15 Apr 2025

எங்கே போகும் இந்தப் AI பாதை?

எங்கே போகும் இந்தப் AI பாதை?

செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசும் போது அதன் வளர்ச்சியை நாம் ஆதரிப்பதா? அல்லது அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த உண்மைத் தெளிவாகப் புலப்படுகிறது.

கணிப்பான்கள் எனும் கால்குலேட்டர்கள் வந்த போது, அதன் வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது. இனி பெருக்கல் வாய்ப்பாடுகள் பயனற்றுப் போகப் போகின்றன, கணிதத் திறன்கள் மங்கப் போகின்றன என்கின்ற விமர்சனங்கள் இருந்த போதிலும் அதை வரவேற்பதைத் தவிர அப்போது வேறு வழியில்லை.

கணிப்பொறிகள் வந்த போதும் அதை ஏற்பது குறித்து, வங்கிகளிலும் அரசு அலுவலங்களிலும் பலவித கருத்து மாறுபாடுகள் இருந்தன. கணினி எனும் இந்தச் சாதனம் பலரின் வேலை வாய்ப்பைப் பறிக்கப் போகிறது என்ற அச்சம் நிலவியது. இன்று, அவ்வண்ணம் எதிர்த்தவர்களை எல்லாம் அழைத்துக் கருத்துக் கேட்டால் கூட, கணினி இன்றி இனி வாழவே முடியாது என்பதைத்தான் தங்களது அபிப்ராயமாகக் கூறுவார்கள்.

உண்மையில் கணினி பலரது வேலைவாய்ப்பைப் பிடுங்கியது உண்மைதான் என்றாலும், தமிழகத்திற்கு அது தகவல் தொழில்நுட்பம் என்ற துறையால் பல பொறியியல் பட்டதாரிகளுக்கு மகத்தான வேலைவாய்ப்பை வழங்கியது. அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

எந்தக் கணினி நுட்பம் பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வாய்ப்பாக இருந்ததாக நாம் கருதினோமோ, அவர்களது வேலைவாய்ப்புகளுக்குக் குழி பறிக்கும் வகையில்தான் தற்போது செயற்கை நுண்ணறிவு வந்திருக்கிறது.

அதனால் மட்டுமல்லாது வேறு பல காரணங்களாலும் எங்கே போகும் இந்தப் பாதை என்று செயற்கை நுண்ணறிவின் பாதையை அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு எத்தனை நபர்களின் வேலை வாய்ப்பைப் பறித்திருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்து வேலையிழப்புகளே சான்றுகள். இன்னும் பல தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை அது பறிக்கப் போகிறது என்பதுதான் எதார்த்தம் என்றாலும் அதன் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியுமா என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி.

நம்மால் தடுக்க முடியுமா என்ற கேள்வியை விட, நாம் நினைத்தாலும் தடுக்க முடியாத ஒரு நிலையை நோக்கி செயற்கை நுண்ணறிவு போய் விடுமோ என்ற அச்சத்தைத் தேக்கி வைக்கும் ஐயப்பாடான கேள்விதான் சரியானது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது மனிதர்களால் நினைத்தாலும் தடுக்க முடியாத ஒரு நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

செயற்றை நுண்ணறிவை எப்படி நெறிபடுத்துவது, அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கங்களுக்கும் உலகளாவிய அமைப்புகளுக்கும் சவாலான ஒன்று மட்டுமல்ல, அது இன்னும் பிடிபடாத ஒன்றும் கூட. அந்தச் சவால் என்னவென்றால் அதன் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது? அது எத்தகைய எல்லைகளை மீறப் போகிறது? என்பதெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இருப்பதுதான்.

இயந்திரங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விட்ட பின்பு, அந்த இயந்திரங்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஓரளவு நம் கற்பனைக்குப் புலப்பட்ட சவால். இந்த ஒரு சவாலை மட்டும் கருத்தில் கொண்டு இது போன்றே மற்ற சவால்களும் இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து விட முடியாது.

நமது கற்பனைக்கு ஓரளவு புலப்படும் வகையிலான ஐயப்பாடான, இயந்திரங்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்பதையே நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். அதுவும் அல்லாமல் இயந்திரங்களின் போக்கை நிர்ணயிக்கும் கட்டுப்பாடானது பயங்கரவாதிகளின் கைகளில் போய் விட்டால் என்னவாகும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பயங்கரவாதிகளின் வைரஸ் தாக்குதல்கள், எண்ம கொள்ளையர்களின் (ஹாக்கர்கள்) அத்துமீறல்கள் என்பதையும் தாண்டி செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடானது தீய சக்திகளின் கைகளுக்குப் போகும் போது ஏற்படும் விளைவுகள் எப்படி அமையும் என்பதுதான் அச்சத்திற்குரியதாகவும் அதிர்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது.

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்போருக்கு செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு வரம் போல பலர் கண்களுக்குத் தெரிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் குறைந்த கூலியில் அல்லது கூலியே கொடுக்காமல் சாதித்துக் கொள்ள முடியும் என்பது. இரண்டாவது காரணம் இந்தியர்கள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அத்தனையும் ஆக்கப்பூர்வமான தளத்தை நோக்கி இல்லாமல் அவர்களது பொழுதுபோக்கு தளத்தில் மட்டும் விட்டேத்திதனமாக வியாபித்து இருப்பது.

இந்த இரண்டு காரணங்களிலும் நாம் மறந்து விடும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அது நம்முடைய அத்தனை தனிப்பட்ட தரவுகளையும் உள்வாங்கிக் கொண்டுதான் இலவசமாக அது நமக்காகச் செயல்பட சம்மதிக்கிறது என்பதுதான். இத்தரவுகளைக் கொண்டு ஒருவர் அச்சுறுத்தப்படும் போதுதான் அவருக்கே அவரது தரவுகளின் முக்கியத்துவம் புரிய வரும் என்பதுதான் இதன் பின்னால் உள்ள பயங்கரம்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நாம் உருவாக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும், சமூக ஊடகப் பதிவுகளும்தான் அதிகமாக இருக்கிறதே தவிர, வேறெந்த ஆக்கப்பூர்வ பணிகளுக்கும் அதிகமாக நாம் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் அதற்கான ஒரு தொகையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். அதைத் தவிர்த்தே அதை நாம் கில்லாடித்தனமாகப் பயன்படுத்த நினைப்போம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப் பயன்படுத்த முனையும் போது நம்முடைய அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் பணயம் வைத்தே அதைப் பயன்படுத்த முடியும் என்பது அதன் பின்னுள்ள ஒரு பாதகத்திற்கான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு ஒரு சோறு பதம். நாம் நினைப்பதை விட எல்லாம் நம்முடைய கில்லாடித்தனத்தைத் தாண்டிய கில்லாடித்தனம் கொண்டது செயற்கை நுண்ணறிவு என்பதுதான் உண்மை. அது அப்படித்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஒரு வகையில் நம்முடைய நுகர்வை அதிகப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நம்மை அறியாமலே நாம் செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்த பழக்கப்படுத்தப்பட்டு வருகிறோம் என்பதுதான் இதன் பின்னுள்ள வருந்ததக்க உண்மை.

நாம் இத்தோடு இந்த விவாதத்தை நிறுத்தி விட முடியாது. இதன் பயங்கர ஆக்டோபஸ் கூறுகள் பலவிதமாக வியாபித்துப் பரவிக் கிடக்கின்றன. நாளையும் தொடர வேண்டியதைத் தவிர நமக்கு வேறென்ன வழியிருக்கிறது.

நாளையும் தொடர்வோம்!

*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...