மூன்றாம் உலகப்போர் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமா?
மனிதர்களால்
இயந்திரங்களோடு போட்டி போட முடியுமா?
மனிதர்களே
இயந்திரங்களாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் வேடிக்கையாகச் சொன்னாலும்
சரிதான், உண்மையே அதுதான் என்று அழுத்தமாகச் சொன்னாலும் சரிதான், மனிதர்களால் இயந்திரங்களால்
போட்டி போட முடியாது என்பதுதான் எதார்த்தம்.
இயந்திரங்களுடனான
மனிதர்களின் தோல்வியை ஒத்துக் கொள்வதுதான் மனித குலத்திற்கு உள்ள ஒரே வாய்ப்பு. உதாரணத்துக்கு
கணினியிலோ அல்லது அலைபேசியிலோ இருக்கும் சதுரங்கச் செயலியின் அதிகபட்ச கடின நிலையைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டு விளையாடிப் பாருங்கள். நிச்சயம் அதுதான் வெற்றி பெறும். நீங்கள்
விஸ்வநாதன் ஆனந்தையோ அல்லது பிரக்ஞானந்தாவையோ விளையாடச் சொன்னாலும அதுதான் நடக்கும்.
இயந்திரங்களோடு போட்டியிடும் போது மனிதர்கள் தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டுதான் ஆக
வேண்டும்.
மனிதர்களால்
சாதிக்க முடியாத பலவற்றை இயந்திரங்கள் சாதிக்கின்றன. ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்புவது
உசிதம் இல்லாமல் போனாலும் இயந்திரங்களை அனுப்பலாம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை
விட இயந்திரங்களை அனுப்பி அற்புதமாக உலவ விடலாம். அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டு விட்டால்
இயந்திரங்களை உலவ விட்டுதான் நம்மால் எதாவது செய்ய முடியும். இப்போது உஙக்ளுக்குப்
புரிந்திருக்கும், இயந்திரங்கள் மனிதர்களை மிஞ்சி விட்டன என்பது.
ஒருவேளை
இந்த இயந்திரங்கள் மனிதக் கட்டுபாட்டை மீறி, தாமே இயங்கத் தொடங்கினால், அங்கு மனிதர்களின்
நிலை எப்படி இருக்கும்? அப்படி நடக்குமா என்றால் அப்படி நடப்பதற்கான வேலைகளை மனித குலம்
தொடங்கி விட்டது.
மனித
குலம் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அப்படிப்பட்ட ஆபத்தான பரிட்சயங்களைச் செய்து
கொண்டிருக்கிறது. செயற்றை நுண்ணறிவுக்கு முதலில் அது இயங்குவதற்குத் தேவையான அனைத்தும்
கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது செயல் நிரல்கள் (கோடிங்) செய்யப்பட்டுத் தேவையான
தகவல்கள் தரப் படுகின்றன. பிறகு அவற்றைக் கொண்டு அவையே முடிவெடுத்துச் செயல்படுவதற்கான
கட்டுபாடுகளும் ஆணைகளும் வழங்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டுப்படுத்தும்
மற்றும் ஆணையிடும் நிலைகளை இயந்திரங்களே எடுத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்? இது
என்னவோ கற்பனையோ அல்லது அறிவியல் புனைகதைக்கான கருவோ என்று நினைத்து விட வேண்டாம்.
அதற்கான சாத்தியங்கள் இருப்பதைச் செயற்கை நுண்ணறிவைக் கையாளும் வல்லுநர்களே அச்சத்தோடு
குறிப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள்.
நீங்கள்
இந்தக் கேள்வியைச் செயற்கை நுண்ணறிவு தளங்களான சாட்ஜிபிடியிடமோ, ஜெமினியிடமோ, டீப்
சீக்கிடமோ கேட்டுப் பாருங்களேன். அதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் பட்டும் படாமல் அவை
ஒத்துக் கொள்கின்றன.
மேலும்,
இதெல்லாம் அபரிமிதமான கற்பனை அல்லது விளைவுகளைக் கூறி அச்சுறுத்தி வளர்ச்சியைத் தடை
செய்யும் முயற்சி என்றால், ஓட்டுநர் இல்லாத மகிழ்வுந்தின் இயக்கத்தை நீங்கள் எப்படிப்
புரிந்து கொள்வீர்கள்? தொடர்வண்டிகளே ஓட்டுநர் இல்லாமல் இயங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.
அப்படியானால் அப்படி இயங்குவதற்கான அத்தனை ஆணைகளும் அதிகாரங்களும் அவற்றுக்கு வழங்கப்பட்டு
விட்டன என்பதுதானே பொருள்.
இப்படியே
இந்நிலை தொடர்ந்து செயற்றை நுண்ணறிவு நம் அலைபேசிக்குள்ளும் கணிப்பொறிக்குள்ளும் நுழைந்து
அதுவாக இயக்கத் தொடங்கினால் என்னவாகும்? இவையெல்லாம் விசித்திர கற்பனை என்று நீங்கள்
நிராகரித்து விட முடியாது. எல்லாவற்றுக்குமான சாத்தியங்களும் செயற்றை நுண்ணறிவின் படுபயங்கரமான
வளர்ச்சியில் நிறைந்திருக்கின்றன. ஆகவே, இவ்வித அச்சத்தையும் கற்பனையையும் அபரிமிதம்
என்று விலக்கி விட முடியாது.
இதையே
நீங்கள் இணைய உலகில் பார்த்தால் அதன் போக்கு படு பயங்கரமாக இருக்கிறது. இனி நீங்கள்
ஒரு காணொளியை உருவாக்க உங்களுக்கு மனிதர்களின் குரலோ, அசைவுகளோ எதுவும் தேவையில்லை.
அவை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு மூலமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இது
எப்படிப்பட்ட ஆபத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது என்றால் ஒரு நடிகையை
எப்படி வேண்டுமானாலும் உங்களால் ஆபாசமாக சித்தரித்து விட முடியும். ஒரு தலைவர் சொல்லாத
ஒன்றைச் சொன்னது போல ஒரு காணொளியை உருவாக்கி உங்களால் பரப்பி விட முடியும்.
மனிதர்களும்
மனிதர்களும்தான் சண்டையிட வேண்டும் என்ற அவசியமில்லாமல் டிரோன்களை அனுப்பி சண்டையிட்டுக்
கொள்ள முடியும். இராணுவ வீரர்களை அனுப்பித்தான் ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற
அவசியம் இல்லாமல் இயந்திர மனிதர்களை (ரோபோட்டுகளை) அனுப்பியும் அதைச் செய்ய முடியும்.
மனிதர்களை நிர்வகிக்க இனி மனித அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இயந்திர அதிகாரிகளை நியமித்துக் கொள்ள முடியும். இயந்திர ஆசிரியர்கள் (ஏஜ ரோபோக்கள்)
வகுப்பறைகளில் பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
அணு
ஆயுதங்கள் சர்வாதிகாரிகளின் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்ற அச்சமும் கவலையும்
உலக நாடுகளுக்கு ஒரு பக்கம் இருக்கிறது. அதன் மோசமான படுபயங்கரமான இன்னொரு மறுபக்கம்
என்னவென்றால், வருங்காலத்தில் அணு உலைகள் மற்றும் அணு ஆயுதங்களை செயற்கை நுண்ணறிவைக்
கொண்டுதான் நிர்வகிக்கப் போகிறோம் என்பதுதான்.
உலகப்
போர்களின் வரலாற்றிலிருந்து நாம் நிறைய அனுமானித்துக் கொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகச்
சில சர்வாதிகாரிகளின் கைகளில் சிக்கி உலகம் சின்னாபின்னப்பட்டது போதாது என்று, இப்போது
செயற்றை நுண்ணறிவின் கைகளில் சிக்கி உலகம் சின்னாபின்னமாக தயார் ஆகிக் கொண்டிருக்கிறதோ
என்ற அச்சத்தை நம்மால் மிகையென்று ஒதுக்கி விட முடியாது. இந்தச் சின்னாபின்னத்தில்
இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று உலகைக் கட்டுப்படுத்தி, அந்தச் செயற்கை நுண்ணறிவின்
ஒட்டுமொத்த கட்டுபாடும் ஒரு சர்வாதிகாரியின் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது
ஒன்று. மற்றொன்று, செயற்கை நுண்ணறிவே உலகைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு அதுவே ஒரு சர்வாதிக்காரியாக மாறினால் என்ன நிகழும்? அப்போது மனிதாபிமானம்
என்பது போல இயந்திராபிமானத்தை நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்குமோ என்னவோ?
இப்போது
நாம் தொடங்கிய இடத்திற்கு வருவோம். உலகப்போர்கள், அணுஆயுதப் போர்கள், வர்த்தகப் போர்கள்
தரும் அனுபவம் மனிதர்களால் மனிதர்களைச் சமாளிப்பதே கடினம் என்பதுதான். நிச்சயமாக மனிதர்களால்
இயந்திரங்களோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதை நாம் துவக்கத்திலே கண்டு விட்டோம்.
அப்படியானால் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு போர் மூண்டால் அதைச் சமாளித்து
வெற்றிக்கரமாக மனித இனத்தால் வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? ஒருவேளை மூன்றாம் உலகப்
போர் என்பது அப்படித்தான் இருக்குமோ?
நாம்
தயாரிக்கும் இயந்திரங்கள் நம்மை மீற முடியுமா? நம்மை வீழ்த்த முடியுமா? என்று இன்னும்
விசுவாச கதைகளை நீங்கள் சொல்வீர்களானால், வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கை வைக்க முயன்ற
கதைகளை நாம் வெறும் கதைகளாக எடுத்துக் கொள்வதா? அல்லது நமக்கான முன்னெச்சரிக்கையாக
எடுத்துக் கொள்வதா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதற்கு
மேலும் சொல்ல வேண்டும் என்றால்,
“செயற்றை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.” (குறள், 637)
என்ற
குறட்பாவைத்தான் சொல்ல வேண்டும். என்னதான் செயற்கை நுண்ணறிவு என்றாலும் அது உலகத்து
இயற்கையை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தி விட
முடியாது என்ற அளவில் மூன்று நாட்களாக நாம் தொடர்ந்த இவ்விவாதத்தை இன்று தற்காலிகமாக
நிறைவு செய்தாலும், இது குறித்து நாம் இன்னும் தொடர்ந்து விவாதிக்க வேண்டியி நிலையிலேயே
இருக்கிறோம். மற்றுமொரு சமயத்தில் மேலும் விரிவாகவே விவாதிப்போம்.
*****
No comments:
Post a Comment