நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
நேற்றைய
விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிக்
கொண்டு தொடர வேண்டும்.
கிராமங்களைக்
கிராமங்களாக மாற்றுவதன் மூலம் அதைச் செய்யலாம். கிராமங்களில் நகர உற்பத்தி முறையைப்
பிரதியெடுப்பது ஆபத்தானது. கிராமங்களின் அமைதியான வாழ்க்கைக்கும் அதன் சுற்றுச்சூழல்
தூய்மைக்கும் கிராமிய வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வது நலமானது. கிராம தன்னிறைவுக்கு
அது அவசியமும் ஆகும்.
கிராமங்களில்
விளையும் நெல்லை அரிசியாக மாற்றுவதை இன்னொருவர் இடையில் புகுந்து செய்து தரும்போது
அதில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. நெல் அரிசியாக
மாறும் சுழற்சியில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வேலைவாய்ப்புகளை
இன்றைய பொருளாதாரம் வியாபாரிகளுக்கும் பெரு இயந்திரங்களுக்கும் கொடுத்து விட்டது.
நெல்லிலிருந்து
வைக்கோல் தொடங்கி, உமி, தவிடு வரை அத்தனையும் பொருளாதார மதிப்புடையவை. நெல்லை மட்டும்
விற்று விட்டு அதிலிருந்து கிடைக்கும் மற்ற அனைத்து பொருளாதார லாபங்களையும் இழந்து
விட்டு வீட்டுக்கு வருபவராக மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய விவசாயிகள்.
இன்றும்
மனித உழைப்பை மட்டும் முழுமையாகப் பயன்படுத்தி, நெல்லை ஆவாட்டி, கைக்குத்தலாகத் தயார்
செய்யும் அரிசிக்கு மதிப்பு இருக்கிறது. அதைச் செய்வதற்கான மனித உழைப்பிற்கான ஆர்வம்தான்
குறைந்து போய்க் கிடக்கிறது.
இயந்திரங்களைக்
கொண்டு உற்பத்திப் பொருட்களை மாற்றும் முறைக்குப் பழகி விட்டவர்கள், உடல் உழைப்பால்
விளைபொருட்களை உணவுப் பொருட்களாக மாற்றுவதற்கான பழக்கமற்றுப் போகும் நிலையை எதிர்கொள்கிறார்கள்.
இதன் விளைவு இயந்திரங்களைக் கொண்டு மட்டுமே பொருட்களை மாற்ற முடியும் என்ற மனநிலைக்கு
அவர்கள் ஆட்படுகிறார்கள்.
ஆனால்,
இயந்திரங்களை இயக்குவது என்பது எரிபொருள் சார்ந்த ஒன்று. மின்சாரம், பெட்ரோலியம் என்று
ஏதாவது ஒன்று அதற்குத் தேவை. இதற்கான செலவினங்கள் கணிசமானவை எனும் அதே வேளையில் இவை
சுற்றுச்சூழல் மாசையும் ஏற்படுத்தக் கூடியவை. மனித உடல் உழைப்பையும் மறுதலிப்பவை.
இயந்திர
நடவு, இயந்திர அறுவடைக்குச் செய்யும் அதே செலவினத்திற்கு ஈடாக மனித உழைப்பைக் கொண்டு
செய்வதற்கான வாய்ப்புகள் விவசாயத்தில் இருக்கவே செய்கின்றன. மாடுகளைக் கொண்டு ஏர் உழும்
விவசாயிகள் முற்றிலும் அழிந்து விடவில்லை. அத்திப் பூத்தாற் போல இருக்கவே செய்கிறார்கள்.
கால்நடை
சாணத்தைக் கொண்டு எருவிட்டு பயிர் வளர்க்கும் விவசாயிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
முற்றிலும் மனித உழைப்பைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கும் குறு விவசாயிகள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு விவசாயம் லாபகரமாகவே இருக்கின்றது.
விதைநெல்லும்,
சாண எருவும், மனித உழைப்பும் கொண்டு விவசாயம் நிகழும் கிராமங்கள் இன்றும் கிராமங்களாகவே
இருக்கின்றன. அவர்கள் விளைவித்த நெல் முழுவதையும் விற்று விடுவதில்லை. தங்கள் தேவைக்குப்
போக எஞ்சும் நெல்லை மட்டுமே விற்பனை செய்கின்றனர். அவர்கள் தாங்கள் விளைவித்த நெல்லின்
மீது நேசம் கொண்டவர்களாகவும், தங்கள் உழைப்பில் உருவான பொருளின் மீது மதிப்பு கொண்டவர்களாகவும்
இருக்கிறார்கள்.
இதில்
இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. அது என்னவென்றால்,
ஒவ்வொரு
விவசாயியும் தங்கள் தேவைக்குப் போக எஞ்சிய விளைபொருளை விறப்னை செய்தால் நெல்லுக்கான
சரியான விலை என்பதும் கிடைத்து விடும். விளைவித்த மொத்த நெல்லையும் விற்று விடுவதானாலேயே
நெல் முழுவதும் வியாபாரிகள் மற்றும் அரசாங்கத்தின் கைகளுக்குச் சென்று அதன் விலையை
அரசாங்கமும் வியாபாரிகளும் நிர்ணயிக்கும் சூழல் இன்று இருக்கிறது.
இதற்காக
விவசாயிகள் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. சுலபமாக அவர்களால் செய்யக் கூடியதுதான்.
அது என்னவென்றால், குறு விவசாயி என்றால் ஐந்து மூட்டைகளும், நடுத்தர விவசாயி என்றால்
பத்து மூட்டைகளும், பெரு விவசாயி என்றால் ஐம்பதிலிருந்து நூறு மூட்டைகள் வரை சேமிப்பதற்கான
இடத்தை உருவாக்கிச் சேமித்தாலே போதும். அல்லது விவசாயிகள் இணைந்து கூட்டுறவாகவும் தங்கள்
நெல் உள்பட விளைபொருட்களைச் சேமிப்பதற்கான கிடங்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். இப்படிச்
செய்யும் பட்சத்தில் விவசாயிகள் எதிர்பார்க்கும் நெல்லுக்கான விலை கிடைத்து விடும்.
இதை
ஒரு விவசாயியோ, ஒரு சில விவசாயிகளோ செய்தால் போதாது. ஒவ்வொரு விவசாயியும் செய்ய வேண்டும்.
இதில் இன்னொரு கருத்தாக்கமும் அடங்கியிருக்கிறது. உங்கள் தேவை போக உபரியாக உள்ளதை மட்டுமே
நீங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். அத்துடன் உபரியாகக் கொண்டு
செல்வதையும் கூட்டுறவாக இணைந்து சந்தைப்படுத்த தொடங்கினால் நெல்லின் விலை எப்போதும்
விவசாயிகளின் கைகளில்தான் இருக்கும்.
*****