31 Jan 2023

மீளா வினை

மீளா வினை

எல்லாரும் ஒரு நாள் நகரத்திற்குப் போவோம் என எதிர்பார்க்கவில்லை

முதலில் அப்பா போனார்

பிறகு அப்பாவுக்கு உதவியாய் அண்ணன் போனான்

அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சமைத்துப் போட

அக்கா போனாள்

அப்பாவும் அண்ணனும் இல்லாத நேரங்களில்

அக்காவைப் பார்த்துக் கொள்ள என

அம்மா போனாள்

அம்மாவுக்கும் வேலையென்று ஆன போது

வேலைக்குச் செல்லும் அக்காவுக்குத் துணை செல்ல என

நானும் போனேன்

எல்லோரும் நகரம் வந்தடைந்த முதலாண்டு

கோயில் திருவிழா பொங்கல் தீபாவளி என்று

சிலமுறைகள் கிராமம் போய் வந்தோம்

அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கலும் தீபாவளியையும்

நகரத்தில் கொண்டாடி விட்டு

கோயில் திருவிழாவுக்கென்று ஒரு முறை மட்டும் போய் வந்தோம்

திருவிழாவுக்காக வருடத்திற்கொரு முறை போய் வருவது

சிரமமாய்ப் போக

கோயிலொன்றையும் நகரத்தில் கட்டிக் கொண்டு விட்ட பிறகு

கிராமங்களுக்குத் திரும்ப

அது இன்னொரு நகரமாய் மாறும் காலம் வர வேண்டும்

நாங்கள் இப்போது குடியேறியிருக்கும்

முன்னொரு காலத்தில் கிராமமாய் இருந்த நகரத்தைப் போல

*****

ஆருடக்காரன் சொல்லாத ரகசியம்

ஆருடக்காரன் சொல்லாத ரகசியம்

ஆருடம் கேட்க வருபவர்கள்

நேரத்தை நாளினைத் துல்லியமாகக் குறிப்பிட்டு

அந்த நேரத்தில் அந்த நாளில்

என்ன நடக்கும் என்கிறார்கள்

இது நடக்குமா நடக்காதா என்று

துல்லியமாகவும் வினவுகிறார்கள்

எதிர்காலத்தில் சென்று வந்து பார்த்தவனைப் போல

ஆருடம் சொல்பவனும் சொல்லத் தொடங்குகிறான்

அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கையில்

கேட்பவர்களும் கேட்டுக் கொண்டு சொல்கிறார்கள்

அப்படித்தான் அவர்கள் குறித்த நாளில்

நடக்கிறதா என்பது யாருக்குத் தெரியும்

அந்த நாளில் அவர்கள் இருப்பதென்னவோ

வருங்காலத்தில் இன்னொரு நாளில்

இன்னொரு நேரத்தில் என்ன நடக்குமோ

என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆருடக்காரனின் அருகில்

இன்றைய நாளில் நடப்பதெல்லாம்

ஆருடக்காரன் சொல்லாமல் விட்டதினின்று தொடங்குகிறது

என்பது ஆருடக்காரன் மட்டும் அறிந்த ரகசியம்

*****

30 Jan 2023

இரு கண்களினின்று ஆயிரம் கண்ணுடையாளாதல்


இரு கண்களினின்று ஆயிரம் கண்ணுடையாளாதல்

கொன்றழித்து விட்ட ஒரு பெண்ணுக்காகக்

கோயில் கட்டினார்கள்

கும்பிட்டார்கள்

கொன்றழித்த பெண்ணைக் குலதெய்வம் என்றார்கள்

அவளே குலம் காப்பவள் என்றார்கள்

அம்மன் என்று போற்றி துதி பாடினார்கள்

திருவிழா கொண்டாடி அம்மனைத் தணிவிப்பதாய்த்

தங்கள் கொண்டாட்டங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள்

ஒவ்வொரு வருட கொண்டாட்ட குஷியைக் காட்டி

பண வசூலைப் பெருக்கிக் கொண்டார்கள்

வசூலில் புரண்ட பணத்தைக் கண்ட பின்பு

அந்தக் கோயிலுக்காக

இரு பிரிவாகப் பிரிந்து அடித்துக் கொண்டார்கள்

குற்றுயிரும் குலையுயிருமாய்ப் பலர் கிடந்து

சிலர் மாண்டு போனார்கள்

எல்லாவற்றையும் கொன்றழித்த போது

கையறு நிலையில் ஏதும் செய்ய இயலாது

பார்த்துக் கொண்டிருந்தது போலவே

இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்

அப்போது இரு கண்ணிலிருந்து இப்போது

ஆயிரம் கண்ணுடையவளாகி விட்ட அம்மன்

*****

சாலைக்கு இடம் கொடுத்ததற்கான பரிகாரங்கள்

சாலைக்கு இடம் கொடுத்ததற்கான பரிகாரங்கள்

எங்கள் கிராமத்து நிலங்களைப் பிடுங்கித்தான்

எங்கள் கிராமத்து வீடுகளை இடித்துதான்

எங்கள் கிராமத்தில் நின்று செல்லாத

வாகனங்கள் செல்லும்

நான்கு வழி எட்டு வழிச் சாலைகளைப் போட்டார்கள்

தெரு தெருவாய் ஏன் வீடு வீடாய்

கிராமங்களில் நின்று சென்ற பேருந்துகளை எல்லாம்

இடைநில்லாப் பேருந்துகளாக்கினார்கள்

கிராமங்களில் நிறுத்தி வயிறார உண்டு சென்ற

லாரிக்காரர்களை எல்லாம் மோட்டல்களில் நிறுத்தச் செய்தார்கள்

பக்கத்துக் கிராமத்தில் பெண் கொடுத்தவர்களை

சுங்கச் சாவடியில் பணம் கட்டி விட்டுப் போய்

பார்த்து வரச் சொன்னார்கள்

ஊர் நிறுத்தத்தில் நிற்காத பேருந்துக்காக

நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று ஏறச் சொன்னார்கள்

இப்படித்தான் இப்படியேத்தான்

ஒரு சாலைக்கு இடம் கொடுத்த பாவத்திற்கு

புகையையும் தூசியையும் கக்கிச் செல்லும்

நகரத்திற்கு விரைந்து செல்லும் வாகனங்களை

அனுதினமும் வேடிக்கைப் பார்க்கும் பரிகாரத்தை

ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் செய்யச் சொல்கிறார்கள்

*****

29 Jan 2023

சாத்தியத்தின் முகங்கள்

சாத்தியத்தின் முகங்கள்

இப்போது சாத்தியமில்லாத ஒன்றிற்காக

எப்போதும் முயன்று கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள்

இப்போது சாத்தியமாகும் எதையும்

செய்யாதிருப்பாயாக என்கிறார்கள்

அத்துடன் விட்டார்களா என்ன

சாத்தியப்படுவதைப் பிடிக்க

ஜனித்த பிறவி எதற்கு என்கிறார்கள்

இந்தக் கணத்தில் இல்லாதிருப்பதை

இன்னொரு கணத்தின் எதிர்பார்ப்பில் இருப்பதை

நம்பிக்கையோடு எதிர்கொள்ளுதல் என்கிறார்கள்

மனிதப் பிறப்பாய்ப் பிறந்து விட்டவரைப் பார்த்து

மனமென்று இருப்பது

இன்னொன்றாய் மாறுவதற்காக என்கிறார்கள்

ஒவ்வொன்றாய் மாறி மாறி

கூடு விட்டு கூடு மாறியவர்களைப் பார்த்து

கடைசியில் மனிதராய் இருப்பதற்கே

இப்பிறவி என்று முடிக்கிறார்கள்

அது மட்டுமா என்ன

இந்தக் கணத்தில் இருப்பதே ஞானம் என்கிறார்கள்

அப்படித்தானே ஆரம்பத்திலிருந்து இருந்தேன்

என்பவரைப் பார்த்து

அப்படியே இருந்து அப்படியே புரிந்து கொள்ளுதல்

மனிதருக்கு ஆகாது என்கிறார்கள்

அஃது

ஞானத்தின் வகையிலும் வாராது என்கிறார்கள்

எல்லாவற்றையும் கண்டு கொண்டு

யார் ஞானவான்கள் ஆனார்கள்

அதனாலோ என்னவோ

ஞானவான்கள் அதையும் இதையும் என்று

எதையும் கண்டு கொள்வதில்லை

அப்படியே

ஞானத்தையும் கண்டு கொள்வதில்லை

அது பாட்டுக்குக் கிடக்கிறது ஓர் ஓரத்தில்

*****

சொல்ல முடியாத வார்த்தைகள்

சொல்ல முடியாத வார்த்தைகள்

நீ என்னை நல்லவன் என்று சொன்ன போது

முதன் முதலாகச் சிரித்தேன்

பிறகு நீ என்னைக் கேட்டவன் என்று சொன்ன போது

இரவு முழுவதும் விழித்திருந்துக் குடித்தேன்

மறுநாள் முழுவதும் போதை மயக்கத்தில் கிடந்து

அதற்கடுத்த நாள் கண் விழித்த போது

நீ என்னை நல்லவன் என்று சொன்ன போது

எனக்கு நான் எப்படி இருந்தேன் என்று கேட்டேன்

அப்படியே

நீ என்னைக் கெட்டவன் என்று சொன்ன போது

எனக்கு நான் எப்படி இருந்தேன் என்று கேட்டேன்

நான் எப்போதும் போல

மாறிக் கொண்டுதான் இருந்தேன்

இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்

எப்போதும் அப்படித்தான் இருக்கப் போகிறேன்

நல்லவன் என்று சொல்வதற்காக நல்லவனாகவோ

கெட்டவன் என்று சொல்வதற்காக கெட்டவனாகவோ

நீ நினைப்பது போலல்ல

நான் நினைத்தாலும் அப்படியெல்லாம் இருக்க முடியாது

எப்போது வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் இருப்பவனை

யார் சொல்லி எப்படி அடையாளப்படுத்த முடியும்

இப்போதெல்லாம்

நான் சிரிப்பதற்கான வார்த்தைகளை யாராலும் சொல்ல முடிவதில்லை

அத்துடன் குடிப்பதற்கான வார்த்தைகளையும்தான்

*****

28 Jan 2023

புதிய சங்கிலிகளும் புதிய தொடர்களும்

புதிய சங்கிலிகளும் புதிய தொடர்களும்

இதெல்லாம் புதிதா என்ன

இப்படி எவ்வளவோ நடந்திருக்கிறது

இப்போது நடக்கையில் இது புதிது

ஒவ்வொரு முறை

பழையதே நிகழ்கிறது புதிது போல

மேலும் பழையது மறந்து விடாதிருக்க

பழையதே புதிதாய் நடக்கிறது

மாறி மாறி நடப்பவை

பழையதின் சங்கிலித் தொடர் என்றாலும்

ஒவ்வொரு முறையும்

அது புதிய சங்கிலி

*****

தயவுசெய்து கேள்வி கேட்காதீர்கள்

தயவுசெய்து கேள்வி கேட்காதீர்கள்

பசிக்குச் சாப்பிடுகிறோம்

இதில் புரதச் சத்து எங்கே இருக்கிறது

மாவுச் சங்கே எங்கே இருக்கிறது

உயிர்ச்சத்துகள் இருக்குமிடமும் தெரிந்த பாடில்லை

இது எங்கே விளைந்தது

எங்கே யார் சமைத்தது எதுவும் தெரியாது

பசிக்கிறது சாப்பிடுகிறோம்

மீண்டும் பசி வந்தால் சாப்பிடுவோம்

என்று சொல்ல முடியாது

பசி வரும் நேரத்தில்

கிடைத்தால் சாப்பிடுவோம்

கிடைக்கா விட்டால்

ஒழுகும் எச்சிலில் பட்டினியை

லபக் லபக் என்று விழுங்கிக் கொள்வோம்

இடைப்பட்ட நேரம் முழுவதும்

எதையோ தேடி ஓடிக் கொண்டிருப்போம்

எங்களை நிறுத்தி

தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்

எங்களுக்கு எப்போதோ கிடைக்கும் சாப்பாட்டில்

எது இருந்து என்னவாகப் போகிறது

எது இல்லாமல் இருந்து என்னவாகப் போகிறது

ஏதோ கிடைக்கிறதா அது போதும்

*****

27 Jan 2023

புத்தர் சரியாகத்தான் சொன்னார்

புத்தர் சரியாகத்தான் சொன்னார்

ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் போது

அதீத உழைப்பைக் கோருகிறது

உயிரையும் ரத்தத்தையும் ஒரே நேரத்தில்

உறிஞ்சும் பிசாசைப் போல நேரத்தை உறிஞ்சுகிறது

முதலில் அது ஒரு வியாபார தலத்தை உருவாக்கச் சொன்னது

பிறகு அதன் விளம்பரத்தில் நடிக்கச் சொன்னது

விளம்பர நடிப்பு சினிமாவை நோக்கி நெட்டித் தள்ளியது

சினிமாவும் முடிந்த பிறகு

அரசியல் என்கிறது முதல்வர் என்கிறது

ஒவ்வொரு ஆசை நிறைவேறும் போதும்

அடுத்த ஆசைக்குத் தயாராக வேண்டியிருக்கிறது

அது ஆணிகளின் கூர் முனையில் நிற்பதைப் போல

நெருப்புச் சுடரின் மேல் கட்டப்பட்டிருப்பதைப் போல

மிகு துன்பம் மிகு துயர் கொண்டதாக இருக்கிறது

புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

*****

மகிழ்ச்சியின்மையில் தரும் தண்டனைகள்

மகிழ்ச்சியின்மையில் தரும் தண்டனைகள்

உன் மகிழ்ச்சி நிரந்தரமில்லை

உன் ஆசைகள் நிறைவேறினால்

ஒரே அடியாக மகிழ்வாய்

நிறைவேறாத உன் ஆசைகளுக்கு

என்னை அணுஅணுவாய்த் தண்டிப்பாய்

உன் தண்டனைகளின் உக்கிரம் தாளாது

உன் ஒவ்வொரு ஆசையும் நிறைவேற வேண்டும் என்று

ஆண்டவனிடம் பிரார்த்திக் கொள்கிறேன்

உன் மகிழ்ச்சியின்மை

என்னைக் கொடூரமாகத் தண்டித்துக் கொண்டே இருக்கின்றன

எனக்கென்று மகிழ்ச்சி இருக்கிறதா என்ன

நான் உன் அடிமையாகி விட்ட பிறகு

உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி

உன் மகிழ்ச்சியின்மை என் நரகம்

நீ எப்போது மகிழ்ச்சியாக இருப்பாய்

எப்போது மகிழ்ச்சியின்மையோடு இருப்பாய்

யாருக்கும் தெரியாது

உன் மகிழ்ச்சியின்மையான பொழுதுகளில்

எனக்கான தண்டனைகள் மட்டும் நிச்சயம்

*****

26 Jan 2023

அப்பாக்களைப் போலில்லாத புருஷர்கள்

அப்பாக்களைப் போலில்லாத புருஷர்கள்

அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன்

அப்பா ஏன் உன்னை அடித்தார்

உன் அப்பா என்னை எங்கே அடித்தார்

என் புருஷன் என்னை அடித்தார் என்றாள்

என் அப்பாவுக்கும்

உன் புருஷனுக்கும் என்ன வேறுபாடு என்றேன்

உனக்கொரு புருஷன் வந்து

உனக்கொரு குழந்தை பிறக்கும் போதுதான்

அது புரியும் என்றாள்

நான் அம்மாவின் முகத்தைப்

புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எல்லாம் புரிவதற்கு ஒரு காலம் வர வேண்டும் என்று

என்னைப் பார்க்கும் போதெல்லாம்

அம்மா சிரித்துக் கொண்டிருக்கிறாள்

*****

சாவின் வடிவம் முக்கோணம்

சாவின் வடிவம் முக்கோணம்

வாங்கிய பண்டங்கள்

தின்ன முடியாத போது

அபூர்வ பண்டங்களாகி விடுகின்றன

அபூர்வ பண்டங்களை

அதியமான்கள் தின்பதை விட

ஔவைப் பிராட்டிகள் தின்பதே பொருத்தமென

அப்பத்தாவுக்காகச் சூடாக

வாங்கி வந்த பண்டமது

சாவின் சமீபத்திய வடிவம்

முக்கோணமாக இருந்தது என்பதைச் சொல்கிறது

அப்பத்தா பண்டம் மண் என்ற

முக்கோண சுழற்சியில்

இறுதியில் மண்தான் தின்னப் போகிறது

அப்பத்தாவின் உடலையும்

அப்பத்தாவுக்காக

ஆசை ஆசையாக வாங்கி வந்து

மண்ணில் கிடக்கும் சமோசாவையும்

*****

25 Jan 2023

மௌனப் பெருவெளியின் சப்தம்

மௌனப் பெருவெளியின் சப்தம்

எனக்கு எவரேனும் எதிரி இருக்கிறார்களா

நண்பர்கள் எவரேனும் இருக்கிறார்களா

ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள்

பின்னொரு காலத்தில் இல்லாமல் போயிருக்கிறார்கள்

ஒரே நேரத்தில் நண்பர்களும் எதிரிகளும்

இல்லாமல் போன காலத்தில்

நண்பர்களும் எதிரிகளும் எனப் பல்கி

வனாந்திரத்தில் ஒளிந்த போதும்

காட்டில் முளைத்தெழும்

கணக்கற்ற காட்டுச் செடிகளென முளைத்தெழுந்தார்கள்

ஒருவரிடம் ஒன்றிப் பேசுவதும்

ஒருவரை வெட்டி வீழ்த்துவதும்

முடிவிலியாய் நீண்டு கொண்டே போக

முற்றிலும் செயலற்று

எதுவும் செய்ய இயலாது சோர்வுற்று

வெறுமனே கடக்கத் தொடங்கிய போது

எல்லாரும் மீண்டும் காணாமல் போனார்கள்

இப்போது நண்பனாகவும் எதிரியாகவும்

என்னோட பேசிக் கொண்டிருக்கும்

ஒருவன் இருக்கிறான்

மனசாட்சி என்ற பெயரில்

கூடிய விரையில் அவனும் காணாமல் போவான் என்ற

அசரீரியின் சப்தம் மட்டும்

மௌனப் பெருவெளியில்

எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...