிபுத்திசாலிகள் என்று சொல்கிறார்கள். வேறு வகையில் சொன்னால் நவீன வடிவ பூட்டு உடைத்துத் திருடும் சாகசக்காரர்கள். கற்காத ஒருவன் ஹேக்கர் ஆக முடியுமா?
            ஆக கற்பது என்றால் எதை வேண்டுமானாலும் கற்பதுதான். அப்படிக் கற்பதனால் என்ன பயன்? தூய அறிவு உடையவர்களைத் தொழாத அந்த அறிவால் என்ன பயன்?
            தூய அறிவே தீமைகளைக் களைகிறது. தீமைக்கும் நன்மை செய்கிறது. அறிவு களங்கப்பட்டு விடாமல் இருக்க, தூய அறிவு உடையவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் தொடர்பினில் இருக்க வேண்டும்.
            மலையில் உருவாகும் மாசுபடாத நதி சமவெளியைக் கடப்பதற்குள் சாக்கடையாக மாறி விடுவதைப் போல, தூய அறிவோடு கற்றும் அறிவு கெட்டுச் செயல்படும் மடையர்கள் எத்தனைப் பேரை நாம் பார்த்திருக்கிறோம்.
            நாம் எப்படிப்பட்டவர்களை வணங்குகிறோம் என்பதைப் பொருத்துதான் நம் அறிவும் இருக்கிறது. பன்றியை வணங்கினால் கன்றும் மலம் தின்னும். யாரை வணங்குகிறமோ, யாருடன் பழகுகிறமோ அவருடைய தன்மைகளில் நம்மையுயறியாமல் நாம் ஒட்டிக் கொள்கிறோம்.
            திருடனுடன் வணங்கிப் பழகிக் கொண்டு திருடாமல் இருப்பது சிரமம். லஞ்சம், ஊழல் செய்பவர்களை வணங்கிப் பழகிக் கொண்டு அவ்வாறு இல்லாமல் நெறியோடு வாழ்வது ஒரு சவால். மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களோடு வணங்கிப் பழகிக் கொண்டு அந்தப் பழக்கம் இல்லாமல் தொடர்வதற்கு நல்லதிர்ஷடம் வேண்டும். அந்தத் துரதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும், ஆத்திகர்கள் சொல்கிறார்களே அந்தச் சனியைப் போலப் பின்தொடர்ந்து பற்றிக் கொள்ளலாம்.
            கற்றதன் பயன் தூய நல்லறிவு உடையவர்களோடு பழகுவதும், அவர்களை வணங்குவதும்தான்.
            மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லா புகழும் தரும் என்பார் வள்ளுவர்.
            மனநலம் நன்குடையராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து என்று இன்னொரு குறளில் மேலும் அக்கருத்தை வலியுறுத்துவார்.
            நல்ல நீரும் சாக்கடையோடு சேர்ந்தால் சாக்கடையாகுமே தவிர, சாக்கடை நல்ல நீராக ஆகாது.
            வணங்குதல் ஒரு கலத்தல், ஒரு இணைத்தல் நம்மை அறியாமலே நிகழ்கிறது. யாரை வணங்குகிறோமோ மறைமுகமாக அவரின் இனமாக நாம் மாறுகிறோம்.
            கற்றவர்கள் தூய அறிவு படைத்தவர்களையே வணங்க வேண்டும். அறிவில் மிகுதியாக இருக்கிறான் என்ற காரணத்திற்காக, அதிகாரத்தில் இருக்கிறான் என்பதற்காக, அறிவோடு பணமும் மிகுதியாக உடையவனாக இருக்கிறான் என்பதற்காக, அறிவோடு அன்புக்கும் பாசத்துக்கும் உரியவனாக இருக்கிறான் என்பதற்காக அவனை வணங்கினால், பாரதி சொல்வாரே படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் என்று. அப்படிப் போக வேண்டியதுதான்.
            உலகை அழிக்கும் பயங்கரவாதிகளிடமும் அறிவு இருக்கிறது. உலகைக் காக்கும் உத்தமர்களிடமும் அறிவு இருக்கிறது. நாம் எந்த அறிவை வணங்கப் போகிறோம் என்பதில் இருக்கிறது நமக்கான வாழ்வு.
            ஊழல், லஞ்சம் என்று பணத்தை லட்சம் கோடியாக சேர்த்தவனிடம் அறிவு இருக்கிறது. அஃது இன்றி எளிமையாக நேர்மையாக வாழ்பவர்களிடம் அறிவு இருக்கிறது. நாம் எந்த அறிவைப் போற்றப் போகிறோம்?
            நாம் ஆர்.கே.நகர் மக்களைப் போல பணமுடையவர்களின் அதிபுத்திசாலிதனமான அறிவை வணங்குபவர்களாகவும் இருக்கலாம். சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற காமராசரின் அறிவை வணங்குபவர்களாகவும் இருக்கலாம். எந்த அறிவை வணங்கியிருந்தால் நாம் நன்றாக இருந்திருப்போம் என்பதை இந்நிகழ்வை வைத்து சின்னக் குழந்தை கூட நமக்கு சொல்லி விடும்.
            இதைத்தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்,
            கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
            அறிவைச் செருப்பால் அடிக்க முடியுமா? என்று கேட்டால் அடிக்க முடியும்தான் என்று தோன்றுகிறது இந்த குறளைப் படித்தப் பிறகு. அறிவை என்றால் கெட்ட அறிவை.
            முதல் பயங்கரம் என்பது நாம் எதைக் கற்கிறோம் என்பதில் இருக்கிறது. தீவிரவாதத்தையும் கற்கலாம் அல்லவா!
            இரண்டாவது பயங்கரம் என்பது கற்ற பின் நாம் யாரை வணங்குகிறோம் என்பதில் இருக்கிறது. பணப் பெருச்சாளிகளையும், ஒழுக்கங்கெட்ட சாமியார்களையும், அதிகாரச் சீழ் ஒழுகும் பேய்களையும் வணங்கலாம் அல்லவா!
            முதல் பயங்கரம் இரண்டாவது பயங்கரமாக மாறுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. தூய அறிவு வடிவுடையவர்களை வணங்குவதன் மூலமாக, அவர்களோடு பழகுவதன் மூலமாக காப்பு செய்யலாம். இரண்டாவது பயங்கரத்திலிருந்து காப்பது அவ்வளவு எளிதா என்ன? அது மூளைச் சலவையில் சென்று முடிந்து விடுகிறது.
            இதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தெரியும், வள்ளுவர் அடித்திருக்கும் நெத்தியடி,
            கற்றதனால்
            ஆய பயனென்கொல்
            வாலறிவன்
            நற்றாள்
            தொழாஅர் எனின்?!
            வள்ளுவர் அப்போதே புதுக்கவிதையும் எழுதியிருக்கிறார் பாருங்களேன்!

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...