1 Dec 2025

அபராதத்திலும் கடனிலும் பறிபோகும் பணம்!

அபராதத்திலும் கடனிலும் பறிபோகும் பணம்!

இந்தியர்கள் இரண்டு விதங்களில் தங்கள் பணத்தைத் தடுக்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், வேறு வழியில்லாமல் இழக்கிறார்கள்.

ஒன்று, வங்கிகள் விதிக்கும் அபராதம்.

மற்றொன்று கடனுக்குச் செலுத்தும் அதிகபடியான வட்டி.

முன்பெல்லாம் இவற்றை யார் செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், பகுதிக்கு ஒரு தாதா உருவாகி அட்சர சுத்தமாகச் செய்து கொண்டிருந்தார். இதைக் கருவாக்கி உருவாக்கித் திரைப்படங்கள் கதை நாயகர்களை அசகாய சூரர்களாகப் படைத்துத் தங்கள் பங்குக்கு மக்களிடமிருந்து பணத்தை உறிஞ்சிக் கல்லா கட்டிக் கொண்டிருந்தன.

இப்போது விடயத்துக்கு வருவோம்.

விடயம் 1

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையில் ஏற்படும் குறைவுக்கு விதிக்கும் அபராதத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 8500 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளன. ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கு இருப்பதற்குக் கொடுக்கும் தண்டையா என்ன இது? சும்மா இருந்தவர்களைச் சொரிந்து விட்டு, அரிப்புக்கு மருந்தென ஆயிரம் ரூபாய் வாங்கிய கதையாக இருக்கிறது இது.

இந்த அபராதம் என்பது கோடீஸ்வரர்களிடமிருந்தோ, லட்சாபதிகளிடமிருந்தோ பெறப்பட்ட அபராதம் கிடையாது. ஏழை எளிய மக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடும் அன்றாடங்காய்ச்சிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பெறப்பட்ட அபராதம்.

ஆயிரம் கோடிகளில் கடன்களை வாங்கிவிட்டு தப்பி விட்ட பெரும்பணக்காரர்களையெல்லாம் எவ்வித அபராதமும் இல்லாமலும், அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யாமலும், அவர்களின் கடன்தொகைக்கான நட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கும் வங்கிகள் அன்றாட வாழ்வை நடத்தவே அல்லல்படும் மக்களை இப்படி சுரண்டி எடுத்து வதைப்பது அதுவும் பொதுத்துறை வங்கிகளே வாட்டி வதைத்து எடுப்பது எந்த விதத்தில் நியாயமோ?

அபராதத்தின் மூலமாகவே இப்படி வங்கிகள் லாபம் ஈட்ட அனுமதித்தது யாரோ?

இதெல்லாவற்றையும் விட அண்மையில் ஒரு தனியார் வங்கியானது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஐம்பதாயிரமாக உயர்த்துவேன் என்று அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதை தற்போது பதினைந்தாயிரமாகக் குறைந்திருக்கிறது. இங்கு பலரின் மாத வருமானமே பதினைந்தாயிரமும் அதற்கும் குறைவுதான் இல்லையா? இந்த வங்கிகளின் ஏகபோக அறிவிப்புக்கு எவ்வித தடையோ, கட்டுபாடோ இல்லையா என்ன?

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி – ஆர்பிஐ) குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான அபராதம் குறித்து கூறும் போது அது வங்கிகளின் சுதந்திரம் என்று கூறுவது அதிர்ச்சியை உச்சபட்ச முடுக்கத்தில் (டாப் கியரில்) தூக்குகிறது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற முழக்கத்தை முழங்கி, அனைவரையும் வங்கிக் கணக்கைத் தொடங்க செய்து விட்டு, இப்போது அவர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென, அவர்களின் குறைந்தபட்ச இருப்பு பணத்தையும் அபராதமாக விழுங்குவது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும்?

இது குறித்து எதைச் சொல்வது? நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும், மக்களை வங்கிக் கணக்குத் தொடங்கச் செய்து கெடுக்கும் போலிருக்கிறது.  

முதல் விடயம் முடிந்தது. அடுத்த விடயத்துக்குச் செல்வோம்.

விடயம் 2

யூபிஐ (UPI) என்பது Unified Payment Interface என்பதன் சுருக்கம்.

யூபிஐ வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. கடன் வாங்குவதையும் எளிதாக்கியிருக்கிறது. அதற்கு சாட்சிதான் 93,857 கோடி ரூபாய் பரிவர்த்தனை. இந்த பரிவர்த்தனைக்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம்? இத்தொகை முழுவதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை.

அண்மையில் யூபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் 16 சதவீத பரிவர்த்தனைகள் மாதாந்திர தவணைத் தொகையைத் (இஎம்ஐ) திருப்பிச் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், மளிகை சாமான்களுக்காக மேற்கொள்ளப்படும் யூபிஐ பரிவர்த்தனைகள் வெறும் 2 சதவீதம்தான் என்ற புள்ளி விவரத்தை நோக்க வேண்டும்.

நகைக் கடன்களுக்கான பரிவர்த்தனைகள் யூபிஐ மூலம் ஒரு லட்சம் கோடி அளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

போகிறப் போக்கைப் பார்த்தால் கடன் கொண்டார் நெஞ்சம் போல என்பதை மாற்றி கடன் கொண்டார் யூபிஐ போல என மாற்றி எழுதத்தான் வேண்டும் போலிருக்கிறது.

இந்த இரண்டு விடயங்களும் தவிர்க்கப்பட்டு விட்டால் ஒவ்வோர் இந்தியர் கணக்கிலும் சம்பாதிக்காமலே சில பல ஆயிரங்கள் எப்போதும் கையிருப்பில் இருக்கும் என்பது ‘ஆனந்த நிதி சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது நனவாகும் கனவுதானோ என்ன?

*****