மௌனப் பெருவெளியின் சப்தம்
எனக்கு எவரேனும் எதிரி இருக்கிறார்களா
நண்பர்கள் எவரேனும் இருக்கிறார்களா
ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள்
பின்னொரு காலத்தில் இல்லாமல்
போயிருக்கிறார்கள்
ஒரே நேரத்தில் நண்பர்களும்
எதிரிகளும்
இல்லாமல் போன காலத்தில்
நண்பர்களும் எதிரிகளும் எனப்
பல்கி
வனாந்திரத்தில் ஒளிந்த போதும்
காட்டில் முளைத்தெழும்
கணக்கற்ற காட்டுச் செடிகளென
முளைத்தெழுந்தார்கள்
ஒருவரிடம் ஒன்றிப் பேசுவதும்
ஒருவரை வெட்டி வீழ்த்துவதும்
முடிவிலியாய் நீண்டு கொண்டே
போக
முற்றிலும் செயலற்று
எதுவும் செய்ய இயலாது சோர்வுற்று
வெறுமனே கடக்கத் தொடங்கிய
போது
எல்லாரும் மீண்டும் காணாமல்
போனார்கள்
இப்போது நண்பனாகவும் எதிரியாகவும்
என்னோட பேசிக் கொண்டிருக்கும்
ஒருவன் இருக்கிறான்
மனசாட்சி என்ற பெயரில்
கூடிய விரையில் அவனும் காணாமல்
போவான் என்ற
அசரீரியின் சப்தம் மட்டும்
மௌனப் பெருவெளியில்
எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது
*****
No comments:
Post a Comment