26 Dec 2017

எழுத்துப் பணப் பிரகடனம்

எழுத்துப் பணப் பிரகடனம்
            சில எழுத்துகளைப் படிக்கத் துவங்கும் போதே தூக்கம் வருகிறது. சில எழுத்துகளைப் படிக்கத் துவங்கினால் தூக்கம் விலகுகிறது. தன்னுடைய எழுத்து தூக்கம் வர வைப்பதாக அமைந்து விடக் கூடாது என எஸ்.கே. கொஞ்சம் கலவரப்பட்டான்.
            தனக்குச் சுதந்திரம் தேவையென்றால் அதை நாவல்களில், இலக்கியங்களில் தேடுவதில் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்து இருக்கிறது. அதைத் தன்னுள்தான் தேட வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருக்கிறான்.
            தனக்கு என்னதான் வேண்டும்? கதைகள்தான் என்றால்... எளிமையான கதைகளேப் போதும். அது சொல்கின்ற நுட்பமான செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கதைகள் எப்படிப் புறப்பட்டு வருகின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
            எழுதுவது ஒரு கண்டுபிடிப்பு. எழுத்தின் நோக்கம் அது. எல்லாவற்றையும் எழுதிப் பார்த்து விட வேண்டும் என்று தோன்றும். விரிவான பெருந்தன்மையான தன்மையில் எழுதப்படுவதே நல்ல எழுத்து என்று நினைக்கிறான் எஸ்.கே.
            ஒருமுறை எஸ்.கே.விடம் கேட்கப்பட்ட போது அவன் சொன்னான், தன் எழுத்துகளை யார் வாசிக்க வேண்டுமோ அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள், அதை தான் தீர்மானிக்க விரும்பவில்லை என்று.
            "உங்கள் இதழின் வாசகர்கள் யார் என நீங்கள் தீர்மானித்து இருப்பீர்கள். அவர்களுக்கு ஏற்றாற் போல் நான் எழுத வேண்டும் எதிர்பார்ப்பீர்கள். அப்படி எழுத முடியுமா என எனக்குத் தெரியவில்லை. ஆகவே மன்னித்துக் கொள்ளுங்கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்.
            உங்களுக்குத் தேவையானது எனது எழுத்தில் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என் அனுமதி தேவையில்லை" என்று எஸ்.கே. இதழ்களுக்கு ஒருமுறை சொல்லியிருக்கிறான்.
            இப்படியெல்லாம் யோசித்தாலும் அவனின் அடிமனதில் சில கேள்விகள் எஞ்சி இருக்கின்றன. எப்படி இவர்களால் இந்த அளவுக்குப் பணம் சேர்க்க முடிகிறது? பணம் கொடுக்க முடிகிறது? மற்றவர்களிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையா? அவர்கள் ஏன் பணத்தை அவிழ்த்து விட யோசிக்கிறார்கள்?
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...