29 Nov 2025

மோசடிகளுக்கு எதிரான வள்ளுவச் சூத்திரம்!

மோசடிகளுக்கு எதிரான வள்ளுவச் சூத்திரம்!

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்…” (குறள், 423) என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதினார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டின் தலைவர் பேசுவது போலவும், நிதியமைச்சர் பேசுவது போலவும், பிரபலமான தொழிலதிபர் பேசுவது போலவும் இன்று காணொளிகள் வெளியாகின்றன. அத்தனையும் போலியானவை. அவற்றில் பேசியது அவர்களே அல்ல எனும்படி அத்தனையும் செயற்கை நுண்ணறிவால் இணையவழி பண மோசடிக்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட காணொளிகள். இந்த இடத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்…” என்ற வள்ளுவச் சூத்திரத்தைத்தான் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!’ என்பார்கள். இன்று இணையவழியாகவும், சமுக ஊடகங்களின் வழியாகவும் வரும் அத்தனை செய்திகளையும் அப்படித்தான் தீர விசாரித்து அறிய வேண்டியதாக இருக்கிறது. வதந்திகள் உண்மைகளைப் போல உலவுகின்றன. பொய்கள் மெய்களின் வேடம் தாங்கி அலைகின்றன. அவதூறுகள் வல்லூறுகளாய்த் திரிகின்றன.

முன்பு அடையாள அட்டைகளில் இருக்கும் படத்தையும் நம் முகத்தையும் பார்த்தால் யார் இவர் என்ற சந்தேகம் நமக்கே வரும். அன்றைய ஆதார் அட்டைகள் அப்படித்தான் இருந்தன. இன்று நம் படத்தையே யார் இவர் என்று தெரியாத அளவுக்குப் படமாக மாற்றிக் கொடுக்கின்றன செயற்றை நுண்ணறிவுத் தளங்கள்.

களவாடுவது, பணம் பறிப்பது, மோசடிசெய்வது என்று மனிதர்கள் செய்த அத்தனை காரியங்களையும் இயந்திரங்கள் இன்று செய்கின்றன. இயந்திரங்கள் நம்மை ஏமாற்ற தயாராக இருக்கின்றன. இவற்றுக்குப் பின்னணியில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஒரு காலத்தில் இந்த மனிதப் பின்னணி இயந்திரப் பின்னணியாக மாறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

உலகில் பல நாடுகளில் இருக்கும் சட்டங்கள் மனிதர்களுக்கும் இன்னபிற உயிர்களுக்கும் ஆனவை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயற்கை நுண்ணறிவிற்காகச் சட்டங்கள் இயற்ற நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் சட்டங்களும் இயற்றிவிட்டன.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பிரச்சாரங்கள்தான் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சட்டங்கள் இனிமேல்தான் இயற்றப்பட வேண்டும். அதுவரை ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே.

எப்படி அப்படி இருப்பது?

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட மோசடிகளிலிருந்து பின்வரும் மெய்மைகள் தெரிய வருகின்றன. அவையாவன,

1) உங்கள் புகைப்படங்களைத் தேவையில்லாமல் கண்ட ஊடகங்களிலும் பகிராதீர்கள். உங்கள் புகைபடங்கள் எப்போது வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவின் ஆபாசப் பசிக்குப் பெருந்தீனியாகலாம்.

2) பணம் சார்ந்த அழைப்புகளைக் காணொளிகளை உணர்ச்சிவசப்பட்டோ, அவசரப்பட்டோ அப்படியோ நம்பாதீர்கள். அவை உண்மையானவை என்பதற்கு எந்த விதமான உத்திரவாதங்களும் இல்லை.

3) இணையவழி, சமூக ஊடக வழி என்றால் அப்படியே நம்பி விடாமல் சந்தேகப்பட கற்றுக் கொள்ளுங்கள். பாரதி சொல்வாரே ‘ரௌத்திரம் பழகு’ என்று. அது போல ‘ஐயம் பழகு’ என்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது.

4) மின்னணு மோசடிகளால் (டிஜிட்டல் மோசடி) பாதிக்கப்பட்டால் தயங்காமல் 1930 என்ற எண்ணிலோ அல்லது அரசின் எண்ம குற்றங்களுக்கான (சைபர் கிரைம்) இணையத்திலோ புகார் அளிக்கத் தயங்காதீர்கள்.

5) “எப்போருள் யார் யார் வாய்க் கேட்பினும்…” என்ற குறளைப் போல, “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 355) என்று இன்னொரு குறளையும் திருவள்ளுவர் படைத்திருக்கிறார். இது என்னவோ அப்படியே இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்திற்கு 100 சதவீதம் பொருந்துகிறது. எதுவாக இருந்தாலும் அதன் மெய்மையைச் சோதித்தறியும் வகையில் அவசரம் காட்டாதீர்கள்.

6) எல்லாவற்றுக்கும் மேலாக மனக்கட்டுபாடு என்பது எல்லா காலத்திற்கான அற்புத கவசமாக இருப்பதால் அதிகம் ஆசைப்படாமல், அதிகம் உணர்ச்சிவசப்படாமல், அதீத இன்பத்துக்கு ஏங்காமல் இருங்கள். அப்படி இருந்தால் செயற்கை நுண்ணறிவு மோசடிகளை விட மிகப்பெரிய மோசடிகள் வந்தாலும் உங்களை எதுவும் செய்ய முடியாது.

விட்டில் பூச்சிகள்தான் விளக்குகளில் சிக்குகின்றன, தேனீக்களும் எறும்புகளும் கட்டுபாட்டோடும் ஒழுங்கோடும் தங்கள் கடமைகளைச் செய்கின்றன. இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனிதர்கள் பூச்சிகளாக்கப் படுகிறார்கள் என்ற மெய்மையை உணர்ந்தால், செயற்கை நுண்ணறிவால் உண்டாக்கப்படும் அத்தனை பொய்மைகளும் அடிபட்டுப்   போகும்.

*****

No comments:

Post a Comment