செயற்கை நுண்ணறிவு நீர்க்குமிழி ஆகுமா?
நீர்க்குமிழி
(பப்புள்) என்ற சொல் பயன்பாடு முதலீட்டு உலகில் ஒலிக்கும் அபாயகரமான ஒன்று.
நீர்க்குமிழி
நிலையானதன்று. சிறியதாகத் துவங்கிப் பெரியதாகி எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்கக்
கூடியது. முதலீட்டு உலகில் வெடிக்கும் நீர்க்குமிழிகளும் அப்படிப்பட்டவையே.
நீர்க்குமிழி
என்றால் என்ன என்கிறீர்களா?
தாங்கள்
நம்பும் முதலீட்டுப் பொருள் மிகப் பிரமாண்டமாக வளரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள்
அம்முதலீட்டுப் பொருளின் மீது ஒன்று நூறாகும், நூறு ஆயிரமாகும், ஆயிரம் லட்சமாகும்,
லட்சம் கோடியாகும் என்ற நம்பிக்கையில் சக்திக்கு மீறிய முதலீட்டைத் தொடர்வார்கள். ஒரு
கட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ச்சியைத் தராத அம்முதலீட்டுப்
பொருள் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கும். அப்போது எவ்வளவு பேராசையோடு முதலீட்டைத்
தொடர்ந்தார்களோ, அதே அளவு பேரச்சத்தோடு முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். பேராசையில்
உச்சம் தொட்ட முதலீடு இப்போது பேரச்சத்தால் அதள பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும். பல
மடங்கு விலையேறிய முதலீட்டுப் பொருள் இப்போது பல மடங்கு விலை வீழ்ச்சியைச் சந்திக்கும்.
கோடி இப்போது லட்சமாகும், லட்சம் அடுத்து ஆயிரமாகும், ஆயிரம் அடுத்து நூறாகும், நூறு அடுத்து ஒன்றாகும், ஒன்று பூஜ்ஜியத்தை நோக்கியும்
செல்லும். இதையே நீர்க்குமிழி வெடிப்பு என்பார்கள்.
முதலீட்டு
உலகம் சில, பல நீர்க்குமிழிகளை அவ்வபோது அனுபவித்துப் அறிந்துள்ளது. துலிப் மேனியா
நீர்க்குமிழி (துலிப் மேனியா பப்புள்), இணைய தகவலியல் நீர்க்குமிழி (டாட் காம் பப்புள்),
அமெரிக்க வங்கி நீர்க்குமிழி (பேங்கிங் பப்புள்) போன்றவை உலகறிந்த நீர்க்குமிழிகள்.
அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவில் செய்யப்படும் முதலீடுகளும் நீர்க்குமிழி
விளைவைச் சந்திக்குமா என்கிற எச்சரிக்கையும் அச்சமும் முதலீட்டு உலகை ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கின்றன.
பொருளாதார
மேதைகளில் சிலர் செயற்கை நுண்ணறிவு விரைவில் நீர்க்குமியாகும் என்கிறார்கள். ஜெரோம்
பவெல் போன்ற அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர்கள் அப்படியாகாது என்கிறார்கள். அப்படி
ஆகும் அல்லது அப்படி ஆகாது ஆகிய இரண்டுமே கணிப்புகள்தான். தேர்தல் கணிப்புகளைப் போன்றவைதான்.
கணிப்புகள் உண்மையும் ஆகலாம், உண்மை ஆகாமலும் போகலாம். கணிப்புகள் எப்படி ஆகும் என்பதை
அறிந்து கொள்ள நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அது எப்படி ஆகும் என்பது காலத்தால்
முன்னோக்கி நகரும் போதே அறியக் கூடியதாக உள்ளது. அப்படி முன்னோக்கி நகர்வதற்கான கால
இயந்திரம் ஏதும் நம்மிடம் இல்லை.
என்னதான்
நடந்து கொண்டிருக்கிறது இந்த செயற்கை நுண்ணறிவு முதலீடுகளில்?
செயற்கை
நுண்ணறிவு நீர்க்குமிழியாகும் என்பதற்குச் சொல்லப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்று
ஏராளமான முதலீடு அதில் கொட்டப்படுகிறது என்பதுதான். அப்படி ஆகாது என்பதற்குச் சொல்லப்படும்
முதன்மையாக காரணங்களுள் ஒன்று, அப்படிக் கொட்டப்படும் முதலீடுகள் கடன்வாங்கி கொட்டப்படவில்லை
என்பதுதான்.
செயற்கை
நுண்ணறிவு முதலீட்டு முயற்சிகள் எப்படி உள்ளன?
இப்போது
எதார்த்தம் எப்படி உள்ளது என்பதை நோக்கும் போது, செயற்கை நுண்ணறிவில் நம்பி கொட்டப்படும்
லாபத்தைத் தேடும் முதலீட்டு முயற்சிகள் 95 சதவீதம் தோல்வியில் முடிகின்றன என்பதைக்
கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு எப்போதும் இப்படித்தான்
நேரும் என்பது இயற்கைதான் என்றாலும் அபரிமிதமாகக் கொட்டப்படும் முதலீடுகள் குறைந்தபட்சம்
போட்ட முதலைக் கூட எடுக்க முடியாமல் போகும் போது சிறிய அளவிலேனும் நீர்க்குமிழியாகி
வெடிக்கவே செய்யும்.
நிலைமை
அப்படியானால் செயற்கை நுண்ணறிவில் நாம் பின்னோக்கிச் சென்று விடுவோமா என்றால் அப்படியும்
ஆகாது. இணையத் தகவலியல் நீர்க்குமிழியாகி வெடித்த பிறகு இணையமோ தகவல் தொடர்பியலோ இல்லாமல்
போய் விடவில்லை. அதன் பயன்பாடுகள் இப்போது அப்போதை விட அதிகமாகவே உள்ளன. வங்கியியல்
நீர்க்குமிழி வெடித்த பிறகு அமெரிக்காவில் வங்கிகளே இல்லாமல் போய் விட வில்லை. அளவுக்கு
மீறிய கொட்டிய முதலீடுகளே அழிந்து போயின. அளவறிந்து செய்த முதலீடுகள் அளவோடு லாபத்தைத்
தரவே செய்தன.
செயற்கை
நுண்ணறிவில் வருங்காலத்தில் என்னதான் நடக்கும்?
அறிந்தோ
அறியாமலோ நாம் செயற்கை நுண்ணறிவு யுகத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். செயற்கை நுண்ணறிவு
நீர்க்குமிழியானாலும் ஆகாமல் போனாலும் செயற்கை நுண்ணறிவிலிருந்து இயற்கை நுண்ணறிவைக்
கொண்ட மனிதர்கள் தப்பிக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனம். செயற்கை நுண்ணறிவு நீர்க்குமியாகி
வெடித்தாலும் இங்கே உள்ளே வரும் மற்றும் போகும் முதலீடுகளைத் தடுத்து நிறுத்த முடியாது.
ஏனென்றால் அடுத்து வியாபார உலகிற்கான கதவு செயற்கை நுண்ணறிவு என்னும் பொருளாதார சாவியுனுள்ளே
பொதிந்துள்ளது. புதுப்புது வியாபார உலகிற்கான கதவுகளைத் திறக்காமல் இங்கு பொருளாதாரம்
இயங்காது. அப்படியானால் நிலைமை என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
*****

No comments:
Post a Comment