29 Jan 2023

சாத்தியத்தின் முகங்கள்

சாத்தியத்தின் முகங்கள்

இப்போது சாத்தியமில்லாத ஒன்றிற்காக

எப்போதும் முயன்று கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள்

இப்போது சாத்தியமாகும் எதையும்

செய்யாதிருப்பாயாக என்கிறார்கள்

அத்துடன் விட்டார்களா என்ன

சாத்தியப்படுவதைப் பிடிக்க

ஜனித்த பிறவி எதற்கு என்கிறார்கள்

இந்தக் கணத்தில் இல்லாதிருப்பதை

இன்னொரு கணத்தின் எதிர்பார்ப்பில் இருப்பதை

நம்பிக்கையோடு எதிர்கொள்ளுதல் என்கிறார்கள்

மனிதப் பிறப்பாய்ப் பிறந்து விட்டவரைப் பார்த்து

மனமென்று இருப்பது

இன்னொன்றாய் மாறுவதற்காக என்கிறார்கள்

ஒவ்வொன்றாய் மாறி மாறி

கூடு விட்டு கூடு மாறியவர்களைப் பார்த்து

கடைசியில் மனிதராய் இருப்பதற்கே

இப்பிறவி என்று முடிக்கிறார்கள்

அது மட்டுமா என்ன

இந்தக் கணத்தில் இருப்பதே ஞானம் என்கிறார்கள்

அப்படித்தானே ஆரம்பத்திலிருந்து இருந்தேன்

என்பவரைப் பார்த்து

அப்படியே இருந்து அப்படியே புரிந்து கொள்ளுதல்

மனிதருக்கு ஆகாது என்கிறார்கள்

அஃது

ஞானத்தின் வகையிலும் வாராது என்கிறார்கள்

எல்லாவற்றையும் கண்டு கொண்டு

யார் ஞானவான்கள் ஆனார்கள்

அதனாலோ என்னவோ

ஞானவான்கள் அதையும் இதையும் என்று

எதையும் கண்டு கொள்வதில்லை

அப்படியே

ஞானத்தையும் கண்டு கொள்வதில்லை

அது பாட்டுக்குக் கிடக்கிறது ஓர் ஓரத்தில்

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...