சமனின்மை சூழ் வாழ்க்கை!
தீபாவளி, பொங்கலை
அறிவிக்கும் மணியோசை வாசகங்கள்!
யானை வரும் பின்னே, மணியோசை
வரும் முன்னே என்பது போலத் தீபாவளி மற்றும் பொங்கலை அறிவிக்கும் மணியோசை வாசகங்கள்,
‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பதுதான்.
தீபாவளி, பொங்கலின் போது மட்டும்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள்
நடவடிக்கை வேண்டுமா? மற்ற நாட்களில் எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்களா? அது சரி! தீபாவளி,
பொங்கலிலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்றால், அதுவும் இருக்காது. நாம்தான் அது இந்தத்
தீபாவளி, பொங்கலா? அடுத்த தீபாவளி, பொங்கலா? அல்லது அதற்கும் அடுத்த தீபாவளி, பொங்கலா?
என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டுப் புரிந்து கொண்டோம் போலிருக்கிறது
என்று ஆறுதல் பட்டுக் கொண்டே அதிக கட்டணத்தோடு ஆம்னிப் பேருந்துகளில் பயணித்துக் கொள்ள
வேண்டியதுதான்.
****
எவ்வளவு கட்டணம்
வசூலித்தாலும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேல் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ
எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்!
எப்படி எடுப்பார்கள்?
அவற்றை மறைமுகமாக நடத்துவது
அவர்கள்தானே!
*****
புதிய மொந்தையில் பழைய கள்!
பழமொழிகள்
சாசுவதமானவை.
காலத்துக்கும்
பொருந்தும் புதுமொழிகள் என்றும் அவற்றைச் சொல்லலாம். அவை எல்லா காலத்துக்கும் பொருந்துவன.
எப்படி
என்கிறீர்களா?
அது
என்ன தலைவிதியோ, அறிவியல் விதியோ புது பாடல் பிச்சிக்கிட்டுப் போகுதோ இல்லையோ, புதிய
படத்தில் பழைய பாடல் பிய்த்துக் கொண்டு போகிறது.
இதை
என்ன சொன்வது?
புதிய
மொந்தையில் பழைய கள்!
*****
இன்றைய கல்வி முறை எப்படி இருக்கிறது
தெரியுமா?
எந்தப்
பள்ளிக்கூடத்தில் படித்தாலும் நல்ல தனிப்பயிற்சி நிலையத்தில் (டியூசனில்) படிக்க வேண்டும்
என்பதாக இருக்கிறது.
அது
அப்படியே முன்னேற்றமடைந்து (அப்கிரேட்) ஆகி எந்தக் கல்லூரியில் (காலேஜில்) படித்தாலும்
பரவாயில்லை, நல்ல பயிற்சி மையத்தில் (கோச்சிங் சென்டரில்) சேர்ந்து விட வேண்டும் என்பதாக
இருக்கிறது.
*****
நாம் எவற்றைச் சரி செய்தால் சமத்துவதைக்
கொண்டு வர முடியும்?
அனைவருக்கும்
தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சுகாதாரம் – இவைதான் சமத்துவத்தை ஏற்படுத்தும்.
நம்
நாட்டில் பணக்காரர்கள் பெறும் கல்வி ஒரு மாதிரியாகவும், ஏழைகள் பெறும் கல்வி வேறு மாதிரியாகவும்
இருக்கிறது.
அரசுப்
பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், மத்திய கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று
ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் கல்வியிலும் பல்வேறு மாறுபட்ட தர மாதிரிகள் உள்ளன.
மருத்துவத்தை
எடுத்துக் கொண்டால் ஏழைகளுக்கான மருத்துவமும் பணக்காரர்களுக்கான மருத்துவமும் மடுவுக்கும்
மலைக்கும் உள்ள வேறுபாட்டைக் கொண்டுதான் ஒப்பிட வேண்டும்.
சுகாதாரத்தைப்
பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளை ஒரு மாதிரியாகவும்,
ஏழைகள் வசிக்கும் பகுதிகளை வேறு மாதிரியாகவும் கவனிப்பார்கள். சென்னையின் போயஸ் தோட்டத்தையும்
கூவம் நதிக்கரையையும் பார்த்தாலே இது விளங்கி விடும்.
இவற்றையெல்லாம்
சரி செய்யாமல் சமத்துவத்தைக் கொண்டு வரவே முடியாது.
*****

No comments:
Post a Comment