நீங்கள் டிஜிட்டல் அடிமையா?
கொரோனா தந்த டிஜிட்டல்
சாபம்!
கொரோனா
உலகையே முடக்கியது. அந்த முடக்கத்தால் மக்கள் அங்கும் இங்கும் நகர முடியாத அமைதி நிலைக்குத்
திரும்பினர், அவசர வாழ்க்கையை ஓரம் கட்டி விட்டு நிதானத்தை நோக்கி நகர்ந்தனர். சுற்றுச்சூழலும்
மேம்பட்டது.
கொரோனாவைக்
கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுபடுத்தி அதை ஓரம் கட்டிய போது, மக்கள் மீண்டும் பழைய பாதைக்கே
திரும்பினர். மக்கள் வேகமாக இயங்கத் தொடங்கினர். போக்குவரத்து முன்னை விட அசுரத்தனமாக
இயங்கத் தொடங்கியது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையிலிருந்து நீங்கியிருந்தாலும்,
அது சில சாபங்களைக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. அதில் முதன்மையானதுதான் டிஜிட்டல்
சாபம். மேலும் இந்தச் சாபத்தைக் கொரோனா தந்த தனிமையிலிருந்து தப்பிக்க, மனிதர்கள் தங்களுக்குத்
தாங்களே சூன்யம் வைத்துக் கொண்டு, தாங்களே தேடிக் கொண்ட சாபம் என்றும் சொல்லலாம்.
கொரோனா
காலம் மக்களைத் தனிமையில் தள்ளி அமைதியை வாரி வழங்கியதைப் போல, அதுவரை கண்டிராத ஓய்வையும்
மக்களுக்கு வழங்கியது. அந்த ஓய்வின் வழியாகத்தான் கொரோனா தன்னுடைய சாபத்தையும் வாரி
வழங்கியது.
கொரோனா
கால ஓய்வை வாசிக்கவும், இயற்கையை நேசிக்கவும் பயன்படுத்திக் கொண்டவர்கள் சிலரே. பலரும்
அந்தத் தனிமையை டிஜிட்டல் கருவிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொள்ளவே பயன்படுத்திக்
கொண்டனர்.
மக்கள்
வீடுகளில் இயங்காமல் இருந்தார்களே தவிர, அவர்களின் வீடுகளில் கணினிகளும், தொலைக்காட்சிகளும்,
அலைபேசிகளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருநதன. அவற்றின் வழியாக டிஜிட்டல் திரைகள் ஓய்வு
ஒழிச்சல் இல்லாத மாபெரும் இயக்கங்களை மேற்கொண்டிருந்தன.
உடலோ,
மனதோ எல்லாவற்றையும் ஓரளவுக்குத் தாங்கும். ஓரளவுக்கு மேல் என்றால் சோர்ந்து போய் தளர்ந்து
விடும். சாதாரணமாகச் சோர்வோ, தளர்வோ வந்தால் மக்கள் ஓய்வெடுப்பர். ஆனால் இந்த டிஜிட்டல்
விசயத்தில் அது அப்படியே நேர்மாறாக நடக்கும். எவ்வளவுதான் சோர்வு ஏற்பட்டாலும், கண்களும்
உடலும் தளர்ந்தாலும், மனமே விட்டு விடு என கெஞ்சினாலும் டிஜிட்டல் திரைகளை விட்டு பார்வையை
விட்டு அகற்ற மாட்டார்கள் மனிதர்கள்.
விளைவு
இந்த தளர்ச்சியையும் அயற்சியையும் தாங்க உடலானது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனைச்
சுரக்க ஆரம்பிக்கும்.
டிஜிட்டல்
திரைகளிலிருந்து வரும் நீல நிற ஒளியானது தூக்கத்திற்குத் துணை நிற்கும் மெலடோனின் ஹார்மோன்
சுரப்பதைத் தடை செய்யும்.
டிஜிட்டலில்
மீளாது விழுந்து விடும் பார்வையின் காரணமாகக் கழுத்தும், முதுகும் நீண்ட நேரம் அப்படியே
இருக்க முடியாமல் வலிகளைப் பிரசவிக்கத் தொடங்கும். அதையும் கண்டுகொள்ளாமல் தொடரும்
போது, அது தேய்மானத்தைப் பரிசாகத் தரும்.
உடலோ
அமைதியாக இருக்கும். ஆனால் மனமோ ஒரு போர்க்களத்தில் போராடுவது போல இருக்கும்.
டிஜிட்டல்
திரைகளின் மாயம் அதுதான். டிஜிட்டல் திரைகளிலிருந்து உங்கள் பார்வையை விலக்கலாம் என்று
நீங்கள் நினைக்க நினைக்க அதில் அதிகமாக ஆழ்ந்து கொண்டே போவீர்கள். இது எப்படி நடக்கிறது?
இங்குதான்
டிஜிட்டல் திரைகளின் இயந்திர மொழிகள் (அல்காரிதம்கள்) வேலைசெய்கின்றன. உங்களைத் தொடர்ச்சியாகப்
பார்க்க வைக்கும்படியான உங்களுக்கே உங்களுக்குப் பிடித்தமான திரைகளை அடுத்தடுத்து டிஜிட்டல்
அல்காரிதம்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
நீங்கள்
சில நாட்கள் டிஜிட்டல் திரைகளைப் பார்த்ததை வைத்தே உங்களுக்கு எது பிடிக்கும், எது
பிடிக்காது, உங்களுக்கு எதை காட்ட வேண்டும், எதைக் காட்டக் கூடாது என்று இயந்திர மொழியான
அந்த அல்காரிதம் உங்களைப் பற்றி ஒரு கச்சிதமான கட்டமைப்பு மொழியை உருவாக்கி விடும்.
அதன் பிறகு நீங்கள் அதன் அடிமை, அது உங்களது எஜமானன்.
இந்தியாவில்
ஒருவர் சராசரியாக 6 மணி நேரத்துக்கும் மேலாக டிஜிட்டல் திரைகளில் மூழ்கியிருக்கிறார்
என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி. இது உலக அளவில் டிஜிட்டல் திரையில் மூழ்கியிருக்கும்
ஒருவரின் சராசரியை விட அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகில்
அடிமைத்தனம் ஒழிந்துவிட்டது என்று சொன்னாலும், அது வேறு வடிவில் டிஜிட்டல் அடிமைத்தனமாக
வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப டிஜிட்டல் திரைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்கும்
பெருநிறுவனங்கள டிஜிட்டல் அடிமைகளை உருவாக்கும் வகையில் தங்கள் முதலாளித்துவ சாட்டையைச்
சுழற்றிக் கொண்டிருக்கின்றன. விளைவு, சாட்டையடிகளை வாங்கிக் கொண்டு அது சுகமாக இருப்பதாகச்
சொல்லும் டிஜிட்டல் அடிமைகளும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓர்
அடிமையின் துயரமான நிலைமை என்பது, தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை அந்த அடிமை உணராமல்
இருப்பதுதான். டிஜிட்டல் அடிமைத்தனமும் இதற்கு விதி விலக்கல்ல.
இனி
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும், உங்கள் டிஜிட்டல் திரை உங்களுக்கு அடிமையாக இருக்க
வேண்டுமா? அல்லது டிஜிட்டல் திரைக்கு நீங்கள் அடிமையாக இருக்கப் போகிறீர்களா?
*****

No comments:
Post a Comment