30 Dec 2017

ஏன் செய்யவில்லை என்றால்...

ஏன் செய்யவில்லை என்றால்...
            நிறைய செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதற்கானச் சூழ்நிலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். சூழ்நிலைகள் அப்படித்தான் இருக்கும். நீதான் வாய்ப்புகளைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு எதற்கு ஒரு அதிகார அமைப்பு?
            ஓர் ஆரோக்கியமான சமூகத்தில் களைப்பைப் போக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். டாஸ்மாக்கில் சென்று குடிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இங்கு என்ன இருக்கிறது? அந்த ஒரு வாய்ப்பு மட்டுமே இங்கு திட்டமிட்டு நிறுவப்பட்டு இருக்கிறது.
            இருக்கின்ற சூழ்நிலைகளையெல்லாம் எதிர்மறை சூழ்நிலைகளாக மாற்றி விட்டு ஏன் செய்யவில்லை என்ற கேள்விகள்தான் இங்கு அதிகம் எழுப்பப்படுகிறது?காடுகள் அழிந்து விட்டன. குளங்கள், ஏரிகள் தூர்க்கப்பட்டு விட்டன. ஆறுகள் சாக்கடைகளாக ஓடிக் கொண்டு இருக்கின்றன. நல்ல காற்றில் நச்சுக் காற்று நாளும் கலந்து கொண்டிருக்கிறது. கருவேல மரங்கள் ஏன் வெட்டப்படவில்லை? டெங்குப் பரவல் ஏன் தடுக்கப்படவில்லை? என்று கேள்விள் எழுப்பப்படுகின்றன. சந்தன மரங்கள் என்றால் வெட்டச் சொல்ல வேண்டுமா? சாலைப் பள்ளங்களில் தங்கக் காசுகள் கொட்டிக் கிடக்கிறது என்றால் அள்ளச் சொல்ல வேண்டுமா?
            ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகள் அதிகம் எழுப்பப்படுகின்றன.
            நாம் எதைப் புரிந்து கொள்கிறோமோ, அதில் தெளிவாகவும், சரியாகவும் செய்வோம். நாம் சரியாகப் புரிந்து கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோமா?
            நல்லதைச் செய்வதற்குள் ரெளடிகளால் மிரட்டப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களால் அச்சுறுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கைக் காப்பவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அஞ்சி அஞ்சித்தானே வாழவே வேண்டியிருக்கிறது. வாழ்வதே அஞ்சி அஞ்சி என்றால் எதைச் செய்வது? எப்படிச் செய்வது?
            ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நடவடிக்கை எடுத்து விடுவார்களா? பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என்று சொன்னால் கட்டுபடுத்தி விடுவார்களா? ஆற்றில் சாய நீரைக் கலக்கிறார்கள் என்று சொன்னால் நிறுத்தி விடுவார்களா? மணல் கொள்ளை நடக்கிறது என்று சொன்னால் கட்டுபடுத்தி விடுவார்களா?
            ஏன் செய்யவில்லை? என்று கேள்விகள் நம்மை நோக்கி நீட்ட மட்டுமே. பதிலுக்கு அதே கேள்வியை நாம் அவர்களை நோக்கி நீட்ட அன்று.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...