16 Nov 2025

கனவுகள் எமனாகிப் போகும் கருமங்கள்!

கனவுகள் எமனாகிப் போகும் கருமங்கள்!

மருத்துவராக வேண்டும் என்ற கனவிலிருந்த

மருதமுத்து நீட் தேர்வில் தோற்றுப் போனதற்காக

உத்திரத்தில் தொங்கினான்

கலெக்டராவதாகச் சொல்லிக் கொண்டிருந்த

கலாவதி அக்கா குருணையைத் தின்று போய்ச் சேர்ந்தது

மச்சு வீட்டுக் கனவில் மலேசியா போன

செல்வராசு சடலமாய்த் திரும்பி வந்தான்

இதுகளுக்கெல்லாம் சாதாரண கனவுகளே

காணத் தெரியாதா என்று புலம்பியவர்களிடம்

என்ன சொல்வது

அவர்களுடைய கனவுகளைக் கண்டிருந்தால்

அவர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள்

அவர்களின் கனவுகளுக்காகப் போராடியிருப்பார்கள்

அடுத்தவர்கள் சொல்லும் கனவுகளைக் காண்பவர்கள்

இப்படித்தான் அடுத்தவர்களை எதிர்கொள்ள முடியாமல்

கண் மூடிக் கொள்கிறார்கள்

தயவு செய்து அவரவர் கனவுகளில் குறுக்கிடாதீர்கள்

அவரவர் கனவைக் காண அவரவர்களை அனுமதியுங்கள்

ஆயிரம் கனவுகள் மலர்ந்தால்

இந்தப் பூமியில் ஒற்றை உயிர் கூட போகாது

ஒற்றைக் கனவுகளில் ஓராயிரம் உயிர்கள் உதிர்ந்து போகின்றன

*****

No comments:

Post a Comment