30 Apr 2022

சுழலும் அன்பு

சுழலும் அன்பு

அத்தனை அன்பையும் கொட்டித்தான்

வளர்க்கப்படுகின்றன

கசாப்பு கடைகளுக்குச் செல்லும் ஆடுகள்

ஆடுகள் மட்டும் என்னவாம்

மரக்கன்றுகளை மேய்ந்து விட்டு

மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன

மரங்கள் மட்டும் என்னவாம்

வெட்டியவர் வீட்டில் முளை விட

விதைகளை விட்டுச் செல்கின்றன

விதைகள் மட்டும் என்னவாம்

ஆடுகள் மேய மேய முளை விடுகின்றன

முளை விடுவது மட்டும் என்னவாம்

குட்டிப் போடாத ஆடுகளை நேசிக்குமா என்ன

*****

ஆலோசகர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள்

ஆலோசகர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள்

            நான் பெரும்பாலும் யாருக்கும் ஆலோசனை சொல்வது கிடையாது. எனக்கு நிறைய பேர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் அக்கறையின் பேரில். அந்த அக்கறைகள் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

            “சார்! நீங்கல்லாம் இந்நேரத்துக்கு கவிதைப் புத்தகம் போட்டிருக்க வேண்டும்” என்பது முக்கியமான ஆலோசனை. நேரம் அந்த அளவுக்கு மோசமாகக் கிடக்கிறது. “சரி அப்படியானால் போடுங்கள்” என்பேன். “சார்! நான் உங்களைச் சொன்னேன்” என்பார்கள்.

            “பாரதியார் அல்லது பாரதிதாசன் கவிதைகள் பரவாயில்லையா?” என்றால், “சார்! நான் சொன்னது உங்க கவிதைகளை” என்பார்கள். “கூச்சமாக இருக்கிறது. முதலில் உங்க கவிதைகள். கூச்சம் தெளிந்த பிறகு என்னுடையதைப் பார்க்கலாம் சார்.” என்பேன்.

            “சார்! எனக்குக் கவிதைல்லாம் வராது.” என்பார். “உங்களுக்கு வராதது எனக்கு மட்டும் எப்படி சார் வரும்? கொஞ்சம் எப்படியாவது முயற்சி பண்ணி எழுதி விடுங்கள் சார். உங்க தொகுப்பு வெளிவந்தால்தான் சார் என்னுடையதை வெளியிடும் தைரியமே வரும் சார்.” என்பேன். சொன்னவர் ஒரு மாதிரியாக வெறித்துப் பார்ப்பார். இப்படி பல ஆலோசனைகள் முறிந்து போயிருக்கின்றன.

            எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்பது மற்றொரு ஆலோசனை. நான் வாய்பாட்டை எழுதிக் காட்டினேன். அதில் பதினான்காம் வாய்பாடு புரியவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள். இப்போதெல்லாம் யார் எழுதிக் கேட்டாலும் ஆன்னா, ஆவன்னாவைத் தாண்டி எழுதுவதில்லை. அதுவும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? முதியோர் கல்வியிலாவது படிப்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா என்பதை அவர்கள்தான் யோசனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

            எழுத்துங்கறது சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டும் என்பது வேறொரு ஆலோசனை. அது எப்படி முடியும் சொல்லுங்கள்? எழுத்து தோசையோ, ஆம்ப்ளேட்டோ கிடையாது. அது ஆப் பாயில் மேட்டர். உங்களுக்குத் தேவை என்றால் புரட்டிப் போட்டுக் கொள்ளலாம். எழுத்தாளர்கள் புரட்டிப் போட ஆரம்பித்தால் புல்டோசர், ஜே.சி.பி.காரர்கள் வேலை பறிபோன கோபத்தில் சண்டைக்கு வந்து விட மாட்டார்களா?          

            உங்க எழுத்து யாருக்காவது பயன்பட வேண்டும் என்பது எப்போதும் வழங்கப்படும் ஆலோசனை. இது போன்ற ஆலோசனைகளைப் புறம் தள்ள முடியாது. தினமும் நாட்காட்டியைப் பார்த்து ராசி பலன்களை ஒரு பேப்பரில் எழுதி போட்டோ பிடித்து வாட்ஸாப்பில் தெரிந்தவர்களுக்கு எல்லாம் போடுகிறேன். அது நிறையவே பயன்படுகிறது. பார்ப்பவர்கள் ஏதாவது போடுகிறார்கள். எல்லாம் குறியீடுகள்தான். அழுத முகத்தோடு கண்ணீர் ஊற்றும் முகத்தை ஒருவர் போட்டிருக்கிறார். எனது எழுத்து அதிகமாகப் பயன்பட்டிருக்கும் போல. ஆனந்த கண்ணீரை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார்.

            தினமும் எழுதுங்கள் சார் என்கிறார் ஒருவர். அது உண்டு தினமும் ஸ்ரீராம ஜெயம். பிரசுரம்தான் ஆக மாட்டேன்கிறது.

            இன்னும் நிறைய ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். எதற்கும் நீங்களும் உங்கள் ஆலோசனைகளைச் சொல்லி விடுங்கள். ஆலோசனைகள் அவசியமானவை. நான் தனிமையில் இல்லை என்பதை ஆலோசனைகளை வைத்துதான் புரிந்து கொள்கிறேன். அப்புறம் ஆலோசகர்கள் எப்போதும் என் அன்புக்குரியவர்கள். அவர்களின் அன்பிற்காக எதையும் செய்வேன். ஒரு நாளில் யாரும் படிக்க முடியாத அளவுக்கு நூறு நூற்றைம்பது கவிதைகள் உட்பட.

*****

29 Apr 2022

நீங்கள் படிப்பதற்கான 10 புத்தகங்கள்

நீங்கள் படிப்பதற்கான 10 புத்தகங்கள்

1. திருக்குறள்

            இதை நீங்கள் படித்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் உங்களைத் தமிழர் இல்லை என்று சொல்லி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. நூல் முழுக்க நிறைய அறிவுரைகள். உங்களுக்குப் பிடித்த அறிவுரையைப் பின்பற்றலாம். பிடிக்காவிட்டால் மற்றவர்களுக்குச் சொல்லலாம். இந்த நூலைப் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. விலை குறைவான பதிப்பகத்தின் பதிப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

2. பாரதியார் கவிதைகள்

            இந்த நூலையும் நீங்கள் படித்துதான் ஆக வேண்டும். பாடியபடி படிக்கலாம். படித்தபடி பாடலாம். கையடக்க பதிப்பு, மலிவு பதிப்பு, செம்பதிப்பு என்று பலவிதமான பதிப்புகள் கிடைக்கின்றன. உங்களுக்கு விருப்பமான பதிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கின்றன. போட்டியில் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

3. தமிழ் அகராதி

            இந்த நூலை நீங்கள் முழுவதுமாகப் படிக்க முடியுமா என்று சொல்லத் தெரியவில்லை. படித்தால் நல்லதுதான். நிறைய தமிழ் சொற்களை நீங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்க முடியும். இந்த நூலுக்கும் நிறைய பதிப்பகங்கள் மெனக்கெட்டிருக்கின்றன. மெனக்கெட்டுப் பார்த்து சிறந்த மற்றும் உங்களுக்குப் பிடித்த பதிப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இயர்புக்

            ஒவ்வொரு ஆண்டின் நிகழ்விற்கான புத்தகம். நீங்கள் ஓட்டப்போட்டியில் ஜெயித்தது, குலுக்கல் போட்டியில் குத்து விளக்கு வாங்கியது, உள்ளூர் கிளப்பின் மாமனிதர் விருது வாங்கியது போன்ற தகவல்கள் இல்லாவிட்டாலும் உங்களுக்குத் தேவையான புத்தகம்தான். இதற்கும் பல பதிப்பகங்கள் இருப்பதுதான் சிறப்பு. மலையாள மொழியிலிருந்து கூட வந்து தமிழ் மொழிக்கு இயர்புக் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதே இதன் சிறப்பை உணர்த்த போதுமானது என்று நினைக்கிறேன்.

5. சமையல் குறிப்புகள் 1000

            ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். எந்த வீட்டிலாவது சமைக்காமல் இருக்க முடியுமா? அப்படிச் சமைக்கும் போது தேவையான ஒன்றிரண்டு குறிப்புகளையல்ல, ஆயிரம் குறிப்புகளைத் தரும் புத்தகம். உடனடியாக ஆயிரம் குறிப்புகள் பயன்படா விட்டாலும் ஒவ்வொரு நேரமாகப் பயன்படக் கூடும். பிஸ்கட் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் பிஸ்கட்டின் மொறுமொறுப்பு குறையாது என்பது பயனுள்ள குறிப்பு. நான் போகும் வீடுகளில் எல்லாம் தேநீரோடு நமத்துப் போன பிஸ்கட்டுகளை வைத்து விருந்தோம்புகிறார்கள். அப்போதெல்லாம் இந்தப் புத்தகம் அவர்களிடம் இல்லாத குறையை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சில பதிப்பகங்கள் சமையல் குறிப்புகள் 500, சமையல் குறிப்புகள் 250, சமையல் குறிப்புகள் 50 போன்ற புத்தகங்களைக் கூட வெளியிட்டிருக்கின்றன. விலையை அனுசரித்தும் உங்கள் கையிருப்பை அனுசரித்தும் உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை உடைய குறிப்பு நூலை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

6. பிரபலமானவர்களின் விலாசங்கள்

            உங்கள் விலாசம் தவிர அனைத்து நபர்களின் விலாசங்களும் உள்ள அற்புதமான புத்தகம். நூலை வாசிக்க வாசிக்க தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களின் பெயர்களையும், தெருக்களின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம். கோடாலிகருப்பூர், வெட்டரிவாள் முதல் தெரு போன்ற ஊர் மற்றும் தெருக்களின் பெயரை அந்த நூலில் இருந்ததுதான் தெரிந்து கொண்டேன். அந்த ஊரிலும் தெருவிலும் பிரபலமானவர்கள் வசித்து வருகிறார்கள் என்ற தகவலை அதையடுத்துதான் தெரிந்து கொண்டேன். வருடா வருடம் இந்த நூலை அப்டேட் செய்கிறார்கள். புதிய பதிப்புகள் புதிய வாசகர்களுக்கும் பழைய பதிப்புகள் ஆய்வாளர்களுக்கும் பயன்படும். இது போன்ற நூலை ஒரு சில பதிப்பகங்கள் மட்டுமே வெளியிடுகின்றன. அனைத்துப் பதிப்பகங்களும் வெளியிட முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆக்ஸ்போர்ட் டிக்சனரி போல இருக்கும் இது போன்ற நூல்களின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

7. வாசலில் போட அழகு கோலங்கள்

            தமிழில் ஓவிய நூல்கள் குறைவு என்று யார் சொன்னது? நீங்கள் இந்த நூலைப் பார்க்க வேண்டும். எழுத்துகள் குறைவுதான். எட்டுப்புள்ளி, ஊடுபுள்ளி, இரண்டு புள்ளியில் நிறுத்தவும் என்று ஒரு சில இடங்களில் மட்டும்தான் எழுத்துகளைப் பார்க்க முடியும். ஓவியங்கள்தான் அதிகம். இதனால் வெகு விரைவாகப் படித்து முடித்து விடலாம். நான் ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாகப் படிக்கவில்லை என்று நினைப்பவர்கள் வாங்க வேண்டிய முதன்மையான புத்தகம். நீங்கள் இது போன்ற புத்தகங்களை ஆயிரம் என்ன இரண்டாயிரம் வரை கூட படித்து விடலாம். இது போன்ற நூல்களுக்கும் நிறைய பதிப்பகங்கள் இருப்பதால் பக்கங்களைப் புரட்டி உங்கள் மனதைக் கவரும் கோலங்கள் உள்ள புத்தகங்களாக வாங்க வேண்டும்.

8. சமகாலக் கவிதைகள் ஒரு பார்வை

            தொகுப்பு நூல் வரிசையைச் சார்ந்த புத்தகம்தான். பலரும் கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். கவிதைகள் எழுதி பிரசுரம் ஆகாதவர்கள் அவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். இதனால் அறியப்படாத பல கவிஞர்களை அறிய இந்த நூல் உங்களுக்குப் பேருதவி செய்யும். மாவட்ட வாரியாக இது போன்ற நூல்கள் அதிகம் வெளிவருவதால் உங்களுக்குப் பிடித்த மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கூட வாங்கிக் கொள்ளலாம். விலையும் குறைவுதான். விளம்பரங்கள் நிறைய இருக்கலாம். அந்த விளம்பரங்களிலும் ஒரு கவித்துவம் இருக்கவே செய்யும். அதனால் முழுமையான கவிதைப் புத்தகம் என்று சொல்லலாம் இந்தக் கட்டுரைப் புத்தகத்தை.

9. துணுக்குகள் ஒரு நூறு

            நீங்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவைக்கு கியாரண்டி தரும் புத்தகம். கைவசம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வைத்திருந்தால் பல மேடைகளைக் கலக்கலாம். என்ன ஒன்று நீங்கள் பேசுவதற்கு முன்பு பேசியவரின் கையிலும் இந்தப் புத்தகம் இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கூறியது கூறல் குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் இது போன்ற வேறு தலைப்புகளில் உள்ள உங்களுக்கான துணுக்குகள், வாலிபர்களுக்கு ஏற்ற துணுக்குகள், இல்லத்தரசிகளுக்கேற்ற துணுக்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற துணுக்குகள் போன்ற பலதரப்பட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்றாற் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கும் ஏகப்பட்ட பதிப்பக வெளியீடுகள் இருக்கின்றன. பலவற்றையும் பார்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்ல முடியாததற்காக வருந்துகிறேன். நீங்கள் என்னைக் குறிப்பிட்ட பதிப்பகத்தின் ஏஜென்ட் என்று நினைத்து விடக் கூடாது பாருங்கள்.

10. மணவாழ்க்கை கையேடு

            விழாக்களில் பரிசளிப்பதற்கான அற்புதமான புத்தகம். பத்து இருபது புத்தகங்களாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பங்சனுக்கும் நூறு, இருநூறு என்று எழுதுவதை விட அறுபது ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்வதால் நாற்பது மிச்சமாகும். விழாக்களில் புத்தகம் கொடுத்த பெருமையும் உங்களுக்கு உண்டாகும். இந்தப் புத்தகத்தில் பல ஆலோசனைக் குறிப்புகள் உள்ளன. குழந்தைத் திருமணம் செய்தவர்களுக்கும் பயன்படும் புத்தகம். கல்யாணம் செய்து கொள்ளாதவர்களுக்கும் பயன்படும் புத்தகம். புத்தகத்தின் இறுதியில் மொய் எழுதியவர்களைக் குறித்துக் கொள்ள இருபது பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தால் உங்கள் பெயர் அதில் இருக்காது. அதனால் புத்தகத்தின் முதல் பக்கத்திலே இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பது என்று எழுதி உங்கள் பெயரை எழுதி கையெழுத்து இடுங்கள்.

            இப்போதைக்கு இந்தப் பத்து புத்தகங்கள் போதும் என்று நினைக்கிறேன். இன்னும் பத்துப் புத்தகங்கள் தேவை என்று நினைத்து இருபது புத்தகங்கள் வாசிக்க நினைப்பவர்கள் காத்திருக்க வேண்டுகிறேன். உங்களால் காத்திருக்க முடியுமானால் இன்னும் பத்து புத்தகங்களின் பட்டியலை என்னால் விரைவில் கொண்டு வர முடியும்.

*****

28 Apr 2022

எங்களுக்குரியதைக் கொள்ளையடிக்காதீர்கள்

எங்களுக்குரியதைக் கொள்ளையடிக்காதீர்கள்

நல்ல தண்ணீர் இருக்காது

டாய்லெட் வசதிகள் கிடைக்காது

சுத்தம் சுகாதாரம் எதுவும் எதிர்பார்த்தல் ஆகாது

அங்கே போய்தான் ஆக வேண்டும்

புட்டி நீருக்காக பணம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

சிறுநீர் கழிக்கத் தோன்றினால் காசை எடுத்துக் கொள்ள வேண்டும்

சுத்தம் சுகாதாரம் வேண்டினால்

அறைகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்

என்ன இது இப்படியிருக்கிறது என்றால்

இந்த உலகில் எதுவும் இலவசமாய்க் கிடைக்காது என்கிறார்கள்

உண்மைதான் நாங்களும் எதையும் இலவசமாய்க் கேட்கவில்லை

வரியைக் கட்டி விட்டுத்தான் கேட்கிறோம்

எங்களுக்குரிய வசதிகளைக் கொள்ளையடிக்காதீர்கள் என்று

*****

பூமிக்கு வராத வானம்பாடிகள்

பூமிக்கு வராத வானம்பாடிகள்

கூந்தல் காற்றில் அலைவதற்கெல்லாம்

கவிதை எழுதுபவர்கள்

முந்தானை உரசலை

சொர்க்கத்தின் தீண்டலாய்ச் சிலாகிப்பவர்கள்

வெட்டிய நகத்திற்காக

உயிர் போனதாகத் துடிப்பவர்கள்

இலேசாக சிணுங்கினாலும்

இதயம் துடிப்பது நின்று விட்டதாகப் புலம்புபவர்கள்

பலாத்காரப் பொழுதுகளிலும்

வன்கொடுமை நேரங்களிலும்

காணாமல் போய் பல ஆண்டுகள் கழித்து வெளிவருகிறார்கள்

அந்தர நிலவில்

அழகிய பெண்ணுக்கு

அற்புத தேசம் செய்யவும்

ஆராதனைகள் அனுதினம் புரியவும்

ரசித்துப் பேசி ருசித்துக் கொள்ளவும்

துணை நிற்க நேரம் போதவில்லை என்று புலம்பவும்

ஆபத்து அகன்றதும் புற்றை விட்டு புறப்படும் ஜந்துவைப் போல

*****

27 Apr 2022

ஊர்வாசி

ஊர்வாசி

ஒவ்வொரு முறை

தீபாவளிக்கும் பொங்கலுக்கும்

வரும் போதெல்லாம்

ஊர் ஞாபகத்தையும் உறவுகளின் நினைவுகளையும்

சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான்

அத்தை மாமா சித்தப்பா சித்தி

பெரியப்பா பெரியம்மா மாமி மச்சான் என்று

மடியில் படுத்து மருள்கிறான்

சமயங்களில் பாச மிகுதியில்

தெரு நாய்களையும் பூனைகளையும்

ஆட்டுக்குட்டிகளையும் கட்டிப் பிடித்தபடி உறங்குகிறான்

ஊர்திருவிழா என்றால் கேட்ட பணத்தினும்

கூடுதலாய் அனுப்பிக் குதூகலிக்கிறான்

இப்படிப்பட்டவனுக்காக இன்னும் கொஞ்ச நாள்

விடுமுறைகள் நீளக் கூடாதா என்று நினைக்கையில்

சேக்காளிகளோடு கூடிக் குடித்துக் கூத்தடித்து

கண்ணில் படும் பெண்களிடம் வம்பிழுத்து

உள்ளூர் காவல் நிலையத்தில் நிறுத்தி விடுபவனை

உடனடியாக மாநகரம் நோக்கிக் கிளப்பி விட வேண்டியதாயிருக்கிறது

*****

மௌனத்தின் ரகசியங்கள்

மௌனத்தின் ரகசியங்கள்

பேரொலிச் சத்தங்களின் ஊடே

ஊமைகளாகி விடுகின்றன

மௌனத்தின் ரகசியங்கள்

மௌனமாய் வெடிக்குமோ ஊசி வெடியாயினும்

பற்ற வைப்பது ஒரு பொறியாயினும்

பல நிறங்களின் பொறி காட்டியன்றோ

வெடிக்கின்றன வான வேடிக்கைகள்

எந்த நிறம் காட்டி எப்படி வெடித்தாலும்

இறுதி நிறம் கருமையாகிறது

எவ்வளவு நேரம்

வெடித்துக் கொண்டிருக்க முடியும் என்று

இறுதியில் மௌனமாகும் பொழுதுகளில்

மௌனம் தன் ரகசியங்களைச் சொல்லும்

என்று எதிர்பார்க்கிறேன்

மௌனித்திருப்பது ரகசியம் காக்கத்தான்

என்பதைச் சொல்லி

அந்தப் பொழுதிலும் ரகசியமாய் இருக்கின்றது மௌனம்

*****

26 Apr 2022

சலிப்பதில்லை வாழ்வு

சலிப்பதில்லை வாழ்வு

தினம் தினம்

தயிர்சாதம்

ஊறுகாய் என்றால்

சலிக்காதோ என்கிறாய்

டிபன் பாக்ஸிற்குச் சலிக்காத போது

எனக்கு மட்டுமென்ன

சலிப்பு வந்து விடப் போகிறது

என்கிறேன் நான்

*****

வேதாளம் கேட்காத விடுகதைகள்

வேதாளம் கேட்காத விடுகதைகள்

ரூபாயில் விலையேறும்

பைசாவில் விலையிறங்கும்

அது என்ன என்றான் மகன்

இதென்ன புது விடுகதை என்றேன்

நானே கண்டுபிடித்தேன்

நானே கேட்கிறேன் என்றான் மகன்

உன் ஸ்கூல் பீசும் டொனேசனுமா என்றேன்

சிரித்தபடி இல்லையென்றவனிடம்

உன் பாக்கெட் மணியா என்றேன்

அதுவுமில்லை என்றவனிடம்

வீட்டு வாடகைத் தொடங்கி

உப்பு புளி மிளகாய் வெந்தயம் கடுகு

பால் பேப்பர் என்று சகலப் பொருட்களையும்

சொல்லிப் பார்த்தேன்

எதுவுமில்லை என்றவன்

உங்களுக்குத் தெரிந்தது உங்கள் அறிவுக்குத் தெரியாது என்றான்

ஒரு விடுகதையை அவிழ்ப்பதற்குள்

மறு விடுகதையா என்றேன்

இரண்டும் ஒன்று என்றவன்

இரண்டின் விடைகளும் வேறு வேறு என்றான்

விடுகதை ஒன்றாகும் போது

விடைகள் எப்படி வேறாகும் என்றேன்

ஒரு கேள்விக்குப் பல பதில்கள் போல

பல பதில்கள் என்றால் தவறான பதில்களும் என்றான்

விடுகதைக்கு விடை சொல் என்றதும்

சொன்னால் புரியாது சொல்லா விட்டால் தெரியாது என்றான்

அன்றிலிருந்து டேங்க் புல் பண்ணி

வாகனத்தில் செல்லும் போதும் யோசிக்கிறேன்

விடை மட்டும் புலப்பட்ட பாடில்லை

*****

25 Apr 2022

மழை வேண்டல்

மழை வேண்டல்

மாடியில் சட்டைகள் காய்கின்றன

தொட்டிச் செடிகள் தண்ணீருக்காக ஏங்குகின்றன

மழை வரும் போழுதில்

காய்ந்தவை நனைகின்றன

தொட்டிச் செடிகள் மழைக்கு கை அசைக்கின்றன

அலுவல் முடிந்து

மாலை வந்து மாடியைப் பார்ப்பவள்

இல்லாத நேரத்தில் பெய்த மழைக்காகச் சபிக்கிறாள்

நனைந்திருக்கும் செடிகளைப் பார்த்ததும்

நீர் வார்த்த மழைக்கு நன்று சொல்கிறாள்

நனைந்து கிடக்கும் சட்டைகளை

வெறித்தபடி பார்ப்பவள்

மழைப் பெய்கையில்

வேர்களை நனைத்துக் கொள்ளும் செடிகளைப் போல

தன்னை நனைத்துக் கொள்ளாத துணிகள் இருந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள்

*****

அன்பிற்கினிய கலவரக்காரர்களே

அன்பிற்கினிய கலவரக்காரர்களே

உங்களால் முடியுமானால்

உங்கள் வீட்டை நோக்கி கல்லெறியுங்கள்

உங்கள் வீட்டினுள் உள்ள பொருட்களைத் தூக்கி

தெருவில் வீசுங்கள்

வீசியப் பொருட்களை ஒவ்வொன்றாய் உடையுங்கள்

வீட்டிலிருப்போரை உள்ளே வைத்தோ

வெளியில் வரவழைத்தோ

கட்டைகளால் தாக்குங்கள்

சோடா பாட்டில்களை வீசித் தாக்குங்கள்

நிறைவுக் காட்சியாக பெட்ரோல் ஊற்றியோ

மண்ணெண்ணெய் ஊற்றியோ தீ வையுங்கள்

வெந்து தணியும் வீட்டை ரசியுங்கள்

இதில் யாதொன்றையும் செய்யாமல்

பொதுவிடங்களில் கல் வீசுவதையோ

பேருந்துகளுக்கு தீ வைப்பதையோ

கண்டோரைக் கட்டையால் தாக்குவதையோ

தயவு செய்து செய்யாதீர்கள்

ஒன்றைச் செய்வதற்கு முன்

உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அன்பிற்கினிய கலவரக்காரர்களே

*****

24 Apr 2022

கோள்மூட்டியின் ஆவி

கோள்மூட்டியின் ஆவி

அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும்

சண்டை என்றால்

ஆச்சியம்மாளைக் கை காட்டுவார்கள்

இரண்டு தெருவிற்கும் வெட்டு குத்து என்றாலும்

ஆச்சியம்மாளைத்தான் காரணம் காட்டுவார்கள்

கோள்மூட்டி ஆச்சியம்மாள் என்றும்

வத்திக்குச்சி ஆச்சியம்மாள் என்றும்

இல்லாத நேரங்களில் திட்டித் தீர்ப்பார்கள்

சாகும் நாளில் கூட

ஆச்சியம்மாள் பேசிய பேச்சில்

சீயான் தாத்தாவும் சிலோன் மாமாவும்

சண்டையிட்டுக் கொண்டார்கள்

ஆச்சியம்மாள் சுடுகாட்டில் எரியும் போதும்

சடலம் சரியாக எரியவில்லை என்று

வெட்டியானுக்கும் நாட்டாமைக்கும்

வாய்ச் சண்டையில் ஆரம்பித்துக் கைகலப்பில் முடிந்தது

ஆச்சியம்மாள் செத்து பத்து ஆண்டுகள் ஆகியும்

அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் சண்டை ஓயவில்லை

அவ்வபோது இரண்டு தெருக்களுக்கிடைய

வெட்டுக் குத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன

கேட்டால் ஆச்சியம்மாளின் ஆவிதான்

அலைபேசியில் புகுந்திருக்கிறது என்கிறார்கள்

*****

பேப்பரை வியத்தல்

பேப்பரை வியத்தல்

பஜ்ஜி தின்னும் முன்

பேப்பரைப் பயன்படுத்தும்

அறிவை வியப்பதென்றால்

பேப்பரையே உணவாகப் பயன்படுத்தும்

கழுதையும்தான் வியக்கத்தான் வேண்டும்

தோசையைப் பேப்பர் போலப் போடும்

மாஸ்டரையும் வியக்கத்தான் வேண்டும்

மனிதர்களை டிஷ்யூ பேப்பர் போலப் பயன்படுத்தும்

மனிதர்களையும் வியக்கத்தான் வேண்டும்

விற்பனை ஆகாது என்று தெரிந்தும்

அறுபது பக்கம் எண்பது பக்கத்தில்

கவிதைப் புத்தகம் போடும்

கவியையும் வியக்கத்தான் வேண்டும்

வியக்கத்தக்க அனைத்தும் பேப்பரில் எழுதப்படும்

பேப்பரைப் பயன்படுத்தும் அனைவரும் வியக்கப்படுவர்

பணத்தைப் பாருங்கள்

பேப்பரின் மதிப்பு சொல்லாமல் விளங்கும்

பணத்தில் நிறைய பேப்பர் வைத்திருப்பவரை

வியக்காமல் பார்ப்பதெப்படி

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...