28 Nov 2025

பத்து வயதில் மாரடைப்பு!

பத்து வயதில் மாரடைப்பு!

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஐம்பது வயதைக் கடந்தவர்களைக் கேட்டால் சர்க்கரை (சுகர்) இருக்கிறது என்றார்கள். அது அடுத்த சில ஐந்தாண்டுகளுக்குள் நாற்பதை எட்டி விட்டது. நாற்பதைக் கடந்தவர்கள் எல்லாம் சர்க்கரை இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். காலம் கடக்க முப்பதைக் கடந்தவர்கள் அப்படிச் சொல்ல ஆரம்பித்து இப்போது பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சர்க்கரை இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சர்க்கரை மட்டுமா என்றால், குழந்தைகளுக்கும் மாரடைப்பு என்று அதிர்ச்சியடைய வைக்கிறார்கள்.

மணமேடையில் உட்கார்ந்திருந்த 24 வயது ஆன மாரிமுத்து அண்ணன் மாரை வலிப்பதாகச் சொல்லி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து, அப்படியே போய் சேர்ந்ததை மணப்பெண்ணைப் போலக் கல்யாணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் பித்துப் பிடித்தாற்போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். யாராலும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. போய்க் கொண்டிருந்த உயிர் போய்க் கொண்டே இருந்தது.

யாருக்கும் வரும், யாருக்கு வராது? என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு மாரடைப்பு மனிதர்களைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

சர்க்கரை, மாரடைப்பு என்று பட்டியல் இத்தோடு நிற்கிறதா என்றால், கொழுப்பு, உடல்பருமன், இரத்தக் கொதிப்பு என்று பலசரக்குக் கடை ரோக்காவைப் போல அது நீண்டு கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பல்லுக்கும் பாதகம். இவர்களைக் குறி வைத்தே நகரங்களில் சர்க்கரை நோய் மருத்துவமனைகளுக்கு நிகராகப் பல் மருத்துவமனைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இப்படி ஆனது?

அப்போதெல்லாம் எப்போதாவதுதான் கேக் சாப்பிடுவோம், எப்போதாவதுதான் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், சாக்லேட், குளிர்பானங்கள், ரொட்டிகள் கூட எங்கேயாவது விழாக்களுக்குச் சென்றால், வெளியூர்களுக்குச் சென்றால்தான்.

இன்று உணவே கேக்கும், ஐஸ்கிரீமும், சாக்லேட்டும், குளிர்பானங்களாகவும் ஆகி விட்டன. உணவு அப்படி ஆகக் கூடாதா என்ன?

ஆகக் கூடாதுதான். கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், குளிர்பானங்கள், ரொட்டி அனைத்தும் மூன்றில் இரண்டு பாகம் சர்க்கரையாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில பொருட்கள் இரு மடங்கு சர்க்கரையாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றின் அதிநவீன வடிவமாக பாக்கெட் உணவுகளும் வந்து விட்டன. இவை அனைத்தும் சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாமல் செய்யப்படுவது இல்லை. இவை அத்தனையுமே உடலுக்குக் கேடு. நச்சென்று சொல்ல வேண்டுமானால் சிகரெட்டிலும், மதுவிலும் உடல் நலத்திற்குக் கேடு என்று வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது, இவற்றில் இல்லை.

நிலைமை இப்படியானால் இனிப்பே சாப்பிடக் கூடாதா என்ன?

ஏன் சாப்பிடக் கூடாது?

இனிப்புக்குத்தானே பழங்கள் இருக்கின்றன. அவற்றைப் பழங்களாகவே சாப்பிடலாம். பழச்சாறாகச் சாப்பிட வேண்டியதில்லை. பழச்சாறு என்றால் அங்கே ஏற்கனவே இனிப்பாக உள்ள பழத்துடன் சர்க்கரை வந்து சேர்ந்து கொள்ளும். பழமே இனிப்பு எனும் போதுஅதைப் பழச்சாறாக்கி இன்னும் சர்க்கரையைக் கொட்டுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

பழத்தின் இனிப்பு மட்டும் போதாதா?

கடலை உருண்டை, எள்ளுருண்டை இருக்கின்றன.

இதற்கு இதுதான் தீர்வா?

இது உணவு அடக்குமுறை போல அல்லவா இருக்கிறது!

பாரம்பரியமாகத் தலைமுறை வாழ வேண்டுமென்றால், இப்போதுள்ள தலைமுறை பாரம்பரியமான உணவு முறைகளுக்கு மாறுவதைத் தவிர வேறு வழிகள் இருக்கின்றனவா என்ன?

*****

No comments:

Post a Comment