19 Dec 2025

நம்மை நாகரிகம் அடைந்த சமுதாயம் என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

நம்மை நாகரிகம் அடைந்த சமுதாயம் என்று

சொல்லிக் கொள்ள முடியுமா?

மனிதர்கள் நாகரிகப் பிராணிகள். ஆனால் அவர்களைத் தற்காலத்தில் அவ்வாறு சொல்ல முடியுமா என்றால் முடியாது என்றுதான் தோன்றுகிறது.

இயற்கை தந்த ஆறுகளைக் கழிவு நீர்க் கால்வாய்களாக மாற்றி விட்டார்கள். முன்னோர்கள் தந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் என அனைத்தையும் சாக்கடைத் தேக்கங்களாக மாற்றி விட்டார்கள்.

ஆடுகள், மாடுகள் மேய்வதற்கும், பறவைகள் மற்றும் விலங்குகள் தஞ்சமடைவதற்கும் இருந்த புறம்போக்கு நிலங்களை எல்லாம் குப்பை மேடுகளாக மாற்றி விட்டார்கள்.

வற்றாத கிணறுகளை எல்லாம் குப்பைகளை அள்ளிப் போட்டு, கழிவுகளைக் கொட்டி வைத்து அவற்றின் சுவடே இல்லாத அளவுக்குத் தூர்ந்து போகச் செய்து விட்டார்கள்.

இயற்கை தூய்மையாகக் கொடுத்த தண்ணீரை சாக்கடைகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் குழாய்கள் வழி கொண்டு வருகிறார்கள்.

குடிக்கின்ற தண்ணீரை பல விதங்களில் பல மடங்கு தூய்மைப்படுத்திப் பிளாஸ்டிக் கலன்களில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிளாஸ்டிக் கலன்கள் ஆங்காங்கே குப்பைகளாக மாறி பாசன மற்றும் வடிகால் அமைப்புகளுக்கு மாரடைப்புகளை உண்டு பண்ணுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது மனிதர்கள் நாகரிகச் சமுதாயம் என்ற பெயரில் அநாகரிகப் போக்கில் போவதாகத்தான் தெரிகிறது.

உண்மையில் ஒரு நாகரிகச் சமுதாயத்தில் நல்ல நீர் கண்ணுக்குத் தெரியும்படி வெளிப்படையாக ஓட வேண்டும். சாக்கடை நீர் கண்ணுக்குத் தெரியாமல் மறைவாக ஓட வேண்டும்.

நம் சமூகத்தில் இது அப்படியே எதிர்மறையாகத்தானே ஓடுகிறது.

பிறகெப்படி நம்மை நாகரிகம் அடைந்த சமூகம் என்ற சொல்லிக் கொள்ள முடியும்?

*****

No comments:

Post a Comment