கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றனவா?
நம்முடைய
நேரத்தை மிச்சப்படுத்தும் என்று சொன்ன கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம்முடைய நேரத்தை
மிக அதிகமாகவே விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
நாம்
நினைப்பது போல கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் தனிமனித வாழ்க்கையை எளிதாக்கவில்லை.
மேலும் சிக்கலாக்கிக் கொண்டே போகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் நாம் செலவழித்துக்
கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதற்குச் செலவழிப்பதற்காக நேரம் காலம் பாராமல் உழைத்துக்
கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இப்படியாக உறவுகளுக்கு, நட்புகளுக்கு,
சுற்றங்களுக்கு, பொழுதுபோக்குகளுக்கு என ஒதுக்கப்பட வேண்டிய நேரம் உறிஞ்சப்பட்டுக்
கொண்டே இருக்கிறது.
இன்னொரு
வகையில் இந்தக் கருவிகளும் தொழில்நுட்பங்களும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் மாசுகளை ஏற்படுத்திக்
கொண்டிருக்கின்றன. ஒரு வகையில் நம் நாட்டில் நன்கு தொழில்நுட்பம் கற்றவர்களும், கருவிகளை
வெகு திறமையாகக் கையாளத் தெரிந்தவர்களும் வெளிநாடுகளுக்கு ஓடி போனது நல்லதாகப் போயிற்று.
அவர்கள் அத்தனை பேரும் நம் நாட்டில் இருந்து அத்தனைக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும்
பரப்பி இருந்தால் நம் நாடு உலகின் முதன்மையான குப்பை மேடாக ஆகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
வெளிநாடுகளுக்கு ஓடிப் போன பிறகும் நம் நாடு உலகின் முதன்மையான குப்பைத்தொட்டியாக மாறிக்
கொண்டிருப்பது நம்முடைய கருவிகளின் நுகர்வு அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.
ஆக வாழ்க்கையில்
நாம் எந்த அளவுக்குக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு
ஓர் அளவு இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே விஷமாகும் போது இந்தக் கருவிகளும்
தொழில்நுட்பங்களும் எம்மாத்திரம்.
அளவறிந்து
கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் போது மட்டுமே அவை நம்முடைய நேரத்தை
மிச்சப்படுத்தும். அளவுக்கு மிஞ்சும் போது அவை நம்முடைய நேரத்தை நமக்குத் தெரியாமலேயே
உறிஞ்சிக் கொண்டிருக்கும்.
*****
No comments:
Post a Comment