சாலைக்கு இடம் கொடுத்ததற்கான பரிகாரங்கள்
எங்கள் கிராமத்து நிலங்களைப்
பிடுங்கித்தான்
எங்கள் கிராமத்து வீடுகளை
இடித்துதான்
எங்கள் கிராமத்தில் நின்று
செல்லாத
வாகனங்கள் செல்லும்
நான்கு வழி எட்டு வழிச் சாலைகளைப்
போட்டார்கள்
தெரு தெருவாய் ஏன் வீடு வீடாய்
கிராமங்களில் நின்று சென்ற
பேருந்துகளை எல்லாம்
இடைநில்லாப் பேருந்துகளாக்கினார்கள்
கிராமங்களில் நிறுத்தி வயிறார
உண்டு சென்ற
லாரிக்காரர்களை எல்லாம் மோட்டல்களில்
நிறுத்தச் செய்தார்கள்
பக்கத்துக் கிராமத்தில் பெண்
கொடுத்தவர்களை
சுங்கச் சாவடியில் பணம் கட்டி
விட்டுப் போய்
பார்த்து வரச் சொன்னார்கள்
ஊர் நிறுத்தத்தில் நிற்காத
பேருந்துக்காக
நான்கு கிலோ மீட்டர் நடந்து
சென்று ஏறச் சொன்னார்கள்
இப்படித்தான் இப்படியேத்தான்
ஒரு சாலைக்கு இடம் கொடுத்த
பாவத்திற்கு
புகையையும் தூசியையும் கக்கிச்
செல்லும்
நகரத்திற்கு விரைந்து செல்லும்
வாகனங்களை
அனுதினமும் வேடிக்கைப் பார்க்கும்
பரிகாரத்தை
ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும் செய்யச் சொல்கிறார்கள்
*****
No comments:
Post a Comment