உண்மைக்கும் போலிக்குமான போராட்டம் அல்லது
உங்களுக்கும் இயந்திரங்களுக்குமான போராட்டம்!
நமக்குத்
தகவல்களை வாரி வழங்கியதே இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் மாபெரும் புரட்சி எனலாம்.
இப்போது அந்தத் தகவல்களே நமக்கு பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை
நீங்கள் நம்புகிறீர்களா?
உலா
வரும் தகவல்களில் எது உண்மையானது, எது பொய்யானது என்பதைக் கண்டறிவது இந்தத் தகவல் தொழில்நுட்ப
யுகத்தில் சிரமமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய மேற்பார்வைச் சான்றுகளில் (ரெபரன்ஸ்)
இணையமும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இணையம் வழங்கும் தகவல்களில்
எத்தனை சதவீதம் நம்பகத்தன்மை உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செயற்றை
நுண்ணறிவின் பெரும் பாய்ச்சல் உண்மைக்கும் போலிக்கும் இடையே இருந்த இடைவெளியை உடைத்தெறிந்து
விட்டது. உங்களுடைய குரலையே, நீங்கள் பேசாமல், செயற்றை நுண்ணறிவைக் கொண்டு பேச வைக்க
முடியும். உங்கள் உருவத்தைப் பிரதியெடுத்துக் கொடுத்து செயற்கை நுண்ணறிவைக் கொண்டு
படப்பதிவையே நீங்கள் உருவாக்க முடியும்.
இன்றைய
செயற்றை நுண்ணறிவு உலகில் நீங்கள் அப்படிப் பேசாமலே, அப்படிப் பேசியது போன்ற ஒரு காணொளியை
உருவாக்கி விட முடியும். இதுதான் இங்கு பெரும் சிக்கலாகி விடுகிறது.
நீங்கள்
அப்படிப் பேசாத ஒரு காணொளி இணையத்தில் உலா வருமானால், அது போலியானது என்பது உங்களுக்கு
மட்டுமே தெரியும். அதைக் காணும் அத்தனை பேரும் நீங்கள்தான் அப்படிப் பேசினீர்கள் என்று
போலியை உண்மையாக எதிர்கொள்ளும் அபாயம் இருக்கிறது.
இன்று
அத்தகைய போலிகளை அடையாளம் காணும் மற்றும் கண்டறியும் வலைதளங்களும் செயலிகளும் வந்து
விட்டன என்று நீங்கள் சொன்னாலும், அவையே ஏன் போலியாகவும் இருக்கக் கூடாது என்று வினாவிற்கு
நாம் என்ன பதில் சொல்ல முடியும்?
செயற்றை
நுண்ணறிவைக் கொண்டு உண்மையை விட வெகு நேர்த்தியாகப் போலிகளை உருவாக்கிப் பரவ விட்டு
விட முடிகிறது.
இன்று
சமைப்பதில் தொடங்கி, கல்வி கற்பது பொழுதுபோக்குவதில் தொடர்ந்து, மருத்துவ அறுவை சிசிக்சை
வரை யூடியூப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. இந்தக்
காணொளிகளில் எத்தனை நம்பகத் தன்மை உடையவை என்று, இவற்றைப் பார்த்து நாம் கற்றுக் கொண்டும்
நம்பிக் கொண்டும் புழங்கிக் கொண்டும் இருக்கிறோம்?
செயற்றை
நுண்ணறிவு சூழ இருக்கும் இணைய மற்றும் செயலி உலகில் நாம் எதை நம்புவது? எதை நம்பாமல்
இருப்பது? இங்கே போலிகளும் உண்மையைப் போலவே இருக்கின்றன.
நம்மைப்
பற்றிய தகவல்கள் நமக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்
வேளையில் அலைபேசிகளின் இயந்திரக்குரல்கள் நம்முடைய அத்தனை தனிப்பட்ட ரகசியங்களையும்
புட்டுப்புட்டு வைக்கின்றன. இணையவழி பண மோசடியாளர்களுக்கு இயந்திரக்குரல்கள் அருமையான
வரப்பிரசாதமாகி விட்டன. அத்துடன் செயற்றை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கும் காட்சிகளும்
காணொளிகளும் அவர்களுக்கு ரொம்பவே வசதியாகப் போய் விட்டன.
இன்றையச்
சூழ்நிலையில் ஒருவரை உளவு பார்க்க, வேறு ஒருவரை அமர்த்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம்
தேவைப்படாத அளவுக்கு, அவரே அவரைப் பற்றிய அத்தனை ரகசியங்களையும் முகநூல், எக்ஸ், புலனம்
என்று கசிய விட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வத்தனை தகவல்களும் செயற்கை நுண்ணறிவின் வீச்சையும்
வீரியத்தையும் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டு பகுத்தாயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
விளைவு நாமே மறந்து போன நம்மைப் பற்றிய ரகசியங்கள் நமக்குத் தெரியாமல் இணைய வெளிகளில்
வெகு பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கின்றன. அவை தேவைப்படும் பொழுதுகளில் நமக்கு
எதிராகப் பிரயோகிக்கப்படவும் தயார் நிலையில் வைத்திருக்கப்படுகின்றன.
பல நேரங்களில்
உங்கள் அலைபேசிகளை, கணினிகளை நீங்கள் கையாளுவதாகத் தோன்றலாம். இன்றைய செயற்கை நுண்ணறிவு
யுகத்தில் அதுவும் ஒரு தோற்றப்பிழையோ என நினைக்கத்தக்க வகையில் உங்களை அறியாமலே உங்கள்
அலைபேசியும் கணினியும் யாரோ ஒருவரால் கூட இயக்கப்படலாம். அதை நீங்கள் அறியும் பொழுதில்
உங்களைப் பற்றிய அத்தனை தகவல்களும் வங்கி விவரங்கள் உட்பட அனைத்தும் களவாடப்பட்டிருக்கலாம்.
நீங்கள்
ஆபாசப்படங்களை விரும்பாதவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினிக்குள்
ஆபாசப் படங்களைத் திணித்து, உங்களை ஆபாசப் பிரியர் என நிறுவ வைக்க இன்றைய தகவல் தொழில்நுட்பங்களால்
முடியும்.
நீங்கள்
தேசத்தின் மீதுநேசம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் அலைபேசிகளில்
நீங்கள் தேச விரோதச செயல் புரிந்தவர் என்பதற்கான எண்ம ஆதாரங்களைச் (டிஜிட்டல் எவிடென்ஸ்)
செலுத்தி உங்களை தேச விரோதியாக மாற்றலாம்.
நிலைமை
விபரீதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. விபரீதத்தை நோக்கி முற்றிக் கொண்டும் இருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று நீங்கள் கேட்கலாம்.
இதை
எண்ம அறிவு (டிஜிட்டல் லிட்டரேஸி) மற்றும் விழிப்புணர்வு (டிஜிட்டல் அவர்னெஸ்) மூலமாகப்
போக்கலாம் என்கிறார்கள். எப்படி எழுத்தறிவும் எண்ணறிவும் அறியாமையைப் போக்குகிறதோ அது
போல எண்ம அறிவும் அது குறித்த விழிப்புணர்வும் இந்த விசயத்தில் நமக்குப் பாதுகாப்பு
தரலாம்.
அரசாங்கங்களும்
இந்த விசயத்தில் எவ்வளவோ செய்கின்றன. ஆனால் இணைய வழியாக எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களும்,
மோசடிகளும் நிகழும் என்பதெல்லாம் நிகழ்ந்து முடித்த பின்பே அறிய முடிகின்றன என்பதால்
இவற்றை அரசாங்கங்கள் கட்டுப்படுத்துவதும் நெறிபடுத்துவதும் அசாத்தியமான ஒன்றுதான்.
ஒரு
மோசடியோ, குற்றமோ அது குறித்த அத்தனையும் முழுமையாகத் தெரிந்தால்தான் அது குறித்த சட்டங்களையும்
நெறிமுறைகளையும் வகுக்க முடியும். ஆனால் இணையத் தொழில்நுட்பமும் செயற்றை நுண்ணறிவும்
அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவை வளர்ந்த பிற்பாடே அவை எப்படியெல்லாம் வளர்ந்திருக்கின்றன
என்பதை அறிய முடிகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்டு வளர்வதால் முன்கூட்டியே அதற்கான
நெறிமுறைகளையும் கட்டுபாடுகளையும் வகுப்பது என்பது சிரமமாக இருக்கிறது என்பதைப் புரிந்து
கொண்டு அதைப் பயன்படுத்துபவர்களே, அது குறித்து தற்போது எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும்
இருப்பது அவசியமாக இருக்கிறது.
இது
எப்படி இருக்கிறது என்றால், பயன்படுத்துபவர்களே அதற்குப் பொறுப்பானவர்கள் என்று வாதிடுவது
போன்றதாக இருக்கிறது. பயன்படுத்தும் உங்களுக்கே அது குறித்த அத்தனையும் முழுமையாகத்
தெரியாது எனும் போது, இந்த வாதம் எத்தனை சதவீதம் சரியானதாக இருக்க முடியும்?
ஏனென்றால்,
இந்தப் பிரச்சனை என்பது வெறுமனே எண்ம அறிவு (டிஜிட்டல் லிட்டரேஸி) மற்றும் விழிப்புணர்வால்
(டிஜிட்டல் அவர்னெஸ்) மட்டும் சமாளிக்கக் கூடிய பிரச்சனையா என்ன? அதையும் தாண்டியது
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இப்போது
இது குறித்து நீங்கள்தான் யோசிக்க வேண்டும். யோசித்து வையுங்கள். நாளையும் இது குறித்த
விவாதத்தைத் தொடர்வோம்.
*****
No comments:
Post a Comment