பழுதில்லா வாழ்வுக்கு என்ன செய்யப் போகிறோம்?
ஒரு
வாகனம் வைத்திருக்கிறோம். பழுதாகிறது. சீர் செய்து பயன்படுத்துகிறோம். மனிதர்களுக்கு
அப்படித்தான் வியாதிகள் வருகின்றன. அதை சரி செய்து கொண்டு நடமாடுகிறோம்.
வாகனத்தில்
ஏதேனும் ஒரு பாகம் பழுது ஆகிறது. அந்தப் பாகத்தை மாற்றிக் கொண்டு வாகனத்தை இயக்குகிறோம்.
மனிதர்களுக்கும்
அப்படிச் சில பாகங்களை அதாவது உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.
அதில் சுபலமானது ரத்தப் பரிமாற்றம். கண் பார்வைக்கான பார்வை உறுப்புகளின் பரிமாற்றமும்
தற்காலத்தில் சுலப சாத்தியமே. இதனாலேயே ரத்த தானமும், கண் தானமும் அதிகம் வலியுறுத்தப்படுகின்றன.
வாழும் போது ரத்த தானம் செய்வதும், வாழ்ந்து முடித்த பின் கண் தானம் செய்வதும் போற்றுதலுக்குரியதாகின்றன.
இரத்தம்,
கண்களைத் தொடர்ந்து சிறுநீரகப் பரிமாற்றம் தற்காலத்தில் மிக அதிகமாகச் செய்யப்படும்
உடல்பாகப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
முதல்
சிறுநீரகப் பரிமாற்றம் 1954 இல் இங்கிலாந்தில் செய்யப்பட்டது. அதற்குப் பின் இந்தியாவில்
சிறுநீரகப் பரிமாற்ற நிகழ்த்த 27 ஆண்டுகளாயின. 1971இல்தான் இந்தியாவில் முதல் சிறுநீரகப்
பரிமாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரகப் பரிமாற்றம் செய்யப்பட்டப் பிறகு
அது பொது வெளியில் வெகு பிரபலமானது.
இன்று
உடலின் அனைத்துப் பாகங்களுமே ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ மாற்றப்படுவது போல மாற்றப்படுவதற்கான
சூழ்நிலைகள் உருவாகி விட்டன. உலகெங்கும் ஆண்டுக்கு இரண்டு லட்சம் உடல் பாகப் பரிமாற்றங்கள்
நடைபெறுகின்றன என்கிற புள்ளி விவரமே அதற்குச் சாட்சி.
உடல்பாகப்
பரிமாற்றங்கள் பொதுவாக ஐந்து வகைகளில் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்
வகையில் மனிதர்களிடமிருந்து பெறப்பட்டு மாற்றப்படுகின்றன. அதுவும் உயிருள்ள மனிதர்களிடமிருந்து
பெறப்படும் சிறுநீரகம் போன்ற பரிமாற்றங்களும், மூளைச் சாவு அடைந்தோரிடமிருந்து பெறப்படும்
இன்னபிற உடல் உறுப்பு பரிமாற்றங்களும் என்று இது இரு வகைகளில் செய்யப்படுகின்றன.
இரண்டாம்
வகையில் அடிப்படைச் செல் எனப்படும் ஸ்டெம் செல் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும்
உறுப்புகள் மூலம் உடல் உறுப்பு பரிமாற்றம் செய்யப்படுகின்றன. ஸ்டெம் செல் என்பது விதையைப்
போன்றது என்பதால் அதைப் பயன்படுத்தி உடலின் அனைத்து உறுப்புப் பாகங்களையும் உருவாக்க
இயலுகிறது. ஒரு விதை இருந்தால் போதும், அதை வைத்து வேர், தண்டு, காய், கனி, பூ என அனைத்தையும்
பெறுவதைப் போன்றது இவ்வுயிர் தொழில் நுட்பம்.
மூன்றாவது
வகையில் மரபணு மாற்றம் மூலம் பெறப்படும் உடல் உறுப்புகள் உறுப்புப் பரிமாற்றங்களுக்குப்
பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் பன்றி மற்றும் மனிதர்களுக்கு இருக்கும் உடலமைப்பு
ஒப்புமைகளைப் பயன்படுத்திப் பன்றியின் மரபணுக்களில் மனித மரபணுக்களுக்கான மாறுதல்களைச்
செய்து இதயம் போன்ற உடல் உறுப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. அப்படி ஓர் உறுப்பு
பரிமாற்றம் 2022 இல் அமெரிக்காவில் செய்யப்பட்டது. அப்படி இதயப் பரிமாற்றம் செய்யப்பட்ட
டெவிட் பென்னட் என்பர் பன்றியின் இதயத்தோடு 2 மாதங்கள் வரை வாழ்ந்தார்.
நான்காவது
வகை என்பது பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை.
ஐந்தாவது
வகை என்பது உடல் உறுப்புகளின் மாதிரிகளை உருவாக்கி அவற்றைப் பொருத்துவது. இதை ஆர்கனாய்டுகள்
என்கிறார்கள்.
இது
போன்ற முயற்சிகளால் மனிதர்களை 200 ஆண்டு காலம் கூட வாழ வைக்க முடியும் என்கிறார்கள்
உயிர்தொழில்நுட்ப விஞ்ஞானிகள்.
இந்த
உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலாவதி (எக்ஸ்பயரி) இருப்பது போல மனித உடலுக்கும்
ஒரு காலாவதி காலம் இருக்கிறது. அது ஒவ்வொருவரின் உடல் அமைப்பைப் பொருத்து 60 லிருந்து
அதிகபட்சம் 120 ஆண்டுகளாக இருக்கின்றது.
அறுபதைக்
கடந்து விட்டாலே உடல் உறுப்புகள் தங்களின் தனித்தன்மையையும் உயிர்த் தன்மையையும் படிப்படியாக
இழக்க ஆரம்பிக்கின்றன. அதற்கு மேல் மனிதர்கள் தங்கள் இனத்தை இளமையாகவும் புதுமையாகவும்
நிலைநிறுத்த அவர்களின் தலைமுறைகள் அந்த இடத்துக்கு வந்து விடுகின்றன. இதுதான் இயற்கையின்
நியதியாக இதுவரை இருந்து வருகிறது.
அறுபதைக்
கடந்து, எண்பதை நெருங்கும் போது மனிதர்களுக்குத் தற்சார்பாக இயங்குவது என்பது சவாலாக
மாறி விடும். மனித உடலமைப்பு அப்படித்தான் இயற்கையால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தக் கட்டமைப்புகளைச் செயற்கைக் கட்டமைப்புகளான உறுப்பு பரிமாற்றங்களால் நீட்டுவது
என்பது அவர்களை மேலும் பல ஆண்டுகளுக்குத் தற்சார்பற்றவர்களாக வாழச் செய்யுமே தவிர,
நிறைவான வாழ்வை வாழ வழி செய்யுமா என்பது கேள்விக்குறி
மரணம்
என்பது எண்பதைக் கடந்து நூற்று இருபதுக்குள் நிகழ்ந்து விடுவதுதான் மனித குலத்துக்கு
ஏற்புடையாக இருக்கக் கூடிய இயற்கை விதியாக உள்ளது. இதில் நாம் இன்னொன்றையும் யோசித்துப்
பார்க்க வேண்டியதுள்ளது. நாற்பதைக் கடப்பதற்குள்ளாகவே உடல் உறுப்பு பழுதுகளால் பலர்
பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இம்முறைகள் மாற்றாக இருக்குமே என்று ஒரு கோணத்தை
முன் வைக்கலாம்.
நாற்பதைக்
கடப்பதற்குள் ஏனிந்த உடல் உறுப்புப் பழுதுகள் ஏற்படுகின்றன என்ற கேள்வி முக்கியமானது.
காரணம் இயற்கை அப்படி மனிதர்களைப் படைக்கவில்லை. மனிதர்கள் படைத்த பல விடயங்கள்தான்
மனிதர்களை அப்படி உறுப்புப் பழுதுகளில் கொண்டு போய் நிறுத்துகின்றன.
உடல்
உறுப்புப் பழுதுகளுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை சில இருக்கின்றன.
அதில் முக்கிமானதும் தலையாயதும் சுற்றுச்சூழல் அந்த அளவுக்கு மாசடைந்துப் போயிருக்கிறது
என்பதுதான். இதை இயற்கை செய்யவில்லை. மனிதர்களே செய்தார்கள். உணவு அவ்வளவு ரசாயனம்
கலந்ததாக இருக்கிறது. அதையும் இயற்கை செய்யவில்லை. மனிதர்களே செய்தார்கள். சுகாதாரத்தையும்
ஆரோக்கியத்தையும் பேணுவதில் மனிதர்கள் பல மடங்கு பின்னோக்கிப் போனார்கள். அதையும் இயற்கை
செய்யவில்லை. மனிதர்களே செய்தார்கள். இவற்றைச் சரி செய்தாலே மனிதர்கள் எவ்வித உறுப்பு
பழுதுகள் இல்லாமல், வாழும் காலம் வரை நலமாகவும் நிறைவாகவும் வாழ்வார்கள், பைசா காசு
செலவின்றி.
உறுப்புகளைப்
பரிமாற்றிக் கொண்டு எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விடவும், வாழும் காலத்தில் நலமாகவும்
நிறைவாகவும் தற்சார்பாகவும் வாழ்கிறோமா என்பது மிகவும் முக்கியமானது. அத்துடன் பணம்
இருப்பவர்களுக்கு நனவாகும் உடல் உறுப்புப் பரிமாற்றங்கள், பணம் இல்லாதவர்களுக்குக்
கனவாக நீடிக்கும். ஆகவே உடல்பாக பரிமாற்றம் போன்ற முன்னெடுப்புகளை நாம் அதீத ஆய்வுகளின்
வழியே செய்வதை விடவும், சுற்றுச்சூழலைச் சீர்கெடாமல் செய்து, நஞ்சில்லா உணவுப் பொருட்களை
உற்பத்தி செய்து, அளவோடும் மன நிறைவோடும் வாழ வழிவகை செய்வதே ஏற்புடையது ஆகும்.
நாம்
என்ன செய்யப் போகிறோம்?
இன்னும்
இயற்கைக்கு முரணான அதீத ஆய்வுகளைப் பெருக்கி, இயல்புக்குப் பொருந்தாத ஒரு வாழ்வைப்
பெரும் பொருட்செலவு செய்து வாழும் வகையில், பணம் இருப்பவர்கள் மட்டும் பல்லாண்டு காலம்
வாழலாம் என்கிற நிலைமையை உருவாக்கப் போகிறோமா?!
இயற்கையோடு
இயைந்த வகையில் நம் ஆயுள் காலத்திற்குள், நல்ல தலைமுறைகளை நற்சிந்தனைகளோடும், நல்லுணர்வுகளோடும்
வருங்காலத்துக்குப் படைத்துக் கொடுப்பவர்களாக இருக்கப் போகிறோமா?!
*****

No comments:
Post a Comment