27 Nov 2025

நான் அவனில்லை மோட் - புலம்ப வைக்கும் ஏஐ அக்கிரமங்கள்!

நான் அவனில்லை – ஏஐ அட்டகாசங்கள்!

நீங்கள் அப்படிப் பேசி இருக்க மாட்டீர்கள். நீங்கள் அப்படியென்ன ஆபாச வார்த்தைகளைப் பேசுபவரா என்ன?

நீங்கள் அப்படிக் கருத்து சொல்லியிருக்கவும் மாட்டீர்கள். அது சரி, நீங்கள் அப்படியென்ன மட்டரகமான கருத்தைச் சொல்பவரா என்ன?

நீங்கள் அப்படி மோசமாக எதையும் செய்து காட்டுபவரில்லை. நீங்கள் அப்படிச் செய்து காட்ட எப்படி ஒப்புக் கொள்வீர்கள்?

நீங்கள் அவ்வளவு அநாகரிமாக உடை அணியக் கூடியவரே இல்லை. உடை அணிவதில் ஆபாசம் அறியாதவரா நீங்கள்?

நீங்கள் நாட்டுக்கு எதிராக அப்படி எந்தப் பரப்புரையும் செய்திருக்க மாட்டீர்க்ள. இந்த நாட்டின் மீது எவ்வளவு மதிப்புடையவர் நீங்கள்.

ஆனால் இந்த அத்தனையையும் நீங்கள் செய்திருப்பீர்கள் என்றால்… உங்களுக்கு எப்படி இருக்கிறது?

அது எப்படிப் பேசாதைப் பேசியிருக்க முடியும், செய்யாததைச் செய்திருக்க முடியும்?

இங்குதான் செயற்கை நுண்ணறிவு டீப் பேக் என்ற பெயரில் பயன்படுத்துகிறது. டீப் பேக் என்பது டீப் லேர்னிங் + பேக் என்பதன் கலவை.

இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. நீங்கள் வீட்டில் படுத்துத் தூங்கியபடி குறட்டை விட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் பேசுவது போல இணையவெளியில் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். ஓ அப்படியா! நான் தூக்கத்தில் காணும் கனவில் பேசுவதை ஒளிபரப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டதா என்று அப்பாவித்தனமாகக் கேட்டால், செயற்கை நுண்ணறிவின் கோர முகம் உங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு என்ன நடக்கிறது என்றால், நீங்கள் பேசுவது போல இன்னொருவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் பேச பேச உங்கள் முகத்தை அவர் முகத்தில் நொடிக்கு நொடி நகலெடுத்து அவர் முகத்தில் ஒட்டி நீங்கள் பேசுவது போல நேரலையை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு. இது ஒரு வகை.

இன்னொரு வகை, நீங்கள் பேசுவது போலக் காணொளியை உருவாக்கிப் பரப்பி விடுவது. அதற்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் பல வந்து விட்டன. நீங்களே கூட திருவள்ளுவர் பேசுவது போலக் காணொளியை உருவாக்கி வெளியிடலாம். அப்படித்தான் பிரபல தலைவர்கள் பேசுவது போலவும், அமைச்சர்கள் பேசுவது போலவும், தொழிலதிபர்கள் பேசுவது போலவும் காணொளிகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். இப்படிப் பிரபலங்கள் பொய் பேசுவது போல, ஆபாச வார்த்தைகளைப் பேசுவது போல என எப்படி வேண்டுமானாலும் காணொளிகளை உருவாக்கலாம், பரப்பலாம் என்று இன்று நிலைமை இருக்கிறது.

நீங்கள் ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்கிறீர்கள். உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போல உங்கள் உயர் அதிகாரியோ, அவருக்குக் கீழ் இருக்கும் சகாக்களோ இல்லாமல் இருக்கலாம். உங்கள் உயர் அதிகாரியின் ஒரு புகைப்படம் இருந்தால் போதும் அதை வைத்து அவர் உரையாடுவது போலவும் அவரது சகாக்கள் புடை சூழ உங்களுடன் இணையவெளியில் உரையாடுவது போலவும் ஏற்பாடு செய்து விடலாம்.

நீங்கள் இணையவழியில் உங்கள் நண்பருடன், உங்கள் துணைவருடன், உங்கள் உறவினருடன் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கலாம். எதிர்முனையில் பேசுவது அப்படி உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பிம்பமாக இல்லை என்பதை உங்களால் உறுதி செய்து கொள்ள முடிவது தற்போது கடினமாகிக் கொண்டிருக்கிறது.

இப்படித் திடீரென புலனவழி அழைப்பில் (வாட்ஸ்ஆப் கால்) உங்கள் உயிர் நண்பர் தோன்றி அவசர அவசரமாக லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும், மறுநாள் கொடுத்து விடுவதாகவும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அழைத்தது உண்மையில் உங்கள் உயிர் நண்பர் என்றால் உங்களுக்கு உதவிய திருப்தியும், நண்பருக்கும் தக்க நேரத்தில் பலனடைந்த திருப்தியும் இருக்கும். ஆனால் அழைத்தது செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய பித்தலாட்ட பிம்பம் என்றால் உங்கள் பணமும் போய் விடும், மன நிம்மதியும் போய் விடும்.

செயற்கை நுண்ணறிவு உலகம் போகிற போக்குப் பயங்கரமாகத்தான் இருக்கிறது. எது எவ்வளவு பயரங்கரமாக இருந்தாலும் அதற்குத் தீனி கிடைத்தால்தான் உலவ முடியும் என்பது இயற்கையில் மட்டுமல்ல செயற்கையிலும் அதுதான் நியதி. செயற்கை நுண்ணறிவுக்குத் தீனி என்பது நாமே வலிந்து கொடுக்கும் தரவுகள்தான். புரியும்படி சொன்னால் புலனம் (வாட்ஸ்ஆப்), முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்றவற்றில் உணர்ச்சி மேலீட்டிலும், அதிக விருப்பங்களுக்கு ஏங்கியும் உங்களை அறியாமல் நீங்களே கொடுத்துக் கொண்டிருக்கும் தகவல்கள்தான் செயற்கை நுண்ணறிவின் கோர மிருகத்துக்குக் கிடைக்கும் தீனிகள். தீனிகளைத் தின்று கொழுக்கும் கோர மிருகம் சும்மா இருக்குமா? அது தன் கோர முகத்தைக் காட்டுகிறது.

இப்போதெல்லாம் ஒருவரின் ரகசியத்தை அறிய துப்பறிவாளர்கள் (டிடெடிக்டிவ்) கொண்டுதான் அறிய வேண்டும் என்றில்லாத அளவுக்குப் பலரின் புலன தன்னிலைமைகள் (வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்) இருக்கின்றன என்பது ஆராய்ந்து தெளியும் அளவுக்கு கடினமான மெய்மை கிடையாது.

உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் புகைப்படப் பதிவும், உங்களைப் பற்றிய சிறு சிறு விவரங்களும் செயற்கை நுண்ணறிவு களம் இறங்கி விட்ட இணைய உலகுக்குக் கிடைக்கும் மாயப்பொறிகள் மற்றும் மாரீச வலைகள்.

இன்று இணைய உலகில் நம்பி எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிஜ உலகை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை இந்த உலகில் நிஜ மனிதர்கள் யார், ரோபோட்டிக் மனிதர்கள் யார் என்று தெரியாத உலகில் நடக்கப் போகிறீர்கள். அந்த அளவுக்கு உலகம் மோசடிகளாலும் ஏமாற்றுகளாலும் நிறைய தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் சரியாக உங்களை வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களைத் தவறாகக் கொண்டு செல்ல இங்கு எல்லாம் தயாராகி விட்டன. இனி நீங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உங்களிடம் எல்லாம் சரியாக இருக்கும். கொஞ்சம் பிசகினாலும் அசகு பிசகு கடைசியில் அஸ்க்கு பிஸ்க்கு ஆகலாம்.

*****

No comments:

Post a Comment