ஸ்வரபேதங்களின் அலைவரிசை!
அலைபேசியோடு
அலைபவர்கள்
கடிகாரங்கள்
அணிவதில்லை
அணியும்
கடிகாரங்கள்
அலைபேசிகளாகி
விட்டன
முட்களால்
ஓடிக் கொண்டிருந்த கடிகாரங்கள்
அபாயத்தை
அறிவிப்பவைப் போல
செந்நிற
எண்களாய் மினுங்குகின்றன
கிழிக்கப்படாத
நாட்காட்டி தொங்கும்
சுவர்களின்
ஊடான வீட்டில்
எழுதப்படாமல்
கிடக்கும்
நாட்காட்டியின்
பக்கங்களில்
மிதிவண்டியில்
செல்வது அகௌரவமாகவும்
உடற்பயிற்சிக்
கூடத்தில் சைக்கிளிங் செய்வது
கௌரவமாகவும்
பதிவு செய்யப்பட
பரிந்துரைகள்
பறந்து கொண்டிருக்கின்றன
விசும்பல்களின்
முனகல்களில்
உங்களால்
அடைய முடியாத லட்சியங்களை
உங்களோடு
விட்டு விடுங்கள்
குழந்தைகளைக்
கஷ்டப்படுத்தாதீர்கள்
என்கிற
ஸ்வர பேதங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன
*****
