25 Dec 2025

பசியோடு வந்திருக்கும் தேவதை

அம்முக்குட்டியின் கோபம்

ரோஸ் நிறத்தில் வாங்கி வந்த கோழிக்குஞ்சு

வெள்ளையாய் வளர வளர

அழுது கொண்டிருந்தாள் அம்முக்குட்டி

வெயிலில் அலைந்ததால் வெளுத்து விட்டதாய்

சமாதானப்படுத்தி வைத்தாள் அம்மா

அன்று முதல்

இனி வெயிலில் அதிகம் அலையக் கூடாது என்று

வெள்ளையிடம்

கோபப்பட ஆரம்பித்தாள் அம்முக்குட்டி

*****

பசியோடு வந்திருக்கும் தேவதை

கழுத்தில் தொங்கிய

மெல்லிழை ஆபரணம்

பஞ்சக் கோலத்தைப் படம் பிடித்துக் காட்ட

அவள் பசியறிந்து

இருந்த பழங்களைத் தேடியெடுத்து

நறுக்கி வைத்தேன்

அவ்வளவு பசியிலும்

ஒரு துண்டை எடுத்து

ரசித்து ருசித்து மென்று

தொண்டைக்குழியில்

இறக்கிய போது

மெல்லிழை ஆபரணத்தில்

தென்பட்ட அசைவு சொன்னது

பசியோடு வந்திருப்பது

ஒரு தேவதை என்று

*****

No comments:

Post a Comment